Ads 468x60px

Social Icons

Saturday 6 October 2012

ஒன்றில் எல்லாமும்


ஒன்றில் எல்லாமும்


உள்ளிருந்து
ஒரு சிற்பி செதுக்குகிறான்
உடல்
வெவ்வேறு வடிவம்கொள்கிறது

வடிவம் கண்ட புத்துடல்
தனித்தப் பார்வையில்
மீண்டும் உலகைப் பார்க்கிறது

நானும்
நான் அல்லாத பிறவும்
என்பதில்
'நான்'
மாறிக்கொண்டே இருக்கிறது

ஒவ்வொரு கணமும் 'நான்'
புதிதாகப் பிறப்பது
அவன் சிருஷ்டியின் விந்தை

கடலின் ஆழம் காண்பதும்
எல்லையில்லா வெளியின்
விளிம்பில் நின்று
கண்படாத மரத்தின்
கனிகளைப் பறித்து உண்பதும்
செதுக்கியச் சிற்பியின் கருணை

ஒரு உடலுக்குள்
ஓராயிரம் உடல்களை
உயிர்கண்டு அலையவிடுகிறான்

என்னை
என்னிலிருந்து விடுவித்து
வேறுவேறு உடல் தந்து
மகிழ்விக்கிறான்

புதுப்பித்துப் புதுப்பித்து
புத்துடல்மீது
பரவசம் தெளிக்கிறான்

வண்ணத்துப் பூச்சியாக
உருமாற்றி
பூக்களின் உலகில்கொண்டு
எறிகிறான்

மது உண்டு மயங்கிக்
கிடக்கையில்
மலை உச்சியில்கொண்டு
நிறுத்துவான்

தூரத்துப் பசுமையில் மனம்
மோகித்து அலைகையில்
காற்றின் உடல் தந்து
சருகு மொழியில் சிரிப்பான்

சிறு மணல் துணுக்கில்
நட்சத்திர ஒளியில்
காட்டின் அடர்வெளியில்
கடலின் காலடிப் பரப்பில்
புள்ளின் ஒலியில்
சூரியக் கதிரில்
இருளின் இருட்டில்
தோய்ந்த மன உடல் ஈரம்
காயாது எல்லாப் பொழுதும்!

No comments:

Post a Comment