Ads 468x60px

Social Icons

Saturday 13 October 2012

'கவி' :


'கவி' :  மேலாண்மை பொன்னுசாமி  தீக்கதிர் இதழில்


புதுக்கவிதையில் ஏன் தேக்கம்? என்ற கேள்வியை எழுப்பிய கவிஞர் பாலா தனது முன்னுரையில் 'புதுக்கவிதையில் புதுமைகள் - சாதனைகள் செய்யாமலிருப்பதே' என்று பதிலும் தருகிறார்.

சாதனைகள் செய்கிற முதல் முயற்சியை துணிச்சலோடு துவங்கியிருக்கிறார் கவிஞர் க.வை.பழனிசாமி.

'கவி' என்ற தலைப்பில் ஒரு கவிதை நூல்; பல்வேறு கவிதைகள் அடங்கியதல்ல. இது சமூகம் தழுவிய, பிரபஞ்சம் தழுவிய ஒரு சமூக மனிதனின் வாழ்க்கையை கதையாகச் சொல்கிற ஒரே கவிதையைக் கொண்ட நூல்.

தேவையின் உந்துதல்
பாலைவனத்தையும்
தோண்டிப்பார்க்கும்.
சூரியனையும் விழுங்கும்
சூழல்கள் அறிந்தும்
எழுதுகோல் உறங்குமா?

என்ற பிரகடனத்தோடு பேனாவைப் பிடித்த இந்தக் கவிஞர்,

'புதிய வித்து பூமியில் விழும். மனித கீதம் மண்ணில் எழும்' என்ற வைரம் பாய்ந்த - பரபரப்படையா - அமைதியான நம்பிக்கையோடு, கவிதையைப் படைக்கத் துவங்குகிறார்.

ஒரு 'கவி'யின் கதை இது.  அவன் பெயர் என்ன? எங்கு பிறந்தான்? எந்த மாவட்டம்? என்ன ஜாதி? என்ற கேள்விக்கெல்லாம் ஒரே பதில்!

மனிதனுக்கு
மனிதன் என்ற பெயர் மட்டும்
மண்ணில் இருக்கும்.
பூமியைப் பிளக்கும் பிரிவினைச் சொற்கள்
அகராதியிலிருந்து அகற்றப்படும்.

கடலோரக் குப்பத்தில் காலத்தை ஓட்டுகிற இந்தக் கவியின் கவிதையையும் கவிதையின் சத்திய உஷ்ணத்தையும் நேசித்து ஒரு இளம்பெண் எதிர்படுகிறார்.

''அவளின் பெருவிரல் நுனியில் பெரிய புராணம் புதைந்து கிடந்தது. அடிதொடங்கி முடிவரை அனைத்து மொழி நூல்களும் அடங்கிக் கிடந்தன'' கவிதைகளை கருத்துக்களை விவாதித்தனர்.

''அவளின் வரவு ஏழ்மையின் முன்பு பொங்கி வைத்த சோறு. மூட்டை தூக்கும் மனித முதுகில் பூ வருடல். வர்க்க பேதங்களில் வாடிய பயிர்களிடை பெய்த மார்க்சீய மழை''

ஆயினும் அவளை எச்சரிக்கிறான்: ''என்னோடு நீ நடந்தால் பாலை வழிதான் உனதாகும்.''

''அவளோ முத்தெடுக்க வேண்டுமென்றால் மூழ்கத்தானே வேண்டுமென்றாள்.''

அவளோடு வாதாடித் தோல்வியுற்றான்.

''கவிஞன் அங்கு தோல்வியின் சுகம் தேடினான். அன்றுதான் காதல்மீதே காதல் கொண்டான்''

''காற்று கால்வைக்க முடியாத'' ''வானத்தின் முகம் பார்க்க முடியாத'' புறாக்கூண்டே வீடாகக் கிடைத்தாலும்.... காதலின் தாம்பத்திய அன்பின் வலிமையால் தாங்கி வாழ்கிறர்கள். அந்த வீடு வாழத் தகுதியற்றதாகிப் போனதால்... புறம்போக்கில் குடிசைபோட்டு வாழ்கிற சேரியில், இந்தக் கவியும் ஒரு கூடுகட்டிக் கொள்கிறான்.

அந்தப் புறம்போக்கு நிலத்தை ஒரு சாராய ஆலை அதிபர் கைப்பற்றிக்கொண்டு சேரியை காலி செய்யச் சொல்கிறார்.

பயந்து கதறுகிற மக்களுக்கு தைரியமூட்டி அணி சேர்த்து தலைமையேற்றுப் போராடுகிறான்.

குடிசைகள் தீ வைக்கப்பட.... அவன் மனைவி பிரசவ வேதனையில் நெளிய... ஜனங்களைத் திரட்டி சாலை மறியல் நடத்துகிறான் கவி.
பேச்சு வார்த்தைக்கு அழைக்கிற அதிகாரிகள், கவியை வஞ்சகமாய்க் கொன்று விடுகின்றனர்.

அவன் இறந்தாலும், அவன் குழுந்தை பிறக்கிறது. போராட்டம் தொடர்கிறது.

''நாளும் பிறக்கும் சூரியன்களை நாய்களா விழுங்கும்?'' என நம்பிக்கை மிகுந்த வரிகளோடு முடிகிறது இந்தக் காவிய நூல்.

இந்தக் கவிதை நூல்... சத்தியத்தை தீபமாக ஏற்றுகிறது.

அந்தத் தீப வெளிச்சத்தில் அரசின் முகமும், அதிகாரிகளின் குரூரமும், சமுதாயத்தின் முரணும், மத இன மோசடிகளும் சுத்தமாக அம்பலமாகின்றன.

இப்படியோர் உண்மை மிகுந்த ஒரு மனிதனின் வாழ்வைக் கருவாகக் கொண்ட சமூக நாவலையே கவிதை நூலாக காவியத் தன்மை நிறைந்த நூலாக படைத்துள்ளார் கவிஞர் க.வை.பழனிசாமி.

எந்தக் கவிஞரின் சாயலும் இல்லாமல்.... சொந்த முகத்தோடு இந்தக் கவிஞர் வெளி வந்திருக்கிறார். எந்தக் கவிஞரும் துணியாத ஒரு காரியத்தில் காவிய நூல் படைக்கிற செயலில் இவர் துணிந்து முனைந்து வெற்றியும் கண்டிருக்கிறோம்.

எந்த இடத்திலும் கவித்துவம் குறையாமல்... பூடகத் தன்மை படிந்து விடாமலிருப்பதில் கவிஞர் எச்சரிக்கையாய் இருந்திருக்கிறார் என்பது பாராட்டத்தக்கது.

No comments:

Post a Comment