Ads 468x60px

Social Icons

Tuesday 9 October 2012

அறியாவியல் பற்றி ஒரு அற்புத எழுத்து

அறியாவியல் பற்றி ஒரு அற்புத எழுத்து

''மீண்டும் ஆதியாகி'' நாவல் மீது விமர்சகர், சாகித்ய அகாதமியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாலா 

 நம் வாழ்க்கை அதிசயங்கள் நிறைந்தது. அவலங்கள் சூழ்ந்தது. தீராத கனவுகளும் மடியாத ஆசைகளும் வருத்தும் நாட்களும் கொண்டது. அறிவின் கொட்டடியில் வதைபடும் காலங்களும் அனுபவச் சிலிர்ப்பின் கணங்களும் மனிதர்களுக்கு வாய்த்திருக்கின்றன. உலகை, வாழ்க்கையை, உணர்வுகளை அறிவால் வசப்படுத்த இயன்றிருக்கிறது. இதுவே பேச்சை, பகிர்வை இலக்கியத்தை நமக்குத் தந்துள்ளது. (தமிழில் பாருங்கள் 'மொழி' என்றாலே 'பேச்சு' என்று பொருள் வந்து விடுகிறது.

 அறிவுப் பகிர்வும் அனுபவப் பகிர்வும் நம் நாகரிகத்தின் சின்னங்கள். அறிவை நாம் பரப்பி வைக்கலாம், எவ்வளவு அகலமாகவும். அனுபவத்தை நாம் இறக்கி வைக்கலாம், எவ்வளவு ஆழமாகவும். அனுபவிக்கவும் அறிந்திடவும் அவற்றை பகிர்ந்திடவும் நாம் விரும்புகிறபோது நாம் படப்பாளிகளாகவும் மெய்ஞானிகளாகவும் மாறி விடுகிறோம். ஏனெனில் புலன்கள் பொது என்றாலும் அனுபவம் மனிதர்க்கு வேறு வேறு. நீள அகலங்கள் வேறு. மூளை பொது என்றாலும் அறிவுப் புலப்பரப்பு வேறு வேறு. படைப்பு மனோபாவமும் அறிவு முனைப்பும் கொண்ட மனிதர்கள் இவ்வுலகினை முற்றாக அறிந்திட விழைகிறார்கள். வான் எல்லை போல் அவர்தம் கேள்விகளின் பரப்பு எல்லையற்றதாகி விடுகிறது. 

 அறிந்தது பற்றிய மனித அறிவு, அறியப்படாதது பற்றி தீராமல் சர்ச்சை செய்து கொண்டுள்ளது. இதன் விளைவாக உயர்ந்த படைப்பு மனோபாவம் கொண்டவர்கள், அறியப்படாத உலகு / அறிவு பற்றிப் பேசுகிறார்கள். எதிரில் உள்ளதும் அறியப்பட்டதும் எதார்த்தம் என்பதால் 'அறியா இயல்' பற்றிப் பேசுகிறார்கள். 

 புரணங்கள், அவை உருவாக்கியுள்ள தொன்மங்கள், அவற்றை தீராத ஆவலுடன் எடுத்துண்ணும் பாமர வாசக மனங்கள் எல்லாம் அறியப்படாத உலகு பற்றிய கற்பிதங்களின் கவர்ச்சியை நமக்கு அறிவித்து நிற்கின்றன. கடவுள்கள், தெய்வங்கள், அரக்கர்கள், பிரபஞ்சங்கள் திக்குகள், திசைகள், காலங்கள் என்று எத்தனை கவர்ச்சி நிறைந்ததாக 'அறியா இயல்' அழகு காட்டுகின்றது.

 பேரளவு கொள்கை முனைப்பும், புனைவிச் சிறப்பும் கொண்ட படைப்பாளிகள் தங்கள் பங்கிற்கு 'அறியா இயல்' பற்றி அறிவித்து வருகிறார்கள். சமயங்கள் ஒரு பக்கம் 'பிரபஞ்ச அறிவை' முன்வைத்தன. அறிவியல் அறிஞர்கள் இன்னொரு பக்கம் இன்னொரு விதமான 'பிரபஞ்ச அறிவை' அடையாளம் காட்டினர். 'கடவுள் விண்ணில் இருக்கிறார்' 'நரகம் கீழ் உலகில் கிடக்கிறது' 'இருள் தீது, ஒளி நன்று' 'விதி வாழ்க்கையை கட்டி வைத்துள்ளது' 'மனிதரை மீறிய ஆற்றல்களால் மனித வாழ்க்கை வசப்படுத்தப்பட்டுள்ளது' இப்படியெல்லாம் கவர்ச்சி நிறைந்த கூற்றுகளால் 'அறியா இயல்' அறியப்பட்டுவிட்டது போல பாவனை செய்யப்பட்டும் கிடக்கிறது. 

 நோவா விடுத்த நாவாய், அதில் இனத்திற்கு ஒரு உயிர், உயிர்ப்பெருக்கத்திற்கு வழி... என்று ஒரு புனைவு. கடவுளின் உலகிலிருந்து ஒரு தங்கச் சங்கிலியில் தொங்கும் தோரணம் சுவர்க்கம். அதில் எழில் இறைத்த ஏடன் தோட்டம். அங்கு சுயம்புவான அழகுகளோடு ஆதாமும் ஏவாளும் என்று இன்னொரு புனைவு. ஓயாத பிரம்மாவின் கரங்களில் வார்ப்பு பெறும் உயிர்கள். அவற்றை காத்திட கையில் சுழலும் சக்கிரத்துடன் ஒரு கடவுள். அவற்றுக்கு ஓய்வு தர சிவனின் அழித்துக் காக்கும் பேரருள்... இப்படி ஒரு புனைவு. இவை யாவும் 'அறியாவியல்' என்னும் பரப்பில் நகரும் மனத்தின் காந்த ஊசிகள் விரித்திடும் அலைவு அதிசயங்கள். 

 சேலம் தந்த சிறப்புக் கவிஞரும் சிறுகதைக் கலைஞருமான க.வை.பழனிசாமி 'அறியாவியல்' பரப்பில் ஒரு அறிபயணம் நிகழ்த்தும் முயற்சியே 'மீண்டும் ஆதியாகி' என்ற இந்நூல். அதாவது, அறியாவியல் புதினம்(A tale of the Unknown). இதுவரை அறிந்த புதினங்களிலிருந்து இது வேறு வகை என்பதால் இதனைக் 'கடவுப் புதினம்' ( Trans - Novel )  என்றும் அழைக்கிறார். இதன் கருத்தியலில் பெண்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதாக இருப்பதால் இதனை 'பென்ணிய நாவல்' என்றும் குறிக்கிறார். 

 அறியாவியல் என்ற கதைப் பரப்புக்கு ஏற்றவாறு அசாதாரணமான நடையில் மொழியப்படுகிறது இந்த புதினம். ( பார்க்க.... சி. மணி இந்த நாவலில் வரும் மொழி நடை பற்றி எழுதியுள்ளதை ) எளிமையற்ற உரைகள், இடையில் மின்னல் ஏற்றிய உணர்ச்சிப் பெருக்கு, உரை நடையைத் தாண்டிய கவிதை உலகு, மெய்ஞான எழுத்தின் சொற்செல்வம், எல்லாம் சேர்ந்து இறுகிவிட்ட மொழி நடை. கதைஞராகிவிட்ட ஒரு கவிஞர் எழுதிய புதினம் இது என்று அறிவித்து நிற்கும் செதுக்கிச் சீர் செய்த நடை.

 வேறுவேறு எழுத்து வகைகளில் அச்சிடப்பட்டு ஏற்ற இறக்கங்களினை எழுத்தில் காட்டும் அச்சமைப்பு. ஓர் அந்தகாரப் பிரபஞ்ச ஒளியை இருளும் ஒளியும் நிறைத்துக் காட்டும் வெள்ளையும் கருப்புமான முகப்பு அட்டை. அதில் ஒளிக்கண் உருட்டும் பழனிசாமி என்ற பெயர்ப் பதிப்பு. அறியாவியலின் வளம் சுட்டும் வளமானப் பதிப்பு.

 மொத்தத்தில் பழனிசாமியின் 'மீண்டும் ஆதியாகி' பலவிதங்களில் தமிழில் ஒரு ஆதிப்படைப்பு. 

 நூலினை வாசித்துப் பாருங்கள். ஒரு பக்கம் அறிந்த நம் உலகு பற்றி பழனிசாமி வைக்கும் அனுபவ உரைகள். பொது வரிகள். இன்னொரு பக்கம் அறியா உலகு பற்றி பழனிசாமி புனையும் கற்பனை உரைகள். செதுக்கும் சிற்ப வரிகள். விரிக்கும் ஓவிய உரைகள். காலம் இன்று, நேற்று, நாளை என்று முக்காலமாக இந்தப் புதினத்தில் ஓடுகிறது. ஒரு பின் திரும்பும் காலமயக்கம் இதில் வருகிறது. 

 கதை மாந்தர்கள் சுவையானவர்கள். முதலில் முகமற்ற சதுரப்படுத்தப்பட்ட இக்கால ஆண்கள் பெண்கள். அடுத்து வருபவர்கள் நேற்றிலும் நாளையிலும் நிற்கும் மனிதர்கள். இவர்கள் இருவரும் ஒரு காலமயக்குப் போல சந்திக்கும்போது பிறக்கும் ஆதிபுத்திரி. ''உயிர் உறைந்து நின்ற கதைசொல்லியை நித்ய அன்பு ஏங்கி உயிர் துடித்த தூய பெண்ணின் அவஸ்தை தீண்ட மானுடம் பார்த்திராத வண்ணங்களில் ஆதிபுத்திரியின் கதை'' என்று கதைத் திறப்பு பேசுகிறது.

 மனிதம் பார்த்துக் கசிகிறார் பழனிசாமி.  சுயநலப் பெருங்கடலில் விழுந்து மீட்கப்பட முடியாத ஆழத்தில் மனிதம் கிடக்கிறதாம். உயிர் பறிக்கும் உணவு வேட்கையில் சிதைந்து கிடக்கிறதாம் மனிதம். உயிர்களிடை அழிவும் வாழ்வுமாக கிடக்கிறதாம் மனிதம். மனிதக் கடவுள் கைபிசைந்து நிற்க, மனிதம் தனித்து சுயவாழ்தல் வெறியில் தீய்ந்து கிடக்கிறதாம். இதனை மனிதத்திற்கு உணர்த்த வருகிறது ஆதி. அதாவது மறைபொருள். அதாவது மெய்ஞான இருள். மனித இறைக்கு மேலான ஆதி. மனிதர் அறிய முடியாத ஆதி... தானே கதைசொல்லியாகி வாசகனை அழைத்துச் செல்கிறது. 

 ஆதியின் முதல் அறிவு ஒரு சொல்லாக வருகிறது. இது தந்த முதற்பொருளின் வெளியீடே ஆதிவயல். மூலப் படைப்புகள் அங்கு தோன்றுகின்றன. ஆதிவயலெங்கும் உயிர்களின் முட்டல். வயல்வெளியில் ஒரு வைரக்குன்று. அதன் கருவரை வெடித்து முதல் மனித உயிர் நெடிய ஆகிருதியுடன். ஆதி விரும்பிய தூய வடிவில். 

 மனிதஆதி என்பது ஒரு பால் மானுடம். அது தன்னையே தான் கிழிக்க ஆதி வயலின் வேறு வேறு திசைகளில் பெண்ஆதியும் ஆண்ஆதியும் விழுகின்றனர். மெய்ஞான மறைபொருள் பெண்ஆதிக்குப் பரிவு செய்கிறது. 'தன் முதற் சொல்லை பெண் ஆதியின் உயிரில் உறைய வைத்தது.... பெண்மையே தான் எனக் காட்டியது'

 பகுதியாகிவிட்ட மனித ஆதிகள் தங்கள் மறுபாதி தேடி ஆதிவயல் பரப்பில் அலைகிறார்கள். முடிவிலாப் பிரபஞ்சங்களை படைக்கவல்ல படைப்பு மூலங்கள், ஆதிவடிவங்களில், வசீகர எழிலில் ஆதிவயலில். ஆதிவயலின் அனுபவம் சுமக்கிறார்கள். இருவரின் சந்திப்பில் முதற்காதல் பிறக்கிறது! உண்மையின் அழகாய் அதிர்ந்த ஆதிஆணுக்கும் ஆதி பெண்ணுக்கும், அன்று தோன்றிய காதலே உலகின் முதல் காதல் அனுபவமாகும். 

 பெண்ஆதியின் உள்உறைந்திருக்கும் 'ஆதிவார்த்தை' வினைபட, ஆதிவயல் கரைந்து பிரபஞ்சம் தோன்றுகிறது. மனிதஆதியின் இருபாதிகள் ஆதிவடிவம் துறக்க, மனிதவெளி விரிகிறது. இருவரையும் நிகழ்காலத்தில் தேடி கதைசொல்லி கதை நகர்த்துகிறது. நிகழ்காலத்து மனித வாழ்க்கை ஆதியின், அதாவது கதைசொல்லியின் வார்த்தைகளில். பாவம் எதையும் கதையாக்கிட முடியாமல் திணறுகிறது கதைசொல்லி. 

 ''நீள வான் விரிதலும், நட்சத்திர தெறிப்புகளும், பசிய தாவர அடர்த்தியும், நீண்ட அலகுகளில் நிலவைக் கிழித்துப் போகும் பறவைகளும், மண்ணில் பதித்து விரையும் அரவங்களும் மனதை அழகில் தீண்டிப்போக, மனிதர்கள்... பிடிக்காத புத்தகத்தின் எழுத்துக்களாக வெறுமையாகக் கிடந்தார்கள்'' 

 கதைசொல்லியின் பக்கங்களில் நிகழ்காலப் பெண்ணினம் சித்தரிக்கபடுகிறது. உணர்வுச் சொற்கள், உரையாடல்கள், ஒழுக்கப்பதிவுகள் எல்லாவற்றிலும் ஆதி அவமதிக்கப்படுவதாக நிகழ்கால மனிதம் பெண்ணைக் கட்டி வைத்துள்ளது. ஆதிவயலின் பெண்ஆதி ஒரு மரமாக எவராலும் வீழ்த்த இயலா விருட்சமாக நின்றிருக்க, காத்திருக்க, வெட்டுண்டிருக்க, நினைத்திருக்க, காலவெளி விரிகிறது.

 ஒரு காத்திருப்பின் நிறைவாக ஆண்ஆதி காற்றைக் கிழித்து புரவியாக வருகிறது. ஒரு இணைவினை முன்னிருத்தி ஆதி அதிர்கிறது. நிகழ்நாளில் கூடலில் பெண் அவமதிப்பும் புறக்கணிப்பும் கதைசொல்லியின் பார்வையில். மரமும் புரவியும் இணைய, இருப்பும் விரைவும் ஒன்றாக ஆண்ஆதி பெண்ஆதியின் சேர்க்கையில் கதைசொல்லி தன் ஆதிமகள் முகம் தெரிய பூமியில் தள்ளப்படுகிறாள். 

 காதல் தீயில் காலம் கண்ணாடி ஆறாய் உருகி வழிய அதில் காட்சிச் சித்திரங்கள் நகர, வாழ்வின் உள்ளும் புறமும் அறிகிறாள் ஆதிபுத்திரி. ஆதிமூலமாய் நடக்கிறாள் ஆதிபுத்திரி. மனிதர் உதிர்த்த நெறிகள், விதிகள் அவள் காலடியில். அவள் விழிகளிலிருந்து ஆதிமெய் இருள் இறங்குகிறது. மெய் இருள் பட்டு மனிதஇறை ஓடி ஒளிகிறது. மாற்றங்கள் மனிதர் உலகில். உயிர்கள் மறை இருளில். நித்ய நீரில் மூழ்கிய உயிர்கள். பூமிவெளி உயிர்கள் தூய்மை பெறுகின்றன.

 பிறிதொரு பரப்பில் ஆதிபுத்திரி இறங்க, தீவினை புரிந்த மனித இனம் கவடற மறைய, மானுட இறை மறைய, மீண்டும் ஆதிவயலில் ஆண்ஆதியும் பெண்ஆதியும் காதல் வெளியில், மீண்டும் ஆதியாகும் முயற்சியில். 

காலவெளி கணக்கில்,
பிரபஞ்ச இருப்பில்,
மறைபொருள் உண்மையில்
பொருளற்றுக்கிடக்கும் மானுடம்
நிகழ்கால இருப்பில்,
பெருமிதம் காட்டி பூமிவெளி திரியும்

என்று கதையாடலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறது கதைசொல்லி. அதாவது, தன்னுள் பெண் ஆதியை உணர்ந்த கதைசொல்லி, அதாவது க.வை.பழனிசாமி. அதாவது பெண்மை மேன்மை உணர்ந்த படைப்பாளி பழனிசாமி.

 இந்த என் சொல்லாடலில் நிகழ்கால வாழ்க்கையில் மனிதம் பற்றி பொதுவாகவும் பெண் உரிமை பற்றி சிறப்பாகவும் பழனிசாமி பேசியுள்ள பகுதிகள் தவிர்த்து, பிற கதையாடலை முன் வைத்துளேன் நான். 

 நான் மறைத்தது கருத்து மையம். விரித்தது புனைகதைவெளி.

 முன்னது அவரின் கருத்து வெளி. பின்னதே அவரின் கலைவெளி

 பின்னதே இந்தப் புதினத்திற்கு வனப்பும் ஈர்ப்பும் தருவது என்பதால், அதுபற்றி விரித்துரைத்துள்ளேன். நுட்ப திட்பங்கள் மேலும் காண நாவலுக்குள் செல்லுங்கள். 

 அண்மையில் கனடா நாட்டு ஒரு பெண் எழுத்தாளர் பெத் பிரான்ட்(Beth Brant)  என்பவர் எழுதிய சிறுகதை தொகுப்பு ஒன்றினை வாசித்தேன். 1991-ல் வெளிவந்த நூல் அது. அதில் 'இதுதான் வரலாறு' (This is History) என்று ஒரு கதை. பழனிச்சாமியின் நூலினை வாசித்தபோது பெத் பிரான்ட் கதை நினைவிற்கு வருகிறது. அதில் மனிதர் வரலாறு வருகிறது.

 ஆதியில் பூமி தோன்றும் முன் மனிதர்கள் வருமுன் ஆகாய உலகம்தான் இருந்தது. ஆகாய மக்கள்தாம் இருந்தனர். ஆகாய மங்கை ஒருத்தி தீராத அறிவு வேட்கை கொண்டவள். இந்த மேகங்கள் நம் உலகை தாங்கி நிற்பதாகக் கருதினாள். இவற்றுக்கு கீழ் என்ன உள்ளது என்று அறிய அவளுக்கு ஆவல். மேகங்களை விலக்கி.... நீள அகண்டம் அதற்குக் கீழ் விரிந்து தெரிவதைப் பார்ப்பாள் அவள். 

 ஒருநாள் தலைகுனிந்து பார்த்து நின்றபோது மேகங்களுக்கு இடையே தலைகுப்புற விழுந்துவிட்டாள். காற்றில் மிதந்தாள். கைகளை விரித்தாள். கரணங்கள் போட்டாள். வேகவேகமாக மிதந்தாள். அப்போது அவளை ஒரு கழுகு ஏந்திக்கொண்டது. 'நான் தான் பருந்து. உன் புதிய வீட்டிற்கு அழைத்துச் செல்ல நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்'. அதன் சிறகுகள் பற்றி அவள் அமர கழுகு பறந்தது. இன்னும் கீழே நீலநிறக் கடல் அழகு காட்டியது. அதிலிருந்து ஒரு ஆமை வெளி வந்தது. தலை நிமிர்ந்த ஆமை அவர்களைப் பார்த்து தலையாட்டியது. 

 மீண்டும் கடல் நீரில் முக்குளித்து எழுந்தபோது அதன் முதுகில் ஒரு கம்பளி எலி. அதன் கால் நுனியில் சிறிது மண். அந்த எலி சிறிது மண்ணை ஆமை முதுகில் வைத்துவிட்டுக் குதித்து விடுகிறது. அந்த மண்ணில் ஆகாயப் பெண்ணை இறக்கிவிடுகிறது கழுகு. 'பக்கத்தில் பைன் மரத்தில் இருப்பேன் நான். இங்கு நடப்பதெல்லாம் பார்ப்பேன் நான்' என்று சொல்லிவிட்டு கழுகு மறைய, தன் விரல்களால் ஈரமண்ணைத் தொடுகிறாள் ஆகாயப்பெண். ருசித்துப் பார்க்கிறாள். சுற்றிலும் உள்ள பசுமை காண்கிறாள். 

 ஆமை சொல்கிறது, 'நீ இங்கேயே இரு. இந்த இடத்தை புது உலகு ஆக்கு. அன்பாக இரு. என்னை அம்மா என்று அழை. உனக்கு உதவிட உயிர்கள் செய்வேன் நான். அவற்றைப் பார்த்து வாழ தெரிந்துகொள். நான் உன் அன்னை' என்று ஆமை சொல்ல, அதன் முதுகினை ஆகாயப்பெண் தொட்டு 'அவ்வாறே உன் சொற்கள் மதிப்பேன்' என்றாள். சொல்லிய அவள் உறங்கி விடுகிறாள். 

 அவள் உறங்கிய போது ஆமையின் முதுகு வளர்கிறது. உடைந்த இடங்களில் மலைகள். அதன் எச்சில் பட்ட இடங்களில் ஆறுகள், பொய்கைகள். அது சிலிர்த்த இடங்களில் புல்வெளிகள். அது வாய் திறக்க அதிலிருந்து உயிர்கள். இரு கால்கள், நான்கு கால்கள், ஆறு, எட்டு என்று விதவிதமாக. பூமி வந்தது. உயிர்கள் வந்தன. எழுந்த பெண்ணிடம் ஆமை சொன்னது 'உன் வயிற்றில் வளர்கிறது ஒரு உயிர் அது உன் போல்தான். ஆனால் உன்னைப் போல அல்ல. அவள் முதல் பெண் என்று அழைக்கப்படட்டும். நீங்கள் இந்த உயிர்களுக்கெல்லாம் பெயர்கள் வழங்குங்கள். அவை பேசும் முதல் குரல்தனைக் கேளுங்கள். அவற்றுடன் பேசுங்கள். நீங்கள் எல்லாம் என் படைப்புகள்' என்று சொல்லிவிட்டு உறங்கப் போய்விடுகிறது ஆமை. முதற் பெண் வருகையுடன் தொடங்குகிறது மனிதர் கதை. 

 இந்தக் கதையில் பெத் ப்ரான்ட் முன் வைத்தது ஒரு பெண்ணியம். 

பெண்தான் முதற் படைப்பு
பெண்தான் பெயர் தந்தாள்
பெண்தான் மொழி தந்தாள்
பெண்தான் தேடல் மனுஷி
பெண்தான் அறியா விதியின் தேர்வு. இத்தகைய புராணியம்தான் க.வை.பழனிசாமி கதையிலும் இயங்குகிறது. இவர் கதையில் வரும் பெண் சாதனைப் பெண். அவளின் வேதனை பற்றிய புதினமாக பழனிசாமி புதிய புராணியத்தை சமைக்கிறார். கிளைக்கதைகள் நிறைய இருக்கின்றன. 

 பழனிச்சாமியின் மொழியில் கடவுள், மதம், கல்வி, அரசியல், படைப்பு, எழுத்து.... எல்லாம் பற்றிய அவரின் கருத்துக்கள் சுவையானவை. ஒரு சிலருக்கு இது புராணமாக, மெய்ஞான நாவலாகத் தெரியலாம். எனக்கு வெளிப்படையான அரசியல் நாவலாகவும் தெரிகிறது. தீராத தேடல்எழுத்தின் நவீனத் தொடர்ச்சியாகவும் தெரிகிறது.

 அறியா உலகு பற்றி நான் அறிந்த எழுத்துகளில் பழனிச்சாமியின் எழுத்து போன்ற ஒரு தீவிரத் தன்மையை நான் இதுவரை கண்டதில்லை. அவ்வகையில் தமிழுக்கு ஒரு வளமான புதுவரவு இந்நாவல். 

No comments:

Post a Comment