Ads 468x60px

Social Icons

Wednesday 31 October 2012

ஆதிரை - ஒரு தீவிரமான நாவல்




க.வை.பழனிசாமியின் முதல் நாவலின் பெயர் ''மீண்டும் ஆதியாகி''. இரண்டாம் நாவல் ஆதிரை. ஆதிரையைப் படித்த பிறகு க.வை-யின் பிற எழுத்துக்களைப் படிக்க யாருக்கும் ஆசை தோன்றும்.

ஆதிரை பற்றி எழுதுவதற்கு முன்பு இன்றைய இலக்கிய சூழல் பற்றி நாம் எல்லாம் யோசிக்க வேண்டும். எந்த நூலும் இலக்கியமாய் அணுகப்படாமல் தமிழகத்தில் உள்ள குழுக்களின் அடிப்படையில் அணுகப்படுகின்றன. சிலர் ஒருபடி மேலே போய் ரசிகர் மன்றம் எல்லாம் வைப்பதாகக் கேள்வி. க.வை. நினத்தால் பெரிய ரசிகர் மன்றமே உருவாக்கும் ஆற்றல் உள்ளவர்.

உதாரணமாக சேலத்தில் ஆதிரப் பற்றி பேச வந்திருந்த தமிழ்ச்செல்வன் நாவலில் ஷேர்மார்க்கெட் மூலம் பணம் சேர்ப்பது பற்றி வரும் குறிப்பை விமர்சனம் செய்தார். அதாவது இடது சாரி மனோபாவம் கொண்ட வாசகர்களை நோக்கித்தான் நாவல் எழுதப்படவேண்டும் என்பது, எழுதப்படா விதி. ஆதிரை நாவல் குறிவைக்கும், உருவாக்க விரும்பும் வாசகன் வேறு. ஆதிரை நாவலுக்கு சாகித்திய அக்காதமி பரிசு வராது. சு. வெங்கடேசன் நாவலுக்குத்தான் வரும். இந்த நாவலைப் பிரச்சாரம் செய்து பரப்பியவர் தமிழ்ச்செல்வன் என்பதும் இங்கு ஞாபகம் வருகிறது. அதாவது மு.வ காலத்திலிருந்து, ஜெயகாந்தன் காலத்திலிருந்து நாவல் ஒரு ''ஐடியாலஜி''யைப் பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆதிரை இதிலிருந்து விடுபட்ட நாவல். தமிழ் சினிமா, கடைசியில் நல்லவனை உதைத்துத் தண்டனை கொடுப்பது போல் நல்லது/கெட்டது என்ற பெரும் பிரிவினையை அங்கீகரிப்பவை எல்லாம் ஐடியாலாஜி நாவல்கள். எனவே, இந்த பெரும் பிளவு வியாதி தொற்றாத உண்மையான நவீன எழுத்துக்கள் தமிழில் அங்கீகரிக்கப்பட இன்னும் ரொம்ப காலம் ஆகுமென்றே தோன்றுகிறது.

இப்படி நான் எழுதும்போது நான் லௌகீக கருத்து உருப்பெறாமையைப் படைப்பில் ஆதரிக்கிறேனே ஒழிய படைப்பில் கருத்தே இருக்காது என்கிற தூய இலக்கியவாதியை ஆதரிக்கவில்லை. நல்ல எழுத்து, கருத்துருவாக்கத்துக்கும் கருத்தே இல்லாமைக்கும் நடுவில் இருக்கும்.

ஆதிரை நவீன வகை நாவலாகும். எனவே நாவலிலிருந்து கதை பிதுக்கி வெளியில் வீசப்படுகிறது. கதை Concept  ஆகிறது. இதனால் நாவல் முழுதும் உரைநடை கவிதையாகிறது. வாசித்து வாசித்து ஆனந்தப்படலாம். அந்தக் கவிதை, தனிமையை நாவல் பூராவிலும் பரவவிடுகிறது. ஆதிரை பாத்திரம் கவிதை; ஆதிரை தனிமையின் குறியீடும் கூடத்தான். அவள் காடு. கவிதை-தனிமை-காடு-சூன்யம் இவை ஒன்றை ஒன்று தொட்டு ஒரு தொனியை நாவலின் உபபிரதித்தளத்தில் (Sub-Text) சிருஷ்டிக்கின்றன. காட்டில் பல பாத்திரங்கள் அலைகிறார்கள். இது தமிழின் முதல் Eco நாவலாகிறது. இன்றைய முற்போக்குப் போராட்டம் இந்தியாவெங்கும் ஆதிவாசிகளைச் சுரண்டும் இந்தியாவுக்கு எதிராக நடந்துகொண்டிருக்கிறது. இந்நாவலெங்கும் ஆதிவாசிகள் நிறைந்துள்ளார்கள். அவர்களின் குழந்தைமையும் ஆண் பெண் உடல்களுக்குள் வேறுபாடற்ற தன்மையும் புகழப்படுகின்றன.

ஓரிடத்தில் கவிஞனும் ழ என்ற இளைஞியும் இரு உடல்களை இணைக்கிறார்கள். அந்த இடத்தை நாவலாசிரியர் இப்படி விளக்குகிறார்.

''உடல்கள் இரண்டும் பின்னிப் பிணைந்து புது உடல் கண்டு களித்தன. களிப்பின் தீ வான் தொட்டு எரிந்தது. எரியும் நெருப்பால் உடல்களின் கதகதப்பு ஏறியது. அப்போது அவளிடம் கால்கள் இல்லை கைகள் இல்லை...''

இப்படி விவரிப்பு செல்கிறது. பொதுவாகத் தமிழ் நாவல்கள் புணர்ச்சியைக் கூறும்போது உருவகங்களுக்குள்ளும் உவமைகளுக்குள்ளும் போய் பதுங்கிக்கொள்வதுண்டு. இந்த நாவலும் அத்தகைய ஒழுக்கக் கட்டுப்பாட்டை பாதுகாக்க விரும்பியதோ என்று சில இடங்களில் தோன்றினாலும் இது பலரால் வாசிக்கப்படவேண்டிய தீவிரமான நாவல் என்பது என் கருத்து.



ஒரு ஊடகத்திலிருந்து இன்னொரு ஊடகத்துக்கு


ஒரு ஊடகத்திலிருந்து இன்னொரு ஊடகத்துக்கு

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்


இப்பொழுதெல்லாம் நம் எழுத்துலகம் இரண்டு மூன்று மாதிரியானப் போக்குகளைக் கொண்டதாக விளங்குகின்றது. முதலாவதாக நாவல் என்றால் அந்தக் காலத்தில் கல்கி எழுதின நாவல்களை அல்லது அதுபோன்ற எழுத்தாளர்கள் எழுதின நாவல்களை எல்லாம் தலையனை நூல்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த காலம் மாறி இப்பொழுது அதுமாதிரியே பெரிய பெரிய நூல்களை எல்லாம் நாவலாசிரியர்கள் எழுதத் தலைப்பட்டிருக்கிறார்கள்.

இரண்டாவதாக அண்மைக்காலத்தில் நாவலாசிரியர்கள் அல்லது படப்பாளிகளுடைய சிந்தனை ஒரு தத்துவ விசாரப்போக்கிலே அமைந்திருக்கிற நிலையைக் காண முடிகிறது. அப்படிப்பட்ட ஒரு தத்துவ விசாரப்போக்கிலே அமைந்ததுதான் 'மீண்டும் ஆதியாகி' என்கிற இந்த நூல்.

இந்த நூலுடைய அமைப்பு மாத்திரம் அல்ல இந்த நூலிலே இருக்கக்கூடிய ஒரு மொழி நடையும் வித்தியாசமானதாக விளங்குவதைப் பார்க்கலாம். அதுமட்டுமல்ல இந்நூலாசிரியர் ஏற்கனவே இலக்கிய உலகத்தில் இருந்து வருகிற பிரமைகள் என்று கருதக்கூடியவைகளை உடைக்கிற நோக்கிலே இந்த நாவலை எழுதியிருப்பதாக தன்னுடைய முன்னுரையிலே அறிமுகம் செய்துகொள்கிறார். இது ஒருவகையில் சர்ச்சைக்குரிய நாவல்தான். விவாதத்திற்குரிய நாவலாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இது நாவல்தானா என்ற கேள்விகளைக்கூட பலர் எழுப்பலாம்.

ஆதியைச் சொல்வதன் மூலமாக நம்முடைய சமுதாயத்தில் சமகாலத்தில் இருக்கக் கூடிய பல தீமைகளை எதிர்த்து அடையாளம் காட்டுவது இவருடைய நோக்கம் என்பதால்தான் இதை முதல் பெண்ணிய நாவல் என்று குறிப்பிட்டுச் சொல்கிறார். ஆதி உயிரில் தோன்றிய அந்தப் பெண்ணைப் பற்றிப் பேசுகிறபொழுது பெண்களுக்கு இழைக்கப்படும் தீமைகளையெல்லாம் பற்றிப் பேசுகிறார். இதிலே பெண்ணியத்தைப் பற்றி அவர் விரிவாகப் பேசியிருக்கிறார்.

இதனுடைய அத்தியாயங்கள் பலவாறாக விரிந்தபோதிலும் கூட இதன் தொடர்ச்சியிலே ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு கதைபோல அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.

உதாரணமாக நாற்காலிகளைப் பற்றி ஒரு அத்தியாயம். இந்த நாற்காலிகளைப் பற்றிய அத்தியாயத்திலே நாற்காலி ஒரு பிம்பமாகிறது. அந்த நாற்காலி என்ற பிம்பம் மதத்தின் வடிவமாக வருகிறது. சமூகத்தினுடைய அழுத்தம் என்பதாக வருகிறது. எழுத்து என்ற இலக்கியத்தின் வடிவமாக வருகிறது. இவைகளையெல்லாம் சொல்லி இவைகளுக்கான போரிடுகிற மறுப்புக்களை சொல்லுகிற போக்கு அந்தப் பகுதியிலே காணப்படுகிறது.

'உன்னதமான எழுத்துக்கள் உன்னதமான மனிதர்களை உருவாக்கியதில்லை' என்று திடுக்கிடும்படியாகச் சொல்கிறார்.

ஒவ்வொரு பக்கமாகத் தாண்டித் தாண்டிச் செல்லுகிறபொழுது  இதைப் புரிந்துகொள்கிற முயற்சியும் ஒரு பக்கம் தேவைபடுகிறது. இன்னொரு பக்கம் அவருடைய கருத்துக்கள்தான் என்ன என்பதைப்பற்றிய ஒரு உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு சிக்கலும் நமக்கு அதிலே உண்டாகின்றது.

அடிப்படையிலே பார்த்தால் பழைய எழுத்திலே அவருக்கு ஏற்படக்கூடிய சலிப்பு, கதைசொல்லிகளுடைய திறமையில் ஏற்படக்கூடிய சலிப்பு, இவைகளை எல்லாம் அவர் சித்தரித்துப் போய்க்கொண்டிருப்பதனாலேயே, அதனுடைய விளைவாகவே இந்த நாவலை ஆசிரியர் உருவாக்கி இருக்கிறார் என்று தோன்றுகிறது.

இதிலே எல்லா சிக்கல்களும் வருகின்றன. மனித சமுதாயத்துனுடைய எல்லா சிக்கல்களையும் வெவ்வேறு இடங்களில் தொட்டுக் காட்டித் தன்னுடைய மன அதிர்வுகளை அவர் புலப்படுத்தி இருக்கிறார். இயற்கையின் அழிவைப்பற்றி, இயற்கையோடு ஒன்றிப்போகிற தன்னுடைய இயல்பு பற்றி அவர் பேசிக்கொண்டு செல்லுகிறார்.

இந்த நாவலின் நடை வித்தியாசமானதாக இருக்கிறது. ஒவ்வொரு எழுத்தாளனும் தன்னுடைய காலத்தில் மொழியினுடைய சாத்தியக் கூறுகளையும் மொழியினுடைய அமைப்பின் எல்லைகளைத் தாண்டிப் போகிற தன்னுடைய முயற்சியையும் பதிவு செய்ய வேண்டியவனாக இருக்கிறான். மொழியினுடைய வல்லமையை தன்னால் இயன்ற அளவுக்கு நகர்த்திக்கொண்டு போகிற ஆற்றல் படைத்தவனே சிறந்த எழுத்தாளனாக உருவாகிறான். அந்த வகையில் இந்த நாவலினுடைய இந்தப் போக்குகளுக்கு மத்தியிலே அவருடைய நடை ஆச்சரியமான தன்மைகளை உடையதாக இருக்கிறது.

'பூமி தாண்டிய பெருவெளி, மேஜை விரிப்பாகி கேலக்ஸிகள் அதில் பூக்களாக மலர, நாசிக்குள் பிரபஞ்ச வாசம்' என்று எழுதும்பொழுது அவர் ஏற்கனவே கவிதை படைக்கின்ற கவிஞராக இருக்கக்கூடிய அந்த நேர்த்தியையும் அந்த சொல் சிக்கனத்தையும் அடர்த்தியையும் நம்மால் காண முடிகிறது.

ஒரு ஊடகத்தில் இருந்து இன்னொரு ஊடகத்திற்கு வெகு விரைவாக மாறுகின்ற போக்கை அவருடைய எழுத்து வர்ணித்துக்கொண்டு போகிறது.

'இசை நிறமாக விரிந்து... ராகங்கள் தோற்றம் கொண்டு பார்க்க வல்லதாகவும் இருந்த அதிசயம். சொற்களின் பிடியில் சிக்காத அற்புதம். அப்பொழுது எழுந்த ஓசை, நகர்ந்த பொருள்களின் ஓசையா? அல்லது ஓசையின் நகர்தலா? என்று பிரிக்க முடியவில்லை. எழுந்த ஓசைகள் நிறவடிவம் கொண்டு வாசனையில் நகர்ந்தன' என்று சொல்லுகிறபொழுது அந்தப் புலன்களின் பரிமாற்றமும் ஊடகங்களின் பரிமாற்றமும் மாறிமாறிப் போகின்ற அந்த வேகத்தை அவருடைய நடையினுடைய குறிப்புக்குள்ளே நாம் பார்க்க முடிகிறது.

Thursday 18 October 2012

'வார்ஸாவில் ஒரு கடவுள்' பிரதிகளைத் தரும் குவி மையம்


'வார்ஸாவில் ஒரு கடவுள்' பிரதிகளைத் தரும்

குவி மையம்



     இலக்கியம் குறித்துப் பேசுவது ஒரு போதும் முழுமையைத் தருவதில்லை. மனம் போதாமையில் தோய்வதால் மீண்டும் மீண்டும் அது பற்றிப் பேசுகிறோம். ஆனால் ஒவ்வொரு முறையும் இதன்மீது சொல்ல முயலும் எதுவும் புதிதாக ஒரு பரிமாணத்தைக் காட்டுகிறது. அதனால் ஆர்வம் கூடுகிறது. இப்படி..... பலரும் முயல்வதால், பெருகும் பரிமாணங்களால் உரு கொள்ளும் வடிவில், நமது மனம் லயித்திருகும் பொழுதுதே.... வேறு ஒருவர், இன்னொன்றைப் புதிதாகச் சொல்ல..... உருமாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
 இலக்கியமும் கடவுள் போல, பிடிபடாத மறை இருள் போல, விளங்காமெய் போல அர்த்தம் பொதிந்து சுடர்கிறது. எனவேதான் ஒவ்வொருவரும் புதிதாக ஒன்றைச் சொல்லி மகிழ்கிறோம். இந்த மகிழ்ச்சி தான் இலக்கியத்தின்மீது இத்தனை ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.

 இப்படியான இலக்கியத்தில் நாவல் ஒரு அங்கம். நாவல் என்ற சொல்லே முன்னிலிருந்து வேறானது என்கிற பொழுது புதிதாகச் சொல்ல வேறு ஏதோ நிகழ வேண்டியிருக்கிறது. நிச்சயமாக அது வெறும் அனுபவம் மட்டுமல்ல. அனுபவம் இல்லாத மனித உயிர் கிடையாது. அனுபவம் ஒரு வாயில்தான். வாயிலைப் பார்த்தே பிரமித்து நின்றுவிடக்கூடாது. உள்ளே  ஒரு பயணம் நிகழ வேண்டும். எண்ணம்தான் பயணம். எண்ணம் எல்லாமும் செய்யும்.

 ஆக முதலில் அனுபவம். . .  பிறகு மனதில் எழும் எண்ணம்.  உடலில் உயிர் இருப்பது போல மனதில் எண்ணம் ஓடுகிறது. இந்த எண்ணம்தான் உண்மையில் மனிதன். பயணம் எப்போதும் உள்ளேதான் நிகழ்கிறது. எண்ணம்தான் நம்மை எல்லா இடங்களுக்கும் கூட்டிச் செல்கிறது. மனவெளி விரிய எண்ணம்தான் ஊற்று. அது ஒரு காட்டாறு. முடிவில்லாத மழையில் பெருக்கெடுத்து ஓடும் ஆறு. அப்போது ஜனிக்கும் மனவெளிக¢குள் பிரபஞ்சமே பம்பரமாய்ச் சுழலும். ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல. கற்றுத் தரக்கூடியதும் அல்ல. இயல்பிலேயே ஒருவன் அவ்வாறாக இருப்பது.

 எண்ணம் கூட்டிச் செல்கிற இடம். எண்ணம் கூட்டிச் சென்ற அந்த இடமிருந்து மனம் அப்போது பார்க்கின்ற வெளி. ஆக அனுபவத்திற்கு பின்பு நடக்கிற உள் நிகழ்வுதான் மிக முக்கியமானது. அதற்கான சாத்தியமுள்ள மனதில்தான் இது நடைபெறும். எல்லாரிடமும் நடக்காது. நிலவைப் பார்க்கும் அனுபவம் பொதுவானது. இந்த அனுபவம் உள்ள அத்தனைபேரும் கவிதை எழுதுவதில்லை. அப்படிச் சிலர் கவிதை எழுதினாலும் ஒவ்வொரு கவிதையும் வேறு வேறாகத்தான் தெரியும். அவ்வாறாக எழுதப்பட்ட எல்லாக் கவிதைகளையும் தொகுத்துப் பார்த்தால் ஒரு சில கவிதைகள் மட்டுமே கவித்துவ மேன்மையில் ஒளிரும். அதற்கானக் காரணம் இதுதான். அனுபவத்திற்குப் பின் நிகழ்கிற ஒரு பயணம்தான் இதை முடிவு செய்கிறது. ஆக கலா பூர்வமான ஒரு பயணம் நிகழ எண்ணம்தான் மூல காரணம்.

நாம் காணும் ஒரு நிகழ்வு
பார்க்கும் ஒரு புறவெளி
கண்கள் தீண்டும் பொருள்கள்
ஐம்புலன் வழி இறங்கும் எல்லாமும் அகவயமாக மாறுகிறது

சுற்றி அலைந்து திரிந்த காடு
வானம் பார்த்தக் காட்சிகள்
கால் நனைக்கும் ஆறு
சந்திக்கும் மனிதர்கள்
மனம் திளைத்த உடல்
பார்த்துப் பரவசமான வசீகர எழில்

இவை எல்லாமும் புறவெளியின் அதிர்வுகள்தான். ஆனால் இந்தப் புற நிகழ்வுகள் அகவயமாகி அழியாது மனதில் எங்கோ சேகரமாகிறது. இவை எல்லாவற்றையும் கூட்டிச் சென்று வண்ணம் பூசி மன அடுக்குகளில் சேகரிக்கும் வேலையை யார் செய்கிறார்கள்?

எண்ணம்தான். இந்த எண்ணம்தான் இவற்றை அழைத்துச் செல்லும் வாகனம். எண்ணம்தான் எல்லாவற்றுக்கும் புதுப்புது வண்ணம் பூசுகிறது. வெளியில் பார்த்த காடு உள்ளே இருப்பதில்லை. வெளியில் பார்த்த காட்டை எழுதுவது எழுத்தல்ல. மனதிற்கு உள்ளே இருக்கும் காட்டை எழுதுவதே எழுத்து. உள்ளே இருக்கும் காட்டின் அழகு, அதன் வசீகரம், பிடிபடும் உண்மை எல்லாமும் எண்ணம் சார்ந்தது. மனிதர்களிடம் இது ஒரு தனித்துவமான நிகழ்வு. இந்த இடத்தில் நிகழும் படைப்பு வினைகள்தான் ஒருவனை கலைஞன் ஆக்குகிறது

குக்குக்கூ வென்று குயில் பாடும் பாட்டினிலே
தொக்க பொருளெல்லாம் தோன்றியதுதென் சிந்தைக்கே;
அந்தப் பொருளை அவனிக் குரைத்திடுவேன்;
விந்தைக் குரலுக்கு, மேதினியீர், என்செய்கேன்?

என்கிறார் நம் மகாகவி பாரதி. வேடர் வாராத விருந்துத் திருநாளில் கன்னிக் குயிலொன்று காவிடத்தே பாடியதை (கூவியதை) கேட்டப் பாரதிக்கு 'குயில்பாட்டு'க் கவிதை சாத்தியமாகிறது. அந்த இடத்தை அவரே சொல்லுகிறார். ''தொக்க பொருளெல்லாம் தோன்றியது என் சிந்தைக்கே'' என்று. பாரதியின் மன உள் நிகழ்ந்த பயணம்தான் இந்தக் கவிதை. இதை சாத்தியமாக்கியது அவரின் எண்ணம். எண்ணம் இட்டுச் சென்ற இடம். அங்கு அவர் பார்த்த வெளி... பாரதி மட்டுமே பார்க்க முடிந்த இடம். நாதக் கனலிலே நம்முயிரைப் போக்கோமோ என்று நெகிழ்ந்த மனம்தான் அவரை... கனவு காணத் தூண்டியது. கட்டவிழ்ந்த மனம் எண்ணத்தை ஆறாய்ப் பெருக்க உள் நிகழ்ந்தது பயணம். பயண வெளிப்பாடுதான் எழுத்து.

 மனம் திளைக்கும் இப்படியான உள்வெளிப் பயனம்தான் வேறு ஒரு உலகத்தைப் படைத்துக் காட்டுகிறது. எதிர் வினை செய்யாது அது தூண்டும் வழி செயல்பட வேண்டும்.  கலையின் சிருஷ்டி மையம் இந்தப் புதிய வெளிதான். அந்த வெளி வேறு யாரும் பார்க்காத வெளி. படைப்பாளி மட்டும் பார்த்த, பார்க்க முடிகிற வெளி. கலைஞனுக்குள் இப்படி ஏற்படும் நிகழ்வை கலைஞன் அறிவதில்லை. இயல்பாகவே அப்படி நிகழ்வதால் அவனிடம் அது பற்றிய பிரக்ஞை இல்லை. கலை வெளிப்பாடு என்பது இதனால்தான் சாத்தியமாகிறது.

 இந்த இடமிருந்து பார்த்தவற்றை உணர்ந்தவற்றை எழுதுவது நாவல் எனத் தோன்றுகிறது. அந்த வகையில் எழுதப்படும் நாவல்தான் முன் சொல்லப்பட்டவைகளிலிருந்து வேறாகவும் தனித்தும் இருக்கும். அப்படியான ஒரு உள் மன நிகழ்வு தமிழவனுக்கு ஏற்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். நாவலை அக்கறையோடு வாசிக்கும் யாரும் இதில் உள்ள புதுமையைக் கண்டிப்பாக உணர்வார்கள். அனுபவத்தை அப்படியே கலையாக¢க முயன்றவர்களிடம் நாவலை/கலையை பார்க¢க முடியவில்லை.

 தமிழவன் நீண்டகால விமர்சகர். தற்பொழுதுள்ள விமர்சகர்களில் மிக முக¢கியமானவர். ஜே.ஜே. சில குறிப்புகளின்மீது அன்று அவர் வைத்த விமர்சனம் முற்றிலும் வேறானது. விமர்சனம் குறித்த இலக்கணமாகவே கருதலாம். நாவலும் விமர்சனமும் இரு நிகழ்வுகள் என்கிறார். ஒவ்வொரு நாவலுக்கும் அதற்கேயான தனி விமர்சனம் வேண்டும் என்கிற அவரது பார்வை கவனிக்கத்தககது. அவரின் இந்தக் கருத்துக்கள்தான் ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ நாவலை ஆவலாகப் படிக்கத் தூண்டியது.

 ஒரு கனவுவெளியை, ஒரு மாயத்தோற்றத்தை காட்ட முயல்கிற இடங்கள் இந்த நாவலில் நிறைய உள்ளன. விஜயாவோடு சந்திரன் சேர்ந்திருக்கும் பல இடங்கள் குறிப்பாக அந்த குகை உடலும் மனமும் சேர்ந்து விரியும் வெளியாக அற்புதமாக தோற்றம்கொள்கிறது. சந்திரனின் மனோரதத்தின் பாத்திரமாக வந்துபோகும் மாக்தா, இவர்கள் இருவரின் நெருக்கத்தில் அப்போது விரியும் உடல்வெளி, நண்பன் வீட்டில் வசித்த உயரமான பொட்டு வைத்த அடிக்கடி துப்பும் பெண், சிறு வயதில் சிவப்பு ஊற்றைக் காட்டுவதாகச் சொல்லி சந்திரனை அழைத்துச் சென்று காட்டும் இடங்கள், லிடியா தன் பத்தொன்பதாவது வயதில் இருபத்தி நான்கு வயது இளைஞனை சந்திப்பதும் அவன் அவளிடம் கூறும் இந்தியப் பழமும் அப்படியான இடங்கள்தான்.
   
 உடலின் கொண்டாட்டம் நாவலின் மொழியோவென வாசிப்பில் ஒரு எண்ணம் நம்மைப் பின் தொடர்வதை உணர முடிகிறது. ‘’யாருமில்லாதபோது இரண்டு மனித உயிர்கள் ஒன்றை ஒன்று அணைக்கும்போது இரண்டு உயிர்களின் முழு ஆற்றலும் எழுந்து வெளிப்படுவதை நானும் விஜயாவும் உணர்ந்தோம்’’ சந்திரன் குகைக்குள் இருக்கும்போது விஜயாவின் நெருக்கத்தை இப்படி உணர்கிறான். ‘இந்த இடத்திலேயே செத்துப்போகலாம் போல் சந்தோஷமாக இருக்கிறது’’ இது விஜயா. இதையே பிறகு சந்திரனும் கூறுகிறான்.

சந்திரன் விஜயா அமலா அஷ்வினி பிரதாப் அன்பழகன் ( ராஜேஸ் ) சந்திரனின் பர்மியத் தாய் அன்னா மாலினோவ்ஸ்கா லிடியா பியோத்தர், சந்திரன் சிறு வயதில் சந்திக்கும் அக்கா, வார்ஸா, மியான்மர், சந்திரனின் கிராமம் இவை யாவும் இந்த நாவலில் கட்டுமானப் பொருள்களாகக் குவிந்துள்ளன. இவற்றிலிருந்து வாசகன் தனக்கான ஒரு வடிவத்தைக் கட்டமைத்துக்கொள்ள முடிகிறது. வடிவமின்மைதான் இதில் வடிவம். வடிவமின்மையே வடிவங்களுக்கான சாத்தியம் என்ற புத்தரின் பார்வை இந்த இடத்தில் நினைவில் வர வேண்டும்.

சந்திரனின் தாத்தா இரண்டாம் உலக யுத்தத்தின்போது பர்மாவிலிருந்து வெளியேறுகையில் வழியில் சேகரித்த பல பொருட்களோடு உயிருள்ள ஒரு நாய்க்குட்டியைத் தூரத்திலிருந்து பார்த்துத் தூக்கிக்கொண்டு வந்ததாகச் சந்திரன் லிடியாவிடம் தன் வாழ்க்கையைச் சொல்லத் தொடங்குகிறான். அந்த உயிருள்ள நாய்க்குட்டி என் அம்மா என்கிறான். அப்போது அவன் அம்மாவுக்கு மூன்று வயது. இந்த இடம் நாவலை வேறு ஒரு தளத்திற்கு நகர்த்துகிறது.

லிடியா சந்திரனிடம் இவ்வாறு பேசுகிறாள். ‘’சரித்திரம் மரபணு வம்சம் ரத்தம்... இப்படி... இப்படி... சொல்லி இரண்டாம் உலக யுத்தத்திற்கு இடப்பட்ட அத்தனை தத்துவரீதியான அடிப்படைகளையும் தென்னிந்தியாவில் ஒரு மனிதன், மனித அன்பால் உந்தப்பட்டு ஒரு குழந்தை பரிதாபமாக சாகக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் உதறி எறிந்திருக்கிறார்.’’ லிடியாவின் இந்த கூற்று ஏனோ நம்மை ஒரு குற்ற உணர்வுக்குத் தள்ளுகிறது. சமீபத்தில் இலங்கையில் நடந்த படுகொலையில் அனாதைகளான குழந்தைகள் நினைவில் வருகிறார்கள்.

 அந்த மூன்று வயது குழந்தை இந்த நாவலுக்கு ஒரு உலகலாவியப் பரப்பைத் தருகிறது. பர்மிய ரத்தமும் தமிழ் ரத்தமும் எந்தவித எதிர்ப்பும் இல்லாது இணைந்த அதிசயத்தை லிடியாவோடு நாமும் வியக்கிறோம். இந்த சங்கமம்தான் நீரையும் நெருப்பையும் இணைக்கிறது. சந்திரன் லிடியாவிடம் கூறுகிறான் ‘’நான் நெருப்பாலும் நீராலும் செய்யப்பட்ட மனம்கொண்டவன்.’’ நெருப்பு பற்றுவதை முன் கூட்டி அறிவது அம்மாவிடமிருந்தும் நீர் இருக்கும் இடத்தை அறிவது அப்பாவிடமிருந்தும் சந்திரன் பெறுகிறான்.

 இந்த நாவலின் பாத்திரங்கள் எல்லாமும் தனித்து ஒரு மூலகம்  போல் இயங்குகின்றன. யாரும் யாருக்காகவும் இல்லை. அவ்வப்போது சேருவதும் விலகுவதுமாக இயங்கி புதுப்புது வெளிகளை உருவாக¢கி சற்றே வாசகனை அலையவிட்டு பிறகு தங்களுக்கேயான பிரத்யேகக¢ குணங்களை இழக்காது சுயத்தோடு செயல்படுகின்றன. அதனால்தான் பாத்திரங்கள் வாசக உணர்வுகளுக¢கு ஏற்ப வடிவங்களைக் காட்டும் கட்டுமானப் பொருள்களாகத் தோற்றம்கொள்கின்றன. அவரவர் திறக்கும் ஜன்னல்களின் வழி பார்வைகொள்ளும் அம்சம் இந்த நாவலின் சிறப்பாகும்.

 கும்மாங்குத்து மதன் ஹுசைன் செக்சனியாவிலிருந்து வந்த இரண்டு இளைஞர்கள் உக்ரைனியர் எல்லோரும் தேசமில்லாதவர்கள். இவர்கள் யாரும் விரும்பி வேறு நாட்டிற்குச் செல்லவில்லை. உயிர் பிழைக்க ஒரு காலடி மண்ணிற்கு அலைகிறார்கள். ஒவ்வொரு அகதிக்குப் பின்னாலும் மனித சமூகத்தின் வக்கிரம், அழுக்கு, மிருகவெறி, சுயநலம், வஞ்சகம் இன்னும் இப்படியான நூறு சொற்களைச் சொன்னாலும் கொடூரத்தின் கொஞ்சமான முகத்தைத்தான் காட்ட முடியும்.

 தமிழவன் விவரிக்கும் இந்த இடம் நாவலின் மிக முக்கியமான பகுதி. வேனில் ட்ரக்கில் தட்டுமுட்டுச் சாமான்கள் போல கேவலமாகத் திணிக்கப்பட்டு நாடு தேடி அலையும் அவர்களின் அவலம் மனித நாகரீகத்தின்மீது தேசப்பக்தியின் மீது ஏன் நம்மீதே மலத்தைக் கொட்டத் தோன்றுகிறது. காலூன்ற மண் தேடி அலையும் பரிதாபம் நெஞ்சில் நெருப்பாய் இறங்குகிறது.

 இதில் வரும் அகதிகள் யாரும் பயங்கரவாதத்திற்குத் துணை போனவர்கள் அல்ல. தீவிரவாதத்தை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்தவர்களும் அல்ல. மிகச் சாதாரணமான மக்கள். அதுவும் மிக இளையர். உயிரைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடும் அப்பாவிகள். இந்த இடங்களில் எல்லாம் தமிழவன் ஒரு வார்த்தையும் பேசாது பாத்திர அதிர்வுகளின் வழியாக வாசக மனத்தில் நிரந்தர அலையைத் தோற்றுவித்து விடுகிறார். ஒரு நாவல் இப்படித்தான் இயங்க வேண்டும். இலக்கணம் தெரிந்தவர் இலக்கியத்தையும் படைக்கிறார். க. நா. சு சாதிக்க முடியாத ஒன்றை தமிழவன் சாதிக்கிறார்.

மதன் என்று அழைக்கப்படும் குலசிங்கம் தனக்கான ஒரு இடம்தேடி அலைகிறான். மதனின் அக்கா ஜெர்மனியிலிருக¢கும் அவளது கணவனின் தம்பிக்குச் சொல்லி தன் தம்பிக்கும் ஒரு வேலை வாங்கிக் கொடுத்துத் தம்பியைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி ஏற்பாடு செய்து அவளது ஆபரணங்களைத் தன் கணவனுக்கும்கூட தெரியாமல் அடகு வைத்து பணம் கொடுத்து கொழும்பில் உள்ள ஒரு ஏஜெண்டு மூலம் அனுப்பிவைக்கிறாள். கும்மாங்குத்துவைப்போல அவனும் மாஸ்கோவில் இறங்கி ஆடுமாடுகள் போல அடைக்கப்பட்டு ரகசியப் பயணம் மேற்கொள்கிறான்.

பயண இறுதியில் பனி கட்டிகள் கிடக்கும் ஒரு மைல் தொலைவு ஆற்றில் இறங்கி கடக்கும் முயற்சியில் மதன் என்று அழைக்கப்பட்ட குலசிங்கம் பனி இளகி இழுத்துப்போக இறக்கிறான். காலூன்ற மண்தேடி அலைந்த தமிழ் அகதியின் முடிவு வாசிப்பின்போது உள்ளே நிரந்தர வலியை ஏற்படுத்திவிடுகிறது. கொஞ்சமான தூரத்தில் அவன் இனத்தின் மண் இருந்தும் அவனுக்கு வாழ்வு தராத அவலம்தான் அந்த வலி. தமிழவன் எழுத்து அதைச் சரியாகச் செய்திருக்கிறது.

 குமாங்குத்து சிவனேசனாக வளர்ந்து வார்ஸாவில் ஒரு கடவுளாக உருக்கொள்கிறபொழுது தன் சிருஷ்டி சக்தியை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு உயிரைப் படைக்கிறார். கேன்வாஸில் தீட்டப்ப்படும் ஒரு ஓவியத்தின் வழியாக இறந்த மதன் அதாவது தமிழ் அகதி மீண்டும் உயிர் பெற்று சிவநேசனைத் தேடி பலமுறை வந்து போகிறான். மனதில் ஒரு நம்பிக்கை வேரூன்றுகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு வார்ஸாவில் ஒரு கடவுள் என்பதாக. அப்போது நாவல் நம்மிடம் மேலும் நெருங்குகிறது.

 லிடியா, அன்னா இருவரும் சந்திரனைத் தேடி வர ஒரு முகாந்திரமும் இல்லை. ஆனால் வருகிறார்கள். மிக நெருக்கமாகப் பழகுகிறார்கள். தங்களைப் பற்றி அவன் கேட்காதே எல்லாமும் சொல்கிறார்கள். லிடியா சொல்கிறாள் ‘’ஸாரி, ஒரே ஒரு நாள் பழக்கத்தில் என் வாழ்க்கையில் இப்படித் தொடர்ந்து பாதுகாத்துக் கொண்டிருப்பதும் அந்தரங்கம் மிக்கதுமான பல விஷயங்களை உங்களிடம் சொல்லும்படி ஏன் என் உள்குரல் தூண்டியது?’’

 அன்னா மாலினோவ்ஸ்கா மூலமாக சந்திரனின் கதை ஏன் சொல்லப்பட வேண்டும்? நாவலில் இந்த பாத்திரங்கள் எப்படி முளைத்தார்கள்? இந்தக் கேள்விகள்தான் நாவலை மேலும் நவீனமாக்குகிறது? நாவலின் வடிவம், வடிவமின்மையின்  மீது  கட்டமைக்கப்படுவது இதனால்தான் நிகழ்வதாகப்படுகிறது. அஷ்வினி அன்பழகனை ராஜேஸாகப் பார்ப்பதும், அமலா எழுதிய கடிதத்தை ஒரு ஆண்டு கழித்து வாசிப்பதும், சிவனேசன்... போனில் அந்தக் கடிதம் குறித்துப் பேசுவதும், அதற்கு முன்பாக விஜயா நினைவாக ஒரு கனவு வருவதும் புனைவின்மீது வசீகர வண்ணம் பூசுகின்றன. இரு வேறு உலகங்களின் நிகழ்வுகளை ஒரு தளத்தில் பார்க்கவைக்கும் முயற்சியில் தமிழவன் வெற்றி கண்டுள்ளார். இதனால் காலவெளி அழிக்கப்பட்டு நிகழ்வின் கணம் உறைந்து ஒரு பாத்திரமாக உருக் கொண்டு இயங்கி வாசகனைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது. வாசிப்பில் இதுவே ஒரு வாசனையாக மாறி வார்த்தைகளின்மீது ஒருவித மோகத்தைத் தூண்டுகிறது.

 வார்ஸாவில் இறங்கும் சந்திரனுக்குப் பிரக்ஞை தட்டுகிறது அல்லது அதை கொஞ்சநேர மரணம் என்று சொல்லலாம். இந்தச் சிறு மரணம் நாவலில் சொல்லப்படும் பல நிகழ்வுகளை வேறுமாதிரியாக யோசிக்கவைக்கிறது. பாத்திரங்களுக்குப் புது வண்ணம் பூசுவதாகவும் சொல்லலாம். சிவநேசன், லிடியா, அன்னா, லிடியாவின் சகோதரன் எல்லோருமே இந்த மரணம் தோற்றுவித்த வெளியின் பிரஜைகளாகத் தோன்றுகிறார்கள். மற்றவர்கள் சந்திரனின் பிரக்ஞையில் எப்போதும் இருப்பவர்கள். இந்த இரண்டின் கலப்பாக நாவலில் அவ்வப்போது காட்சியாகும் வெளிதான் நவீனத்தை எழுத்தில் இறக்குகிறது. இந்த ஈரம் தோயும்போதுதான் விஜயா வேறுவேறு பரிமாணங்கள் கொள்கிறாள். இது மற்ற பாத்திரங்களுக்கும் பொருந்தும். சாதாரண அன்பழகன் ராஜேஸாக மாறி ஹோட்டல் அறையின் கூரையைக் கிழித்து மாயமாவதும் இந்த கலப்பின் காரணமே. விஜயாவின் கிராமத்தில் விரியும் வெளி, அவள் அழைத்துப்போகும் இடங்கள், தந்தையின் தம்பி, ஊரில் சந்திரன் அக்கா என்று அழைக்கும் அந்த அமானுஷ்யப்பெண், விஜயாவின் மரணம் எல்லாமும் இதை வலுப்படுத்துகின்றன.

சந்திரனின் கூற்று இதை மேலும் தெளிவாக்குகிறது. ‘நான் தனியாக எந்தக் குறிக்கோளுமின்றி கடந்த ஒரு வருடமாய் எதிலிருந்தோ தப்பவோ, எதையோ கண்டுபிடிக்கவோ எந்தக் காரணகாரிய தொடர்புமின்றி எந்த முன் திட்டமின்றி யார் யாரையோ சந்திக்கிறேன். எதை எதையோ பேசுகிறேன். எதிலும் எந்தத் தொடர்புமில்லை. அல்லது ஏதோ தொடர்பு இருக்கிறது. எனக்குத் தெரியாதவிதமாய்---------------------------------- நானும் ஒரு பேயோ என்ற நினைப்பு வராமலில்லை.’

நாவலின் இறுதி அத்தியாயத்தில் மும்பைக்குச் செல்லும் விமானத்திலிருக்கும் போது சந்திரனுக்கு ஒரு மறதி பீடிக்கிறது. வார்சாவில் நடந்த எல்லாமும் நினைவிலிருந்து விடைபெற்றதாக அவன் கூறுவதும் கவனிக்கத் தக்கது. இந்த மறதி சந்திரனுக்கு ஏன் ஏற்பட வேண்டும்? அப்படியானால் வார்ஸாவில் முன் நடந்த எல்லாமும் என்ன?

அன்னா சந்திரனோடு கொண்டிருந்த உறவை முன் அறிந்திராத வேறு ஒரு உறவாக மதிக்கிறாள். ‘’நாம் தகப்பன் மகள் அல்ல. காதலன் காதலி அல்ல. கணவன் மனைவி அல்ல. ஆனால் இந்த மூன்று உறவுகளுக்கும் இருக்கும் சக்தி மிக்க அந்நியோன்யத்தை ஆழமாக நான் உங்களிடம் உணர்ந்தேன். இது புது உறவு. இத்தனை நூற்றாண்டுகளில் மனிதகுலம் புதிய உறவை ஸ்தாபிக்காதது பரிதாபம் என்றே நினைக்கிறேன். இந்த உறவு மிக பலமானது என்பதால் இந்த உறவை முறித்துக் கொள்கிறேன். அந்த பலம் தான் எங்கிருந்தோ என்னையும் உங்களையும் இணைத்தது. முதலும் முடிவும் இல்லாத கதை இனி வரும் காலத்தில் இலக்கியவகையாக ஏன் ஆகக்கூடாது’’ அன்னாவின் இந்த வார்த்தைகள் இந்த நாவலின் உள்ளீட்டை தெளிவாக விளக்குகிறது.

நடுவில் புகுந்து எதுவும் செய்யாதீங்க என்ற சிவநேசனின் வார்த்தைகள் வாசகன், தன்னிடமும் சொல்லப்பட்ட வார்த்தைகளாக உணர்ந்து நாவலை வாசித்தால் புதிய எழுத்தை, புதிய  நாவலை வாசிக்க முடியும். 

Sunday 14 October 2012

சோதனை முயற்சியே எழுத்தாய்.....


சோதனை முயற்சியே எழுத்தாய்.....

File:கவிஞர் பாலா.jpg

பாலா ..... 'கவி' கதைக்கவிதை குறித்து .... 

இன்றைய அனுகூலமற்ற சூழலில் கவிதைத் தொகுதி வெளியிடுகின்றவர்கள் சோதனை அவாவும் சாதனை வேட்கையும் நிறைந்தவர்களே. க.வை.பழனிசாமியின் இந்த கவிதை நூல் ஒரு ambitious project என்பது இதன் அச்சிலும் அமைப்பிலும் கதாநாயகன் பற்றிய சித்தரிப்பிலும் தெரிகிறது .

பாலா..... 'பிஞ்சு விழிகளில்' 

கவிதை நூலுக்கு எழுதிய முன்னுரையில் .....பழனிசாமியின் முந்தைய கவிதைத் தொகுதிகளில் இருந்து மட்டுமல்ல, இன்றைய பல கவிதைத் தொகுதிகளில் இருந்தும் வேறுபட்ட தொகுப்பு இது.

''வெண்மை ஒரு நிறமல்ல'' கவிதை நூலின் பின்னுரையில் பாலா ...

 மொழிக்குள் இன்னொரு மொழியை உருவாக்குவதில்தான் கவிதை வெற்றி பெறுகிறது. Poetry is creating a language  with in a language ) ஒரு வகையில் பார்த்தால் தனித்துவமான ஒரு வெளியீட்டு மொழியைச் சாதித்தலே கவிதை எனலாம். சங்கக் கவிகள் முதல் கம்பன் வரை யாரை நோக்கினும் மொழியைப் புதுக்கிப் புகழ்பெற்ற சரித்திரமே இலக்கிய வரலாறு என்று ஏற்றம் பெற்றுள்ளது.

 சிலர் நினைக்கிறார்கள்; ஒரு நற்கருத்தை எடுத்து வைப்பதே கவிதை என்று. நற்கருத்து கவிதையாக்கப்பட வேண்டும். அதுவே கவிதையாவதில்லை. விதவைத் திருமணம் பற்றி எழுதியதால் பாரதிதாசன் புரட்சிக்கவியாக மலரவில்லை. ''வேரிற் பழுத்த பலா'' என்றும் ''குளிர் வடிகின்ற வட்டநிலா'' என்றும் கொண்டாடப் படவேண்டியவர்கள் சமூகக் கொடுமையால் இதயம் துண்டாடப்படுகின்றார்களே என்று அவர் பாடிய முறைக்காகவே புரட்சிக் கவியாக கருதப்படுகிறார்.

 விடுதலை வேண்டும் என்ற நாட்டுப் பற்றுக் குரல் பாரதியைக் கவியாக்கவில்லை. ''தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா, இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்'' என்று எழுதித் தன் கருத்தைக் கலைநயப்படுத்திய காரணத்திற்காகவே பாரதியைச் சிறந்த கவி என்று போற்றுகிறோம்.

 கருத்துக்களை நேரடியாகத் தரும் முயற்சியே புதுக்கவிதை என்று சொல்கின்றவர்கள் இந்த உண்மையை மறந்து விடுகின்றனர். இன்றைய புதுக்கவிதையின் அயற்சி நிலைக்கு இதுவே பிரதான காரணம் எனலாம். கலை நயப்படுத்துதலில் புதுமையும் செழுமையும் கூடுகின்ற பொழுதுதன் புதுக்கவிதை வெற்றி பெற இயலும்.

 இத்தகைய தமிழ்க் கவிதைச் சூழலில் கவனிக்கத்தக்க ஓர் இளங்கவியாக மலர்ந்திருப்பவர் கவிஞர் க.வைபழனிசாமி. ''பொற்கைப் பாண்டியன் இல்லை'' என்ற தன் முதல் கவிதைத் தொகுதி முதல் அண்மையில் வந்த ''பிஞ்சு விழிகளிலே'' வரை தன் கவிதை மொழியைச் செப்பம் செய்து ஒரு நுட்பமான வெளியீட்டு மொழியை உருவாக்கிக் கொண்டுள்ளார் பழனிசாமி. அவரின் தனித்தன்மைக்கு  இன்னொரு சான்றாக வெளிவந்துள்ளது 'வெண்மை ஒரு நிறமல்ல' என்ற இந்தக் கவிதை நூல்.

 தன் உணர்வெல்லைகளைக் கவிஞன் தன் நோக்கிற்கும் போக்கிற்கும் ஏற்ப விரித்துச் செல்கின்றான். கனவு - நனவு என்ற பேதங்களற்று சிலரின் எல்லைகள் விரிகின்றன. நாடு மொழி என்ற எல்லைகளைத் தாண்டி சிலரின் பார்வை விரிகிறது. மனசைச் சீண்டும் ஒரு ஒற்றை ரோசாவின் சிரிப்பைச் சொல்லிக் காதல்வெளியில் பாடித்திரியும் பழனிசாமி இன்று மானுடம் முழுமையையும் அள்ளி அரவணைக்கும் பேருணர்ச்சித் திளைப்பில் மாறி நிற்பதை இந்நூல் வெளிக்காட்டுகிறது.

 மண்ணை, மனிதனை, இயற்கையை, மாநுட ஆற்றலை, மனிதப் படைப்புகளாம் கலை, கவிதை, அறிவியல் தொழில் நுட்ப வாழ்க்கையை பழனிசாமி தனதாக்கிக் கொள்கிறார்.''Bridal Mysticism'' என்ற வகைக் கவிதைகள் இறைவனை தலைவனாகவும் தன்னைப் பெண்ணாகவும் கற்பித்து எழுதப்படும் உணர்வு நிலைப்பாட்டை நாம் கண்டிருக்கிறோம்.

 பழனிசாமியின் இந்தக் கவிதைகளில் மானுடத்தை அவர் தனதாக்கி மகிழ்ந்தும், பிறராக்கி அறிவுறுத்தியும் மகிழ்வெய்துகின்றார். ஒரு நிரந்தரத்தை தன் நிகழ்காலச் சொற்களினால் கட்டிப்போட விழைகின்றார். தமிழுக்கு இது புதுக்கருத்து புதுச்சிந்தனை.

''உன் விழிகளில் விழுந்து
விடாது நீந்துகிறேன்
கைகள் சோர்வடையவில்லை.
நீல விழிகளுக்குள்
பிரபஞ்ச தூரத்தையே
பூட்டி வைத்துருக்கிறாய்.
உன்னுள்... உன்னுள்
கரைந்து போகிறேன்.
கரவது சுகமாகயிருக்கிறது''
என்று நேசிப்பில் தன்னை இழக்கிறார்.

''எழுந்து என்னோடு வா
வாழ்க்கையை
வாழ்கையின் வழியில் சந்திப்போம்.
இஸங்களின் இறுக்கிய பிடியில்
இற்றுப் போகாதே.
தவமும் தத்துவமும் தீர்வல்ல.
பிரச்னைகளுக்குத் தீர்வு...
பிரச்னைகளின் தளத்தில்.
உன் உள்ளே
உன் உலைக்களத்தில் உனக்குக் கருவி

என்று மானுடத்தை மாணவனாக்கி அறிவுறுத்துகின்றார். வாழ்வில் கரைகின்ற போதும் சரி, வாழ்க்கைக்கு கருத்துரை பகர்கின்றபோதும் சரி, பழனிசாமியின் சொற்களில் உள்ள தொனி உணர்வு நிலைப்பட்டு ஒலிக்கின்ற தன்மையால் கவிதையாக மலர்கிறது. தமிழுக்கும் தனக்கும் ஒரு புதுமொழியில் ஒரு புத்துரை வழங்கும் முயற்சி இது. 

 கலீல் கிப்ரான் கவிதைகளில் ஒரு 'தான்' நின்று ஆட்சி செய்யும். ஆண்டாள் கவிதைகள் 'தன்மை' நெகிழ்ந்து நம்மை வசீகரிக்கும் பழனிசாமியின் சொற்களில் இந்த இருவர் கவிதைகளின் ஒரு கூட்டு மொழியை நான் காண்கிறேன்.

Saturday 13 October 2012

'கவி'


'கவி' மீது தீபம் இதழ்


மரபுக் கவிதைகளின் ஆதிக்கம் குறைந்து புதுக்கவிதைகளின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கும் இன்றைய நிலையிலும் தொடரப்பட்டு, அங்கொன்று இங்கொன்றுமாக, சிறு சிறு காவியங்கள் எழுந்த வண்ணம்தான் இருக்கின்றன. அப்படி எழுந்தவொரு நூல்தான்  இந்த நூல் (கவி)

இன்றைய சமூகத்தில் இருக்கும் மனிதாபிமானமின்மை, போலி வாழ்க்கைமுறை, செல்வம் தேடலையே குறிக்கோளாகக் கொண்ட  வாழ்க்கை நெறி மற்றும் ஏமாற்றுத்தனம் ஆகிய குறைபாடுகளை நீக்கச் செய்வதற்கான மற்றுமொரு முயற்சியே இந்நூல். அநாதையாகப் பிறந்து சமுதாயத்தின்மீது காதல் கொண்ட கவிஞனாக மாறி முடிவில் ஏமாற்றுக்காரர்களால் நஞ்சிட்டுக் கொல்லப்படும் ஒரு கவிஞன்தான், இச்சிறு காவியத்தின் கதாநாயகன்.  

நூலாசிரியர் க.வை.பழனிசாமியிடம்  கவிதை இருக்கிறதென்பதை யாரும் மறுக்க முடியாது. உதாரணத்திற்கு சில :

ஊர்கூடி அழுதார்கள்
சொற்களில் மட்டும்
சோகம் ஒட்டிக்கொண்டிருந்தது
அங்கு
அழுவது....
தொழிலாக நடந்தது.

பட்டினிகள்
பந்தியில் புகுந்துவிட்டால்...
எறிகின்ற எச்சில்களுக்கு
எவர் வருவார்?

கவிஞன் என்பவன் அவனிடம் உண்மையான கவிதை குடிகொண்டிருக்கும் பட்சத்தில், மெல்ல மெல்ல ஒரு புரட்சிக்காரனாக மாறிப் போய்விடுகிறான். இதற்கு பாரதியே தலை சிறந்த உதாரணம். அதுபோலொரு புரட்சிகாரனய்த்தான் இந்நூலின் நாயகனும் சித்தரிக்கப்படுகிறான். ஆக, கவிதை தர்மமும், கவிஞனின் தர்மமும் இந்நூலில் காப்பாற்றப்படுகின்றன.

அட்டை, அமைப்பு, அணுகுமுறை, அபிப்பிராயம் என எல்லாவற்றிலும் ஒரு புதுமையைத் தெரிவிக்கிறது இந்நூல்.

'கவி' நூல் விமர்சனம்: தாமரை 1987 டாக்டர் இராகுலதாசன்

'கவிதை என் கைவாள்' என்ற முழக்கத்தை இன்று நம்மிடையே வாழும் ஒரு ஒரு நவகவி நமக்களித்தான். அந்த முழக்கத்தை மேற்கொண்டு, இன்று தமிழ்க் கவிதை படைத்து வரும் கவிஞர்கள் வரிசையில் கவிஞர் க.வை.பழனிசாமி கவனத்திற்கு உரியவராகிறார்.

பைபிள் நடையும், கவிஞர் கண்ணதாசனின் நடையும் நினைவு படுத்தும் எளிமை மனதை கவர்கிறது. கவிதை அமைப்பு மிக நெகிழ்ந்து போகிற இடங்களில், கருத்துக்கள் கூர்மையாக அமைந்து வாசகர்களை ஈர்த்துக் கொள்கிறது. நூலின் முக்கியமான பகுதி எனக் கொள்ளத்தக்க போராட்டப் பகுதி இன்னும் சிரிது விரிவாக, அமைக்கப்பட்டிருக்கலாம்.

இவன்
தான் வடித்த குருதியில்
சிவப்பானவன்.
உலகை
சிவந்து விழிக்கும்
உரிமையுள்ளவன்

என்ற வரிகள் 'கவியை' சரியாகவே நமக்கு அடையாளம் காட்டுகின்றன. 'தான் வடித்த குருதியில் சிவப்பானவன்' என்ற வரி - சிகாகோ நகரில் சிந்திய முதல் ரத்தத்தை நினைவுபடுத்தும் ஆழமுடையது.

'கவி'யும் அவளும் மணம் செய்து வாழத் தலைப்படுகின்றனர். வாழ்க்கை யாருடையதே ஆயினும், அது சூழ்நிலையால், சுற்றுப்புறத்தால் சமுதாயத்தினால் தான் தீர்மானிக்கப்படுகிறது என்ற சமூக விஞ்ஞான உண்மையைக் கவிஞர் பழனிசாமி மிகவும் ஆழமாகவே குறிப்பிடும் இடம் கவனத்துக்கு உரியது.

வாழ்க்கையின்
முதல் அத்தியாயத்தை மட்டும்
இருவரும்
எழுதி முடித்தார்கள்.
மீதி அத்தியாயங்களை
இவர்களின் அனுமதியின்றி
சமூகம் எழுதத் தொடங்கியது.

என்கிறார் கவிஞர். கவிதையும், காட்சி அமைப்பும், கவிஞரின் தெளிவான சிந்தனையும் ஒருங்கிணைந்து நிற்கும் சிறப்பான இடம் இது எனலாம்.

மனிதனை மனிதன்
நேசிக்கும் மந்திரமே
பூமி மூச்சிழுக்கும் காற்று.

வீதியின் புழுதியில்
வீழ்ந்து கிடக்கும் வாழ்வுகளை
கைப்பிடித்துக் கூட்டி வரும்
மதமும் இஸமும்
எனக்கு வேண்டும்.

உலகின் கோடியில்
அழுகின்ற குழந்தையை
அள்ளியெடுக்கும்
பொதுமொழி வேண்டும்.

என்று 'கவி' முழங்குகிறான். சாதி, இன, சமய, கால தேச வர்த்த மானங்களையெல்லாம் கடந்து நிற்கும் அந்தப் 'பொது மொழி' மார்க்ஸிய மொழிதான் என்பதை நூலுன் ஆசிரியர் கவிஞர் க.வை.பழனிசாமி ஆழமாகவே வெளிப்படுத்துகிறார்.

கவிஞரின் எழுதுகோல் சரியான திசை நோக்கித்தான் விழித்துப் பயணம் மேற்கொண்டிருக்கிறது. அதற்கான காரணத்தை அவரே முன்னுரையில்

தேவையின் உந்துதல்
பாலைவனத்தையும்
தோண்டிப்பார்க்கும்.
சூரியனையும் விழுங்கும்
சூழல்கள் அறிந்தும்
எழுதுகோல் உறங்குமா?

என்று சொல்கிறார். தமிழ்நாட்டின் தேவை அறிந்து, சூழல் அறிந்து, ஒரு நல்ல கதைக் கவிதை நூலினைத் தந்துள்ள கவிஞர் க.வை.பழனிசாமி பாராட்டுக்கு உரியவர்.  

'கவி' :


'கவி' :  மேலாண்மை பொன்னுசாமி  தீக்கதிர் இதழில்


புதுக்கவிதையில் ஏன் தேக்கம்? என்ற கேள்வியை எழுப்பிய கவிஞர் பாலா தனது முன்னுரையில் 'புதுக்கவிதையில் புதுமைகள் - சாதனைகள் செய்யாமலிருப்பதே' என்று பதிலும் தருகிறார்.

சாதனைகள் செய்கிற முதல் முயற்சியை துணிச்சலோடு துவங்கியிருக்கிறார் கவிஞர் க.வை.பழனிசாமி.

'கவி' என்ற தலைப்பில் ஒரு கவிதை நூல்; பல்வேறு கவிதைகள் அடங்கியதல்ல. இது சமூகம் தழுவிய, பிரபஞ்சம் தழுவிய ஒரு சமூக மனிதனின் வாழ்க்கையை கதையாகச் சொல்கிற ஒரே கவிதையைக் கொண்ட நூல்.

தேவையின் உந்துதல்
பாலைவனத்தையும்
தோண்டிப்பார்க்கும்.
சூரியனையும் விழுங்கும்
சூழல்கள் அறிந்தும்
எழுதுகோல் உறங்குமா?

என்ற பிரகடனத்தோடு பேனாவைப் பிடித்த இந்தக் கவிஞர்,

'புதிய வித்து பூமியில் விழும். மனித கீதம் மண்ணில் எழும்' என்ற வைரம் பாய்ந்த - பரபரப்படையா - அமைதியான நம்பிக்கையோடு, கவிதையைப் படைக்கத் துவங்குகிறார்.

ஒரு 'கவி'யின் கதை இது.  அவன் பெயர் என்ன? எங்கு பிறந்தான்? எந்த மாவட்டம்? என்ன ஜாதி? என்ற கேள்விக்கெல்லாம் ஒரே பதில்!

மனிதனுக்கு
மனிதன் என்ற பெயர் மட்டும்
மண்ணில் இருக்கும்.
பூமியைப் பிளக்கும் பிரிவினைச் சொற்கள்
அகராதியிலிருந்து அகற்றப்படும்.

கடலோரக் குப்பத்தில் காலத்தை ஓட்டுகிற இந்தக் கவியின் கவிதையையும் கவிதையின் சத்திய உஷ்ணத்தையும் நேசித்து ஒரு இளம்பெண் எதிர்படுகிறார்.

''அவளின் பெருவிரல் நுனியில் பெரிய புராணம் புதைந்து கிடந்தது. அடிதொடங்கி முடிவரை அனைத்து மொழி நூல்களும் அடங்கிக் கிடந்தன'' கவிதைகளை கருத்துக்களை விவாதித்தனர்.

''அவளின் வரவு ஏழ்மையின் முன்பு பொங்கி வைத்த சோறு. மூட்டை தூக்கும் மனித முதுகில் பூ வருடல். வர்க்க பேதங்களில் வாடிய பயிர்களிடை பெய்த மார்க்சீய மழை''

ஆயினும் அவளை எச்சரிக்கிறான்: ''என்னோடு நீ நடந்தால் பாலை வழிதான் உனதாகும்.''

''அவளோ முத்தெடுக்க வேண்டுமென்றால் மூழ்கத்தானே வேண்டுமென்றாள்.''

அவளோடு வாதாடித் தோல்வியுற்றான்.

''கவிஞன் அங்கு தோல்வியின் சுகம் தேடினான். அன்றுதான் காதல்மீதே காதல் கொண்டான்''

''காற்று கால்வைக்க முடியாத'' ''வானத்தின் முகம் பார்க்க முடியாத'' புறாக்கூண்டே வீடாகக் கிடைத்தாலும்.... காதலின் தாம்பத்திய அன்பின் வலிமையால் தாங்கி வாழ்கிறர்கள். அந்த வீடு வாழத் தகுதியற்றதாகிப் போனதால்... புறம்போக்கில் குடிசைபோட்டு வாழ்கிற சேரியில், இந்தக் கவியும் ஒரு கூடுகட்டிக் கொள்கிறான்.

அந்தப் புறம்போக்கு நிலத்தை ஒரு சாராய ஆலை அதிபர் கைப்பற்றிக்கொண்டு சேரியை காலி செய்யச் சொல்கிறார்.

பயந்து கதறுகிற மக்களுக்கு தைரியமூட்டி அணி சேர்த்து தலைமையேற்றுப் போராடுகிறான்.

குடிசைகள் தீ வைக்கப்பட.... அவன் மனைவி பிரசவ வேதனையில் நெளிய... ஜனங்களைத் திரட்டி சாலை மறியல் நடத்துகிறான் கவி.
பேச்சு வார்த்தைக்கு அழைக்கிற அதிகாரிகள், கவியை வஞ்சகமாய்க் கொன்று விடுகின்றனர்.

அவன் இறந்தாலும், அவன் குழுந்தை பிறக்கிறது. போராட்டம் தொடர்கிறது.

''நாளும் பிறக்கும் சூரியன்களை நாய்களா விழுங்கும்?'' என நம்பிக்கை மிகுந்த வரிகளோடு முடிகிறது இந்தக் காவிய நூல்.

இந்தக் கவிதை நூல்... சத்தியத்தை தீபமாக ஏற்றுகிறது.

அந்தத் தீப வெளிச்சத்தில் அரசின் முகமும், அதிகாரிகளின் குரூரமும், சமுதாயத்தின் முரணும், மத இன மோசடிகளும் சுத்தமாக அம்பலமாகின்றன.

இப்படியோர் உண்மை மிகுந்த ஒரு மனிதனின் வாழ்வைக் கருவாகக் கொண்ட சமூக நாவலையே கவிதை நூலாக காவியத் தன்மை நிறைந்த நூலாக படைத்துள்ளார் கவிஞர் க.வை.பழனிசாமி.

எந்தக் கவிஞரின் சாயலும் இல்லாமல்.... சொந்த முகத்தோடு இந்தக் கவிஞர் வெளி வந்திருக்கிறார். எந்தக் கவிஞரும் துணியாத ஒரு காரியத்தில் காவிய நூல் படைக்கிற செயலில் இவர் துணிந்து முனைந்து வெற்றியும் கண்டிருக்கிறோம்.

எந்த இடத்திலும் கவித்துவம் குறையாமல்... பூடகத் தன்மை படிந்து விடாமலிருப்பதில் கவிஞர் எச்சரிக்கையாய் இருந்திருக்கிறார் என்பது பாராட்டத்தக்கது.

Thursday 11 October 2012

என்னைப் பற்றி சில வரிகள்

என்னைப் பற்றி சில


    ஆட்டையாம்பட்டி சிறுவயதில் வளர்ந்த ஊர். 05 06 1951 - ல் சேலத்தில் பிறப்பு. பாரத ஸ்டேட் வங்கி சேலம் கிளை வேலை செய்த ஒரே இடம். சேலம் தமிழ்ச்சங்கம் இலக்கியப் பணியாற்றிய களம். 20 ஆண்டுகள் இலக்கியம் தெரியாதவர்களோடு போராடி வென்றது மகிழ்ச்சிதான்.

   நவீன இலக்கியத்தை முன்னெடுத்துச் சென்ற சங்கம் சேலம் தமிழ்ச்சங்கம். நண்பர் குவளைக்கண்ணன் கூறியது போல ஒரே தற்காலத் தமிழ்ச்சங்கம். இனி முடியாது என்பதால் தமிழ்ச்சங்கச் செயலாளர் பொறுப்பிலிருந்து நிரந்தர விலகல்.

 போதும் கூட்டங்களும் கூடிப் பேசியவையும். விருந்தாளிகள் போல் வந்து போன எழுத்தாளர்கள். தலையில் கிரீடமும் இலக்கியத் தலைமையும் எல்லா நேரமும் கோமளிகள் போல. வணிகச் சாமியார்களைவிட அதிக அலங்காரம்.
இவர்களுக்கு மத்தியில் அன்பாய் பிரியமாய் இப்போதும் இருக்கும் சில எழுத்தாள நண்பர்கள் நினைக்கின்றேன்.

   போதும் க.வை வெளியில் வாருங்கள் என்பார் நண்பர் ஆனந்த் எப்பொழுதும். கோவைக்கு வந்த பின்பு அன்போடு பழகும் ஞானி, கனல்மைந்தன் சி.ஆர்.ரவீந்திரன் இவர்களை இந்த நேரத்தில் மனம் நினைகிறது. ஓம்சக்தி ஆசிரியர் திரு பெ.சிதம்பரநாதன் விஜயா பதிப்பகம் வேலாயுதம் இருவரின் அன்பும் மகிழ்ச்சி தருகிறது. கனல்மைந்தன் எனது சகோதரர் மாதிரி நெருக்கமாகிவிட்டார். கவிஞர் சிற்பி எட்டும் தூரத்தில் இருப்பது சந்தோசமாக இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் சிலரோடு நெருக்கமாக இலக்கிய உறவுகொண்டது.... இலக்கியப் புரிதலுக்கு மேலும் வழி வகுத்ததாகக் கருதுகிறேன். சிறப்பாக காலச்சுவடு கண்ணன், பிரம்மராஜன், ஆனந்த், தேவதச்சன், ஹாலா, ஷாஅ, குவளைக்கண்ணன், மோகனரங்கன், நஞ்சுண்டன், சிபிச்செல்வன் சமீப கால எனது இலக்கியப் பயணத்தில் உண்மையோடும் அக்கறையோடும் வந்தவர்கள். நண்பர் ஷாஅ அவர்களால் திறந்துவிடப்பட்ட கதவு. மறைந்த கவிஞர்கள், மீரா, கந்தர்வன், பாலா ஆகியோரின் அன்பையும் பரிவையும் எல்லா நேரமும் நினைத்துப் பார்க்கிறேன்.

இதுவரையிலான நூல்கள்

''பொற்கைப் பாண்டியன் இல்லை'' 1984 டிசம்பர்
''கவி''  ஒரு கதைக்கவிதை. 1987 ஜூலை
''காதல்வெளி'' 1988 அக்டோபர்
''பிஞ்சுவிழிகளில்'' அக்டோபர் 1988
''வெண்மை ஒரு நிறமல்ல ஜூலை'' 1990
''கவிதைகளிலிருந்து கவிதை''   முந்தைய கவிதைகளின் தொகுப்பு
வேறு வேதம் அக்டோபர் 1997
உடலோடும் உயிர்

சிறுகதை

இடமாற்றம் - டிசம்பர் 1993

குழந்தைகளுக்கான கதை

கண்மணிக்கு அப்பாவின் கதைகள் - ஆகஸ்ட் 1991

நாவல்

மீண்டும் ஆதியாகி -  பிப்ரவரி 2000
ஆதிரை - ஆகஸ்ட் 2010

ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட கவிதை நூல்கள்

The New Wrecking Ball  - July  1990
The Fifth Way  -  April 2000
( Both Translated by Vijay Elangova )

Tuesday 9 October 2012

அறியாவியல் பற்றி ஒரு அற்புத எழுத்து

அறியாவியல் பற்றி ஒரு அற்புத எழுத்து

''மீண்டும் ஆதியாகி'' நாவல் மீது விமர்சகர், சாகித்ய அகாதமியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாலா 

 நம் வாழ்க்கை அதிசயங்கள் நிறைந்தது. அவலங்கள் சூழ்ந்தது. தீராத கனவுகளும் மடியாத ஆசைகளும் வருத்தும் நாட்களும் கொண்டது. அறிவின் கொட்டடியில் வதைபடும் காலங்களும் அனுபவச் சிலிர்ப்பின் கணங்களும் மனிதர்களுக்கு வாய்த்திருக்கின்றன. உலகை, வாழ்க்கையை, உணர்வுகளை அறிவால் வசப்படுத்த இயன்றிருக்கிறது. இதுவே பேச்சை, பகிர்வை இலக்கியத்தை நமக்குத் தந்துள்ளது. (தமிழில் பாருங்கள் 'மொழி' என்றாலே 'பேச்சு' என்று பொருள் வந்து விடுகிறது.

 அறிவுப் பகிர்வும் அனுபவப் பகிர்வும் நம் நாகரிகத்தின் சின்னங்கள். அறிவை நாம் பரப்பி வைக்கலாம், எவ்வளவு அகலமாகவும். அனுபவத்தை நாம் இறக்கி வைக்கலாம், எவ்வளவு ஆழமாகவும். அனுபவிக்கவும் அறிந்திடவும் அவற்றை பகிர்ந்திடவும் நாம் விரும்புகிறபோது நாம் படப்பாளிகளாகவும் மெய்ஞானிகளாகவும் மாறி விடுகிறோம். ஏனெனில் புலன்கள் பொது என்றாலும் அனுபவம் மனிதர்க்கு வேறு வேறு. நீள அகலங்கள் வேறு. மூளை பொது என்றாலும் அறிவுப் புலப்பரப்பு வேறு வேறு. படைப்பு மனோபாவமும் அறிவு முனைப்பும் கொண்ட மனிதர்கள் இவ்வுலகினை முற்றாக அறிந்திட விழைகிறார்கள். வான் எல்லை போல் அவர்தம் கேள்விகளின் பரப்பு எல்லையற்றதாகி விடுகிறது. 

 அறிந்தது பற்றிய மனித அறிவு, அறியப்படாதது பற்றி தீராமல் சர்ச்சை செய்து கொண்டுள்ளது. இதன் விளைவாக உயர்ந்த படைப்பு மனோபாவம் கொண்டவர்கள், அறியப்படாத உலகு / அறிவு பற்றிப் பேசுகிறார்கள். எதிரில் உள்ளதும் அறியப்பட்டதும் எதார்த்தம் என்பதால் 'அறியா இயல்' பற்றிப் பேசுகிறார்கள். 

 புரணங்கள், அவை உருவாக்கியுள்ள தொன்மங்கள், அவற்றை தீராத ஆவலுடன் எடுத்துண்ணும் பாமர வாசக மனங்கள் எல்லாம் அறியப்படாத உலகு பற்றிய கற்பிதங்களின் கவர்ச்சியை நமக்கு அறிவித்து நிற்கின்றன. கடவுள்கள், தெய்வங்கள், அரக்கர்கள், பிரபஞ்சங்கள் திக்குகள், திசைகள், காலங்கள் என்று எத்தனை கவர்ச்சி நிறைந்ததாக 'அறியா இயல்' அழகு காட்டுகின்றது.

 பேரளவு கொள்கை முனைப்பும், புனைவிச் சிறப்பும் கொண்ட படைப்பாளிகள் தங்கள் பங்கிற்கு 'அறியா இயல்' பற்றி அறிவித்து வருகிறார்கள். சமயங்கள் ஒரு பக்கம் 'பிரபஞ்ச அறிவை' முன்வைத்தன. அறிவியல் அறிஞர்கள் இன்னொரு பக்கம் இன்னொரு விதமான 'பிரபஞ்ச அறிவை' அடையாளம் காட்டினர். 'கடவுள் விண்ணில் இருக்கிறார்' 'நரகம் கீழ் உலகில் கிடக்கிறது' 'இருள் தீது, ஒளி நன்று' 'விதி வாழ்க்கையை கட்டி வைத்துள்ளது' 'மனிதரை மீறிய ஆற்றல்களால் மனித வாழ்க்கை வசப்படுத்தப்பட்டுள்ளது' இப்படியெல்லாம் கவர்ச்சி நிறைந்த கூற்றுகளால் 'அறியா இயல்' அறியப்பட்டுவிட்டது போல பாவனை செய்யப்பட்டும் கிடக்கிறது. 

 நோவா விடுத்த நாவாய், அதில் இனத்திற்கு ஒரு உயிர், உயிர்ப்பெருக்கத்திற்கு வழி... என்று ஒரு புனைவு. கடவுளின் உலகிலிருந்து ஒரு தங்கச் சங்கிலியில் தொங்கும் தோரணம் சுவர்க்கம். அதில் எழில் இறைத்த ஏடன் தோட்டம். அங்கு சுயம்புவான அழகுகளோடு ஆதாமும் ஏவாளும் என்று இன்னொரு புனைவு. ஓயாத பிரம்மாவின் கரங்களில் வார்ப்பு பெறும் உயிர்கள். அவற்றை காத்திட கையில் சுழலும் சக்கிரத்துடன் ஒரு கடவுள். அவற்றுக்கு ஓய்வு தர சிவனின் அழித்துக் காக்கும் பேரருள்... இப்படி ஒரு புனைவு. இவை யாவும் 'அறியாவியல்' என்னும் பரப்பில் நகரும் மனத்தின் காந்த ஊசிகள் விரித்திடும் அலைவு அதிசயங்கள். 

 சேலம் தந்த சிறப்புக் கவிஞரும் சிறுகதைக் கலைஞருமான க.வை.பழனிசாமி 'அறியாவியல்' பரப்பில் ஒரு அறிபயணம் நிகழ்த்தும் முயற்சியே 'மீண்டும் ஆதியாகி' என்ற இந்நூல். அதாவது, அறியாவியல் புதினம்(A tale of the Unknown). இதுவரை அறிந்த புதினங்களிலிருந்து இது வேறு வகை என்பதால் இதனைக் 'கடவுப் புதினம்' ( Trans - Novel )  என்றும் அழைக்கிறார். இதன் கருத்தியலில் பெண்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதாக இருப்பதால் இதனை 'பென்ணிய நாவல்' என்றும் குறிக்கிறார். 

 அறியாவியல் என்ற கதைப் பரப்புக்கு ஏற்றவாறு அசாதாரணமான நடையில் மொழியப்படுகிறது இந்த புதினம். ( பார்க்க.... சி. மணி இந்த நாவலில் வரும் மொழி நடை பற்றி எழுதியுள்ளதை ) எளிமையற்ற உரைகள், இடையில் மின்னல் ஏற்றிய உணர்ச்சிப் பெருக்கு, உரை நடையைத் தாண்டிய கவிதை உலகு, மெய்ஞான எழுத்தின் சொற்செல்வம், எல்லாம் சேர்ந்து இறுகிவிட்ட மொழி நடை. கதைஞராகிவிட்ட ஒரு கவிஞர் எழுதிய புதினம் இது என்று அறிவித்து நிற்கும் செதுக்கிச் சீர் செய்த நடை.

 வேறுவேறு எழுத்து வகைகளில் அச்சிடப்பட்டு ஏற்ற இறக்கங்களினை எழுத்தில் காட்டும் அச்சமைப்பு. ஓர் அந்தகாரப் பிரபஞ்ச ஒளியை இருளும் ஒளியும் நிறைத்துக் காட்டும் வெள்ளையும் கருப்புமான முகப்பு அட்டை. அதில் ஒளிக்கண் உருட்டும் பழனிசாமி என்ற பெயர்ப் பதிப்பு. அறியாவியலின் வளம் சுட்டும் வளமானப் பதிப்பு.

 மொத்தத்தில் பழனிசாமியின் 'மீண்டும் ஆதியாகி' பலவிதங்களில் தமிழில் ஒரு ஆதிப்படைப்பு. 

 நூலினை வாசித்துப் பாருங்கள். ஒரு பக்கம் அறிந்த நம் உலகு பற்றி பழனிசாமி வைக்கும் அனுபவ உரைகள். பொது வரிகள். இன்னொரு பக்கம் அறியா உலகு பற்றி பழனிசாமி புனையும் கற்பனை உரைகள். செதுக்கும் சிற்ப வரிகள். விரிக்கும் ஓவிய உரைகள். காலம் இன்று, நேற்று, நாளை என்று முக்காலமாக இந்தப் புதினத்தில் ஓடுகிறது. ஒரு பின் திரும்பும் காலமயக்கம் இதில் வருகிறது. 

 கதை மாந்தர்கள் சுவையானவர்கள். முதலில் முகமற்ற சதுரப்படுத்தப்பட்ட இக்கால ஆண்கள் பெண்கள். அடுத்து வருபவர்கள் நேற்றிலும் நாளையிலும் நிற்கும் மனிதர்கள். இவர்கள் இருவரும் ஒரு காலமயக்குப் போல சந்திக்கும்போது பிறக்கும் ஆதிபுத்திரி. ''உயிர் உறைந்து நின்ற கதைசொல்லியை நித்ய அன்பு ஏங்கி உயிர் துடித்த தூய பெண்ணின் அவஸ்தை தீண்ட மானுடம் பார்த்திராத வண்ணங்களில் ஆதிபுத்திரியின் கதை'' என்று கதைத் திறப்பு பேசுகிறது.

 மனிதம் பார்த்துக் கசிகிறார் பழனிசாமி.  சுயநலப் பெருங்கடலில் விழுந்து மீட்கப்பட முடியாத ஆழத்தில் மனிதம் கிடக்கிறதாம். உயிர் பறிக்கும் உணவு வேட்கையில் சிதைந்து கிடக்கிறதாம் மனிதம். உயிர்களிடை அழிவும் வாழ்வுமாக கிடக்கிறதாம் மனிதம். மனிதக் கடவுள் கைபிசைந்து நிற்க, மனிதம் தனித்து சுயவாழ்தல் வெறியில் தீய்ந்து கிடக்கிறதாம். இதனை மனிதத்திற்கு உணர்த்த வருகிறது ஆதி. அதாவது மறைபொருள். அதாவது மெய்ஞான இருள். மனித இறைக்கு மேலான ஆதி. மனிதர் அறிய முடியாத ஆதி... தானே கதைசொல்லியாகி வாசகனை அழைத்துச் செல்கிறது. 

 ஆதியின் முதல் அறிவு ஒரு சொல்லாக வருகிறது. இது தந்த முதற்பொருளின் வெளியீடே ஆதிவயல். மூலப் படைப்புகள் அங்கு தோன்றுகின்றன. ஆதிவயலெங்கும் உயிர்களின் முட்டல். வயல்வெளியில் ஒரு வைரக்குன்று. அதன் கருவரை வெடித்து முதல் மனித உயிர் நெடிய ஆகிருதியுடன். ஆதி விரும்பிய தூய வடிவில். 

 மனிதஆதி என்பது ஒரு பால் மானுடம். அது தன்னையே தான் கிழிக்க ஆதி வயலின் வேறு வேறு திசைகளில் பெண்ஆதியும் ஆண்ஆதியும் விழுகின்றனர். மெய்ஞான மறைபொருள் பெண்ஆதிக்குப் பரிவு செய்கிறது. 'தன் முதற் சொல்லை பெண் ஆதியின் உயிரில் உறைய வைத்தது.... பெண்மையே தான் எனக் காட்டியது'

 பகுதியாகிவிட்ட மனித ஆதிகள் தங்கள் மறுபாதி தேடி ஆதிவயல் பரப்பில் அலைகிறார்கள். முடிவிலாப் பிரபஞ்சங்களை படைக்கவல்ல படைப்பு மூலங்கள், ஆதிவடிவங்களில், வசீகர எழிலில் ஆதிவயலில். ஆதிவயலின் அனுபவம் சுமக்கிறார்கள். இருவரின் சந்திப்பில் முதற்காதல் பிறக்கிறது! உண்மையின் அழகாய் அதிர்ந்த ஆதிஆணுக்கும் ஆதி பெண்ணுக்கும், அன்று தோன்றிய காதலே உலகின் முதல் காதல் அனுபவமாகும். 

 பெண்ஆதியின் உள்உறைந்திருக்கும் 'ஆதிவார்த்தை' வினைபட, ஆதிவயல் கரைந்து பிரபஞ்சம் தோன்றுகிறது. மனிதஆதியின் இருபாதிகள் ஆதிவடிவம் துறக்க, மனிதவெளி விரிகிறது. இருவரையும் நிகழ்காலத்தில் தேடி கதைசொல்லி கதை நகர்த்துகிறது. நிகழ்காலத்து மனித வாழ்க்கை ஆதியின், அதாவது கதைசொல்லியின் வார்த்தைகளில். பாவம் எதையும் கதையாக்கிட முடியாமல் திணறுகிறது கதைசொல்லி. 

 ''நீள வான் விரிதலும், நட்சத்திர தெறிப்புகளும், பசிய தாவர அடர்த்தியும், நீண்ட அலகுகளில் நிலவைக் கிழித்துப் போகும் பறவைகளும், மண்ணில் பதித்து விரையும் அரவங்களும் மனதை அழகில் தீண்டிப்போக, மனிதர்கள்... பிடிக்காத புத்தகத்தின் எழுத்துக்களாக வெறுமையாகக் கிடந்தார்கள்'' 

 கதைசொல்லியின் பக்கங்களில் நிகழ்காலப் பெண்ணினம் சித்தரிக்கபடுகிறது. உணர்வுச் சொற்கள், உரையாடல்கள், ஒழுக்கப்பதிவுகள் எல்லாவற்றிலும் ஆதி அவமதிக்கப்படுவதாக நிகழ்கால மனிதம் பெண்ணைக் கட்டி வைத்துள்ளது. ஆதிவயலின் பெண்ஆதி ஒரு மரமாக எவராலும் வீழ்த்த இயலா விருட்சமாக நின்றிருக்க, காத்திருக்க, வெட்டுண்டிருக்க, நினைத்திருக்க, காலவெளி விரிகிறது.

 ஒரு காத்திருப்பின் நிறைவாக ஆண்ஆதி காற்றைக் கிழித்து புரவியாக வருகிறது. ஒரு இணைவினை முன்னிருத்தி ஆதி அதிர்கிறது. நிகழ்நாளில் கூடலில் பெண் அவமதிப்பும் புறக்கணிப்பும் கதைசொல்லியின் பார்வையில். மரமும் புரவியும் இணைய, இருப்பும் விரைவும் ஒன்றாக ஆண்ஆதி பெண்ஆதியின் சேர்க்கையில் கதைசொல்லி தன் ஆதிமகள் முகம் தெரிய பூமியில் தள்ளப்படுகிறாள். 

 காதல் தீயில் காலம் கண்ணாடி ஆறாய் உருகி வழிய அதில் காட்சிச் சித்திரங்கள் நகர, வாழ்வின் உள்ளும் புறமும் அறிகிறாள் ஆதிபுத்திரி. ஆதிமூலமாய் நடக்கிறாள் ஆதிபுத்திரி. மனிதர் உதிர்த்த நெறிகள், விதிகள் அவள் காலடியில். அவள் விழிகளிலிருந்து ஆதிமெய் இருள் இறங்குகிறது. மெய் இருள் பட்டு மனிதஇறை ஓடி ஒளிகிறது. மாற்றங்கள் மனிதர் உலகில். உயிர்கள் மறை இருளில். நித்ய நீரில் மூழ்கிய உயிர்கள். பூமிவெளி உயிர்கள் தூய்மை பெறுகின்றன.

 பிறிதொரு பரப்பில் ஆதிபுத்திரி இறங்க, தீவினை புரிந்த மனித இனம் கவடற மறைய, மானுட இறை மறைய, மீண்டும் ஆதிவயலில் ஆண்ஆதியும் பெண்ஆதியும் காதல் வெளியில், மீண்டும் ஆதியாகும் முயற்சியில். 

காலவெளி கணக்கில்,
பிரபஞ்ச இருப்பில்,
மறைபொருள் உண்மையில்
பொருளற்றுக்கிடக்கும் மானுடம்
நிகழ்கால இருப்பில்,
பெருமிதம் காட்டி பூமிவெளி திரியும்

என்று கதையாடலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறது கதைசொல்லி. அதாவது, தன்னுள் பெண் ஆதியை உணர்ந்த கதைசொல்லி, அதாவது க.வை.பழனிசாமி. அதாவது பெண்மை மேன்மை உணர்ந்த படைப்பாளி பழனிசாமி.

 இந்த என் சொல்லாடலில் நிகழ்கால வாழ்க்கையில் மனிதம் பற்றி பொதுவாகவும் பெண் உரிமை பற்றி சிறப்பாகவும் பழனிசாமி பேசியுள்ள பகுதிகள் தவிர்த்து, பிற கதையாடலை முன் வைத்துளேன் நான். 

 நான் மறைத்தது கருத்து மையம். விரித்தது புனைகதைவெளி.

 முன்னது அவரின் கருத்து வெளி. பின்னதே அவரின் கலைவெளி

 பின்னதே இந்தப் புதினத்திற்கு வனப்பும் ஈர்ப்பும் தருவது என்பதால், அதுபற்றி விரித்துரைத்துள்ளேன். நுட்ப திட்பங்கள் மேலும் காண நாவலுக்குள் செல்லுங்கள். 

 அண்மையில் கனடா நாட்டு ஒரு பெண் எழுத்தாளர் பெத் பிரான்ட்(Beth Brant)  என்பவர் எழுதிய சிறுகதை தொகுப்பு ஒன்றினை வாசித்தேன். 1991-ல் வெளிவந்த நூல் அது. அதில் 'இதுதான் வரலாறு' (This is History) என்று ஒரு கதை. பழனிச்சாமியின் நூலினை வாசித்தபோது பெத் பிரான்ட் கதை நினைவிற்கு வருகிறது. அதில் மனிதர் வரலாறு வருகிறது.

 ஆதியில் பூமி தோன்றும் முன் மனிதர்கள் வருமுன் ஆகாய உலகம்தான் இருந்தது. ஆகாய மக்கள்தாம் இருந்தனர். ஆகாய மங்கை ஒருத்தி தீராத அறிவு வேட்கை கொண்டவள். இந்த மேகங்கள் நம் உலகை தாங்கி நிற்பதாகக் கருதினாள். இவற்றுக்கு கீழ் என்ன உள்ளது என்று அறிய அவளுக்கு ஆவல். மேகங்களை விலக்கி.... நீள அகண்டம் அதற்குக் கீழ் விரிந்து தெரிவதைப் பார்ப்பாள் அவள். 

 ஒருநாள் தலைகுனிந்து பார்த்து நின்றபோது மேகங்களுக்கு இடையே தலைகுப்புற விழுந்துவிட்டாள். காற்றில் மிதந்தாள். கைகளை விரித்தாள். கரணங்கள் போட்டாள். வேகவேகமாக மிதந்தாள். அப்போது அவளை ஒரு கழுகு ஏந்திக்கொண்டது. 'நான் தான் பருந்து. உன் புதிய வீட்டிற்கு அழைத்துச் செல்ல நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்'. அதன் சிறகுகள் பற்றி அவள் அமர கழுகு பறந்தது. இன்னும் கீழே நீலநிறக் கடல் அழகு காட்டியது. அதிலிருந்து ஒரு ஆமை வெளி வந்தது. தலை நிமிர்ந்த ஆமை அவர்களைப் பார்த்து தலையாட்டியது. 

 மீண்டும் கடல் நீரில் முக்குளித்து எழுந்தபோது அதன் முதுகில் ஒரு கம்பளி எலி. அதன் கால் நுனியில் சிறிது மண். அந்த எலி சிறிது மண்ணை ஆமை முதுகில் வைத்துவிட்டுக் குதித்து விடுகிறது. அந்த மண்ணில் ஆகாயப் பெண்ணை இறக்கிவிடுகிறது கழுகு. 'பக்கத்தில் பைன் மரத்தில் இருப்பேன் நான். இங்கு நடப்பதெல்லாம் பார்ப்பேன் நான்' என்று சொல்லிவிட்டு கழுகு மறைய, தன் விரல்களால் ஈரமண்ணைத் தொடுகிறாள் ஆகாயப்பெண். ருசித்துப் பார்க்கிறாள். சுற்றிலும் உள்ள பசுமை காண்கிறாள். 

 ஆமை சொல்கிறது, 'நீ இங்கேயே இரு. இந்த இடத்தை புது உலகு ஆக்கு. அன்பாக இரு. என்னை அம்மா என்று அழை. உனக்கு உதவிட உயிர்கள் செய்வேன் நான். அவற்றைப் பார்த்து வாழ தெரிந்துகொள். நான் உன் அன்னை' என்று ஆமை சொல்ல, அதன் முதுகினை ஆகாயப்பெண் தொட்டு 'அவ்வாறே உன் சொற்கள் மதிப்பேன்' என்றாள். சொல்லிய அவள் உறங்கி விடுகிறாள். 

 அவள் உறங்கிய போது ஆமையின் முதுகு வளர்கிறது. உடைந்த இடங்களில் மலைகள். அதன் எச்சில் பட்ட இடங்களில் ஆறுகள், பொய்கைகள். அது சிலிர்த்த இடங்களில் புல்வெளிகள். அது வாய் திறக்க அதிலிருந்து உயிர்கள். இரு கால்கள், நான்கு கால்கள், ஆறு, எட்டு என்று விதவிதமாக. பூமி வந்தது. உயிர்கள் வந்தன. எழுந்த பெண்ணிடம் ஆமை சொன்னது 'உன் வயிற்றில் வளர்கிறது ஒரு உயிர் அது உன் போல்தான். ஆனால் உன்னைப் போல அல்ல. அவள் முதல் பெண் என்று அழைக்கப்படட்டும். நீங்கள் இந்த உயிர்களுக்கெல்லாம் பெயர்கள் வழங்குங்கள். அவை பேசும் முதல் குரல்தனைக் கேளுங்கள். அவற்றுடன் பேசுங்கள். நீங்கள் எல்லாம் என் படைப்புகள்' என்று சொல்லிவிட்டு உறங்கப் போய்விடுகிறது ஆமை. முதற் பெண் வருகையுடன் தொடங்குகிறது மனிதர் கதை. 

 இந்தக் கதையில் பெத் ப்ரான்ட் முன் வைத்தது ஒரு பெண்ணியம். 

பெண்தான் முதற் படைப்பு
பெண்தான் பெயர் தந்தாள்
பெண்தான் மொழி தந்தாள்
பெண்தான் தேடல் மனுஷி
பெண்தான் அறியா விதியின் தேர்வு. இத்தகைய புராணியம்தான் க.வை.பழனிசாமி கதையிலும் இயங்குகிறது. இவர் கதையில் வரும் பெண் சாதனைப் பெண். அவளின் வேதனை பற்றிய புதினமாக பழனிசாமி புதிய புராணியத்தை சமைக்கிறார். கிளைக்கதைகள் நிறைய இருக்கின்றன. 

 பழனிச்சாமியின் மொழியில் கடவுள், மதம், கல்வி, அரசியல், படைப்பு, எழுத்து.... எல்லாம் பற்றிய அவரின் கருத்துக்கள் சுவையானவை. ஒரு சிலருக்கு இது புராணமாக, மெய்ஞான நாவலாகத் தெரியலாம். எனக்கு வெளிப்படையான அரசியல் நாவலாகவும் தெரிகிறது. தீராத தேடல்எழுத்தின் நவீனத் தொடர்ச்சியாகவும் தெரிகிறது.

 அறியா உலகு பற்றி நான் அறிந்த எழுத்துகளில் பழனிச்சாமியின் எழுத்து போன்ற ஒரு தீவிரத் தன்மையை நான் இதுவரை கண்டதில்லை. அவ்வகையில் தமிழுக்கு ஒரு வளமான புதுவரவு இந்நாவல். 

Sunday 7 October 2012

அசாதாரணமான உள்ளடக்கம்



அசாதாரணமான உள்ளடக்கம் 

அதற்கு தக்க மாதிரி இறுக்கமான நடை சி.மணி -

 'மீண்டும் ஆதியாகி' நாவல் குறித்து


இந்த மொழி இறுக்கம் எப்படிக் கிடைத்தது?

இந்த வழிகளில்......

சொல், தொடர், வாக்கியம் என்று மூன்று கூறுகள் உண்டு. இவற்றின் ஒவ்வொன்றின் அளவும் கட்டுப்படுத்தப்படலாம்.

எ கா
மாலை / சாயங்காலம்;
மயக்கும் பொன்மாலை / மயக்கம் தருகிற பொன்னான மாலைப்பொழுது;
மனிதன் சாகிறான் / எந்த வயதிலும், எந்த வியாதியிலும் மனிதன் சிரமப்பட்டு, சந்தோஷத்தோடு செத்துக்கொண்டிருக்கிறான்;

மனிதன் மனிதனைக் கொல்கிறான் / சில நேரங்களில் பலவீனமான வயதான மனிதன் பலசாலியான இளம் வயது மனிதனை கொல்ல முடிந்தபடி இருந்து கொண்டே இருக்கிறது.

இவ்வாறு சொல் பொறுத்தவரை, நீண்டது சிறியது என்று தெர்ந்து எடுக்கலாம். ஆனால் சொல் இறுக்கம் தருவது அபூர்வம்; கவிதையிலும் கூட.

தொடர் பொறுத்தவரை நீண்டது, சிறியது என்று தெரிவு செய்யலாம். உருபுகள், அடைகள் என்று சேர்த்து தொடரின் நீளத்தை அதிகப்படுத்தலாம். இவ்வாறு அடைமொழி, குறைத்தும் சிறியதாகப் பயன்படுத்தியும், தொகை என்கிற (வேற்றுமை, உவமைத்தொகை) மாதிரி பயன்படுத்தியும் சிறியதாக்கலாம். 

வாக்கியத்திலும் இப்படி நீண்டது, சிறியது என்று தேர்வு செய்யலாஅம். சொல்லுக்கு பதிலாக நீண்ட சொல் அல்லது தொடரும், நிறைய நீண்ட தொடர்களும், வேற்றுமை விரி, உவமை விரி மாதிரி பயன்படுத்தியும் வாக்கிய நீளத்தை அதிகரிக்கலாம். இப்படி தொடருக்குப் பதிலாக சொல் பயன்படுத்தியும், தொடர்களே பயன்படுத்தாமலும் வாக்கியத்தைச் சிரியதாக்கலாம். எர்னல்ட் ஹெமிங்வே போல வினையடையும் பெயரடையும் பயன்படுத்தாமலும் இறுக்கம் தரலாம்.

இலக்கணப் பார்வையில் வாக்கியம் என்பது எழுவாய், பயனிலை என்று இரண்டு பகுதிகள் கொண்டது. பயனிலை என்பது வினைச்சொல், செயப்படுபொருள் உடையது. இவற்றில் எழுவாயாக ஒரு சொல் / நீண்ட சொல் / நீண்ட தொடர் என்று பயன்படுத்தலாம்; இதே மாதிரி செயப்பாட்டு பொருளுக்கும்  வினைச்சொல் என்பது செயப்படுபொருள் குன்றிய வினை / குன்றாத வினை, செயப்பாட்டு வினை / செய்வினை, தன்வினை / பிறவினை என்று பயன்படுத்தலாம். வாக்கியத்தின் நீளத்தை கட்டுப்படுத்த அல்லது சிறியதாக வைத்துக் கொண்டு இறுக்கத்தை அதிகரிக்க தன்வினை, செய்வினை, செயப்படுபொருள் குன்றிய வினை, பயன்படுத்தியும், பெயரடையும் வினையடையும் பயன்படுத்தாமலும் வினைமுற்றுக்குப் பதிலாக வினையெச்சம் பயன்படுத்தியும் பெறலாம்.

இவற்றுள் பலவற்றை க.வை.பழனிசாமி கையாள்கிறார். (எ கா) முதல் அத்தியாயத்தின் முதல் பத்தியைப் பார்க்கலாம்.

'உயிர் வாழும் தேவையின் அதிர்வு எல்லாவற்றிலும். கடல்வாழ் உயிரின் பெரிய வாயி ஒருநூறு சிறிய உயிர்கல். வலிய நாலு கால் விரித்து உயிர் கவ்வும் விலங்கு. நீர் மூழ்கி உயிர் கொத்திப் பறக்கும் பறவை. நீண்ட நாகம் விழுங்க, உள்நகரும் உயிர் முறிந்த உடல்கள். உயிர் மென்று உணவு ருசிக்கும் ஒருதூயிரின் உடலின்மீது கூட்டமாகக் கவிழும் சிறு உயிர்கள். உடல் வலித்துக் கத்தும் உயிரின் ஓசை துறந்து அதன் உடல் சுவைக்கும் மனிதன்'

இதில் ஏழு வாக்கியங்கள்; முதல் ஐந்து வாகியங்களில் வினைமுற்று இல்லை. ஆறாவது வாக்கியத்தில் இருக்கிற கவிழும் என்கிற சொல்லை வினைமுற்றாகவும் வினையெச்சமாகவும் கொள்ளலாம். அதனால் பொருள் மயக்கம் ஏற்படுகிறது. பொதுவாக வினைமுற்று வாக்கியத்தின் கடைசியில் வரும், அப்படிக் கடைசியில் வரவேண்டிய அவசியம் இல்லை என்றாலும் கூட. ஆனால் கவிழும் இடையில் வந்திருக்கிறது. அது படர்க்கை ஒருமை எதிர்கால வினைமுற்றாக இருக்கலாம்; அல்லது கவிழுகிற என்கிற அர்த்தத்தில் வரும் வினையெச்சமாக இருக்கலாம். இங்கே இந்தச் சொல் வருகிற இடம் இந்தக் கேள்விக்குரிய பதிலை நிச்சயப்படுத்தக் கூடிய இடமாக இல்லை. ஏழாம் வாக்கியத்தில் வலித்தல், கத்துதல், துறத்தல், சுவைத்தல் என்று நான்கு வினை வேர்கள். இவை நான்குமே வினையெச்சமாக வருகின்றன.


முதல் பத்தியிலே இப்படித் தொடங்குகிற இந்த நாவலின் அடுத்த பத்தியிலே, முதல் வாகியம் பின்வருமாறு.

'பரந்த பூமிவெளியெங்கும் வாழும் உயிர்களிடை உயிர் பறிக்கும் உணவு வேட்கை'.

சாதரணமாக இதை இப்படித்தான் எழுதுவோம். இந்த பரந்த பூமியின் வெளியெங்கும் (பூமிவெளியில் எங்கும்) வாழும் (வாழுகிற) உயிர்களின் இடையில் உயிரை பறிக்கும் உணவு வேட்கை இருக்கிறது.

இந்த இரண்டு வாக்கியங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நான் சொல்கிற சில அம்சங்களை பார்க்க முடியும். திரு க.வை.பழனிசாமி எப்படித் தன் வாக்கியத்தை சிறிதாக்குகிறார், அதனால் இறுக்கமாக்குகிறார் என்று தெரிய வரும்.

'வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலை தழிஇய தலைக்காவிரி' என்று தொடங்குகிற பட்டினப்பாலை பாடல் நானூறு வரிகளுக்குப்பால் வினைமுற்றோடு முடிகிறது. இறுக்கமாக எழுதப்படுகிற இடங்களிளெல்லாம் இப்படி வினைமுற்றுக்குப் பதிலாக வினையெச்சம் வந்திருக்கிறது.