Ads 468x60px

Social Icons

Saturday 6 October 2012

வார்தைகளின் பொம்மை விளையாட்டு



வார்தைகளின் பொம்மை விளையாட்டு


மனிதக் கண்படாத காட்டில்
செடிகள் மலர்த்தும்
பூக்களின் அழகும் வாசமும்
ஏதோ சொல்கிறது

*
யாரும் பார்க்காத கணங்களில்
வண்ணத்துப் பூச்சிகள்
பூக்களில் அமர்ந்து தேனுண்டு
சுதந்திரமாகப் பறக்கின்றன

*
பூமி கருகுமோ என
மனம் பதைக்கும்
தீ வெள்ளம் பெரும் காட்டில்

யார் சொல்லி
பிறவிகொண்டது மழை?

*
இடம் பெயராது
என்மீது விழுகின்றன
பூக்கள்

*
வெட்ட வெளியில்
காலூன்ற முடியாது
ஒருநாள்......
மனவெடிப்பில் விழுகிறது
இதுவரை அறிந்திராத விதை

*
நகராது நெருங்குகிறது
பள்ளத்தாக்கு

*
பள்ளத்தாக்கில்
பறந்துபோகிறது பறவை
யாரின் துணையுமின்றி

*
விதையை வருட
கீழிறங்குகிறது ஆகாயம்
மழைத்துளிகளில்

*
அரவம் ஊர்ந்து மேலேற
வளர்ந்து கிடக்கிறது மரம்

*
முட்டையின் ஓடு திறக்க
வெளிவரும் குஞ்சுகள்
மூச்சிழுக்கவென
காத்திருக்கிறது காற்று

*
சிறுத்தை மீண்டு
ஓடிவந்த புள்ளிமான்
நீர் அருந்த என நீள்தூரம்
நடந்து வருகிறது ஆறு

*
கட்டப்படாத அந்தப் பாலத்தில்
கனரக வண்டிகள்
சிரமமில்லாது
கடந்து செல்கின்றன

*
கலைத்துப்போடும் நிகழ்வில்
அறை
வசீகரமான கணங்களைத்
தெறிக்கிறது

*
பெயர்ந்து விழுந்த மரத்தின்
இலைகளுக்கு இடையில்
இலவம் பஞ்சு
வடிவம் குலையாது
ஊஞ்சலாடுகிறது

*
வார்த்தைகள் துறந்த அனுபவம்
மொழியின் தூசு படியாது
உள்ளே. . . . மன உள்ளே
மேலும் வண்ணமேறி
அந்தரங்கச் சுவரில் ஒளிர்கிறது


பூமியின் அழுக்கு


வானம்
வேர்களை நனைத்தது

தூரப் பயணித்து
சூரியன்
பூமி துலக்கியது

மனிதர்கள் நுழையாதக்
காட்டில்
மரங்கள் அடர்ந்தன

சமையல் அறைகள்
துறந்த வீட்டில்
எல்லா நேரமும்
உயிர்களுக்கு உணவு

யாரும் உதவாது
செடியில்
பூக்கள் மலர்ந்தன

சூழ்ந்த காற்றில்
கலந்தது வாசம்

தாவரப் பச்சையில்
தணிந்தது பசி

ஓடும் வண்டியிருந்து
நீளும் கைகள் எறியும்
அழியாத கழிவு பார்த்து
அஞ்சும் அந்த யாரோ!

No comments:

Post a Comment