Ads 468x60px

Social Icons

Tuesday 2 October 2012

மனம் எல்லாமும் செய்யும்

மனம் எல்லாமும் செய்யும்


ஏதோ நடந்து கால் முறிந்து விடுகிறது. வயிற்றில் புண் என்கிறார்கள். குடலில் உங்களுக்கு ரத்தக் கசிவு.... ஒரு வேளை கேன்சராக இருக்கலாம் என்ற சொல் அவன் காதில் விழுகிறது. இதய நோய்... மூன்று இடங்களில் அடைப்பு... இருதயத்திற்கு இரத்தம் போவது எந்தக் கணமும் நிற்கலாம்... மரணத்தின் விளிம்பில் இருக்கிறீர்கள். இப்படியான இடங்களில் நிற்கும் மனிதன் மேற்சொன்ன உடல் நோயிலிருந்து மீண்டு விடுகிறான். நவீன மருத்துவம் புத்துடல் கொடுத்து விடுகிறது. காரணம் இங்கே வலியின் இடம் தெரிகிறது. நோய், நாடி நோய் முதன் நாடி, இடம் அறிந்து சிகிச்சை செய்து மீட்க முடிகிறது. ரூப உடல்மீது அதற்கான கண்ணை விழித்து வைத்தியம் செய்து விடலாம். அரூப உடலில் ஏற்படும் வலியை... வலியின் இடம் அறிந்து வைத்தியம் செய்யும் சாத்தியம் இல்லை

மனம் நோயுற்றால்... மனம் பாதிப்பு அடைந்தால்... மனம் கட்டுப்பாடிலிருந்து விலகி விட்டால் ஒருவராலும் காப்பாற்ற முடியாது. மனம் ஒரு அரூப உடல். எல்லையில்லாது விரிந்து கிடக்கும் அந்த உடலை வெளியிலிருந்து யாரலும் பார்க்க முடியாது. விளிம்பில் நிற்காத வடிவம் மாறும் அரூப உரு.... மனம்.

மனம் சிதைந்து இறுதி வரை மீளாது இறந்த பெண்களின் துயரம் பெரிதினும் பெரிது. ஒரு மன நல மருத்துவனும் இப்படியான பெண்களை காப்பாற்றியதில்லை. சேலை விலகாத போதே நூறு முறை மார்பை மறைக்க சரி செய்துகொள்ளும் அந்தப் பெண்ணின் மனம் சிதந்தால்... வழுவினால்... நிர்வானம் அறியாது காட்சிப் பொருளாகி விடுகிறாள். சேலத்தில் இருக்கிறேன்... என் விட்டில் இருக்கிறேன்... வேலையாக இருக்கிறேன்... மலையில் சந்திக்கலாம் என்று கால இடம் அறிந்து பேசும் பிரக்ஞை விழிப்பு முற்றாக அழிந்து விடுகிறது. மன உடல் மடிந்தால்... உயிர் இருந்தும் பினம்தான். ஆம் மனம் தான் உண்மையில் உயிர். உடலைப் போற்றும் நாம் இந்த உயிரைப் போற்றிப் பாதுகாப்பதில்லை. மனம் சிதைந்தவர்கள்... உடல் இருந்தும், உயிர் இருந்தும் 'சதை உருவாய்' தன் இருத்தலை தானே அறியாது, வெறுமைமீது கண்கள் நிலை குத்திக் கிடக்கும் அவல நிலை.

மனம் இந்த இடம் போகாது பாது காப்பதே வாழும் கலை. இது பெரிய காரியம் அல்ல. மிக எளிதான ஒன்று. மனத்தின் மீதான வழுவாத பார்வை இருந்தாலே போதுமானது. குழந்தையைப் பார்த்துக்கொள்வதுபோல. குழந்தையை கை பிடித்து கூட்டிப்போவதுபோல. ஆம் மனம் ஒரு குழந்தை. நான் அதன் தாய். இந்த எண்ணம் வேரூன்றும் இடத்தில் மன நோய் என்பதே இல்லை. நோயில்லாத உடல் மீது எவ்வளவு மோகம்கொண்டு அலைகிறோம். அதைவிட கோடி மடங்கு மேலானது நோயில்லா மனம். மனத்தை நாம் பார்க்க முடிவதே நோய் இல்லா மனதின் முதல் அறிகுறி. மனதின் அசாத்திய திறன் குறித்து கொஞ்சம் யோசிக்கலாம்.

 இருத்தல் வாழ்தல் சார்ந்தது. ஒருவன் அறையின் சுவர்களுக்குள்ளேயே வாழ்ந்தும் மடியலாம். பெருவெளிச் சுவர்களின் மத்தியிலும் தன் வாழ்க்கையை விரிக்கலாம். இது மனித விருப்பம் சார்ந்தது. எண்ணம்தான் நம்மை அறைக்குள் அடைக்கிறது. எண்ணம்தான் அறையின் சுவர்களை உடைத்து பெருவெளி காண விழைகிறது.

எண்ணம் எல்லாமும் செய்யும். பூவை பூவாகவும் காட்டும். பூவை ஆதி மெய்ஞான மறை இருளுக்குள் நுழையவல்ல வெளிச்ச வாயிலாகவும் காட்டும். அதன் வினை அளப்பரியது. உடலின் விளிம்பை பிரபஞ்ச விளிம்பு வரை விரிக்கும் ஆற்றல்கொண்டது.
எண்ணத்தை அழகு படுத்துவது.... கலா பூர்வமாக மாற்றுவது மனம்தான். மனத்தை ஆள்வது பிரபஞ்ச பெருவெளிக்கே மன்னனாக முடி சூட்டிக்கொள்வதற்கு ஒப்பானது.

மனத்தின் கருவிகள் எண்ணம், சிந்தனை. மனத்தின் செயல்பாடு எண்ணம், சிந்தனை வழியாகத்தான் அமைகிறது. இவை இரண்டும் அரூப தூரங்களை கடக்கவல்ல பயண ஊர்திகள். இந்த பயண வழியிதான் நமக்கு உள்ளே ஒரு கண் திறக்கிறது. புத்தனுக்கு திறந்த கண் நமக்கும் திறக்க வேண்டிய அவசியமில்லை. நமக்கான ஒரு கண் திறக்க வேண்டும். ஒருவனின் சுயம் அதில்தான் வேரூன்றி இருக்கிறது. எண்ணமும் சிந்தனையும்தான் அதற்கான சாத்திய வழிகள்.

மனத்தை பழக்க வேண்டும். பிறகு அதை ஆளவேண்டும். குழந்தையை கை பிடித்து கூட்டிப் போவதுபோல அதைக் கூட்டிப்போக ஏண்டும். முன்பே சொன்னதுபோல மனம் ஒரு குழந்தை. பிறந்த குழந்தைமீதான கவனம்... பிறகு வளர்ப்பதற்கான கவனம். வளர்ந்து ஆளான பின்பு நிலைத்து நிற்பதற்கான சுய வலிமை. நம் பிள்ளைபோல ஆசையாகவும் அன்பாகவும் கண்டிப்போடும் வளர்க்க வேண்டும். இப்படி வளர்ந்த குழந்தை எண்ணத்தாலும் சிந்தனையாலும் மறைவெளிக்குள் ஒளியாக நுழைந்து மனிதக்கண் படாத இடங்களையும் பார்க்க வல்ல பார்வை பெறும்.

மனம் ஒரு குழந்தையாக ஆன பின்பு குப்பைத்தொட்டி போல பயன்படுத்த முடியுமா? மனத்தை காயப் படுத்தும் எதையும்.... மனம் தாங்காது தவிக்கும் எதையும்.... மனத்தை கனக்கச் செய்யும் எவற்றையும்.... மனம் வலிக்கும் ஒரு பொருளையும் உள்ளே போடு துனிவு வருமா? மனம் ஒரு குழந்தை என்று ஆனபின்பு மனத்திற்கு வலி தரும் எதுவும் உள்ளே போகதிருக்க உள்ளே தாயின் கருனை நாம் அறியாதே பிறவிகொண்டு விடும்.

குழந்தையை கொஞ்சுவதுபோல கொஞ்சுவோம். களிப்பில் குதூகலத்தில் கூத்தாடுவோம். முதலில் மனமும் நாமும் வேறாகக் கருதி வளர்க்க வேண்டும். பிறகு மனம்தான் நாம். நாம்தான் மனம் என ஒன்ற வேண்டும். நமது பார்வையில் வளரும் பிள்ளைபோல மனம் ஆன பின்பு மனம் ஒரு போதும் நோயின் பிடியில் ஆட்படாது.

மனம்.... நமது நண்பன்
மனம்.... ஒரு ஞானி
மனம்.... ஒரு அரக்கன்
மனம்.... ஒரு ஞாயிறு
மனம்.... ஒரு முடிவில்லா இருள்
மனம்... ஆயிரம் கதவுகளைத் திறக்கும்
மனம்.... கோடி ஜன்னல்களையும் கணத்தில் மூடிவிடும்

மனம்தான் பூக்களை மலர்த்துகிறது. பூவின் வாசம் பூக்களில் இல்லை. மனதில்தான் இருக்றது. வானம்... மனம். கடல்... மனம். கொட்டும் அருவி... மனம். அழகு... வசீகரம்... கோபம்... கொலை வெறி... ஆனந்தம் எல்லாமும் மனம். அகம்... புறம் எல்லாமும் மனம். மனமே உடல். மனமே உயிர்.

மனம்தான் உண்மையில் வாழும் வெளி. அழகிய அனுபவங்கள்தான் இந்த வெளியை கலா பூர்வமாக மாற்றுகிறது. வீடு... பூமி... பெருவெளி எதுவும் நாம் வாழும் இடமல்ல. அழகிய அனுபவங்களே உண்மையில் நாம் வாழும் இடம். இப்படியான அனுபவங்களுக்காக நகர்வதும் ஆட்படுவதும்தான் இருத்தலுக்கான மனிதப் பண்பாகத் தோன்றுகிறது.

மனம் ஆழமானது என்கிறார்கள்
பல்வேறு அடுக்குகள்கொண்டது என்றும் பேசப்படுகிறது
மனத்தைபற்றி அறிவியல் ரீதியாக உளவியலாளர்கள் ஆயிரம் சொல்லி இருப்பார்கள்.
நாளையும் இதன்மீது பலரும் வேறு வேறு பொருள் தந்து பேசலாம்

ஆனால் என் எண்ணம்.... என் சிந்தனை என்ன சொல்லுகிறது என்பதுதான் என் பாதைக்கான வெளிச்சம்.

மனம்
ஒரு பாத்திரத்தின் நீர்.

பாத்திரத்தின்
கொள்ளவுதான் பிரதானமானது

பிரபஞ்ச பாத்திரத்தில்
இடம்விடாது
நிறைந்திருக்கும் நீர்தான்...மனம்.

இதன் ஆழ அகலம்
பிரபஞ்ச தன்மையது.

இப்படியும் சொல்லலாம்.

மனம் எல்லையில்லாது விரியும் பாத்திரம்
அதன்
கொள்ளவு சொம்பு நீராகவும் இருக்கலாம்
பிரபஞ்சத்தையே மிடறு நீரகவும் வாங்கலாம்.

No comments:

Post a Comment