Ads 468x60px

Social Icons

Tuesday 2 October 2012

ஜோதியில் கலந்தேன்


வார்த்தையுடனான உறவு



நான் வார்த்தைகளை
நேசிக்கிறேன்

வார்த்தைகள்
எனக்கு ஒரு உலகை
சிருஷ்டித்து தருகிறது

மூச்சு முட்டிஇறக்காது
தவிக்கும்  நேரங்களில்
சில வார்த்தைகள்
நாசியில் காற்றுபோல
இறங்குகிறது

ஒன்றுமே தெரியாத
இருள்வெளியில்
மனம் விரும்பும் ஒரு
பெண்ணாக
நெருக்கமாக நடந்து வருகிறது

சில நேரங்களில்
மதுரஸம் போல
போதை தருகிறது

பசித்திருக்கும்பொழுது
உணவாக ருசி ஏறி
வயிற்றில் நிறைகிறது

பல நேரங்களில்
மொழியின் பிடியில் சிக்காது
உணர்வின் அணைப்பில்
கதகதப்பேறி
மனவெளியில் அலைகிறது

அனுபவவெளியில் பெருகும்
ரஸத்தின் சாற்றை
மொண்டு வரும் வார்த்தைகள்
தீராத கடல் முன்
சிறுவர்களின்
விளையாட்டுச் சொப்புபோல
பேரழகுகொள்கிறது

தொடக்கத்தில்
தொட்டில்மீது சுழன்றப்
பொம்மைகள் பற்றி
நடந்தேன்

கண்கள் தீண்டிய
வசீகரம் பார்த்து
தவழ்ந்தன கால்கள்

நீட்டிய விரல்கள் பிடித்து
தத்தி
விழுந்து எழுந்து நடந்தேன்

வீடு தாண்டி
தெருக்கள் கடந்து
தேசங்கள் சுற்றி வந்தேன்

எல்லையில்லா வெளி திணித்த
அனுபவங்கள் மீதும் விரிந்தன
மனதின் கால்கள்

எல்லா நேரமும் நடக்கிறேன்

தூங்கும்போதும்
மேஜையில் அமர்ந்து
உண்ணும்போதும்
நடப்பதை நிறுத்துவதே இல்லை

கால்களுக்கு முன்புபோல
பலம் இல்லை
உடல் சோர்வு, மனச் சோர்வு
இரண்டும் கலந்த வலி


இருந்தும் நடப்பது
நிற்காது நடக்கிறது

எதையோ அடைய
எதையோ பார்த்துவிட
பிறகு பார்த்தது சலித்து
அடைந்தது துறந்து

மீண்டும் நம்பிக்கை வளர்த்து
நடப்பது தொடர்கிறது

பயண தூரம் தெரியாமலேயே
பயணத்தில் இருக்கிறேன்

ஒவ்வொரு இடமாகப் பார்த்து
வேறுவேறு மனிதர்களோடுப்
பழகி
அனுபவம் அழியாது
வலியும் அழியாது
பயணம் தொடர்கிறது

சிலரோடு விரும்பி சேர்ந்து
நடந்தேன்
வேறு சிலர்... அவர்களே விரும்பி
என்னோடு நடந்தார்கள்

இறுதிவரை பயணம் உன்னோடு
என்று
நம்பிக்கை விதைத்துக் கூட
நடந்தார்கள்

மனம் விரும்பிய ஒரு
உறவை இறுக்கிப் பிடித்து
நின்றுவிட முடிவு செய்து
கைகள் நீட்டினேன்

வெற்றிடம் தீண்டிப் பயந்து
அங்கும் இங்கும் ஓடினேன்

முன்பும் பின்பும்
சுற்றிலும் பார்க்க யாருமில்லை

கண்டடைந்ததையாவது
கெட்டியாகப் பற்றி
மனவெளிக்குள் வாழ
உள்ளே எட்டிப்பார்த்தேன்

கூட நடந்தவர்கள்
நான் அறியாதே
கொட்டிப்போனக்
குப்பைகளே கிடந்தன

அழுக்கேறிய எனது
ரூப அரூப உடல்கள்
வெறுத்து.... ஒருநாள்


உள்ளேயும் வெளியேயும்
தீவைத்து
ஜோதியில் கலந்தேன்

No comments:

Post a Comment