Ads 468x60px

Social Icons

Wednesday 31 October 2012

ஒரு ஊடகத்திலிருந்து இன்னொரு ஊடகத்துக்கு


ஒரு ஊடகத்திலிருந்து இன்னொரு ஊடகத்துக்கு

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்


இப்பொழுதெல்லாம் நம் எழுத்துலகம் இரண்டு மூன்று மாதிரியானப் போக்குகளைக் கொண்டதாக விளங்குகின்றது. முதலாவதாக நாவல் என்றால் அந்தக் காலத்தில் கல்கி எழுதின நாவல்களை அல்லது அதுபோன்ற எழுத்தாளர்கள் எழுதின நாவல்களை எல்லாம் தலையனை நூல்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த காலம் மாறி இப்பொழுது அதுமாதிரியே பெரிய பெரிய நூல்களை எல்லாம் நாவலாசிரியர்கள் எழுதத் தலைப்பட்டிருக்கிறார்கள்.

இரண்டாவதாக அண்மைக்காலத்தில் நாவலாசிரியர்கள் அல்லது படப்பாளிகளுடைய சிந்தனை ஒரு தத்துவ விசாரப்போக்கிலே அமைந்திருக்கிற நிலையைக் காண முடிகிறது. அப்படிப்பட்ட ஒரு தத்துவ விசாரப்போக்கிலே அமைந்ததுதான் 'மீண்டும் ஆதியாகி' என்கிற இந்த நூல்.

இந்த நூலுடைய அமைப்பு மாத்திரம் அல்ல இந்த நூலிலே இருக்கக்கூடிய ஒரு மொழி நடையும் வித்தியாசமானதாக விளங்குவதைப் பார்க்கலாம். அதுமட்டுமல்ல இந்நூலாசிரியர் ஏற்கனவே இலக்கிய உலகத்தில் இருந்து வருகிற பிரமைகள் என்று கருதக்கூடியவைகளை உடைக்கிற நோக்கிலே இந்த நாவலை எழுதியிருப்பதாக தன்னுடைய முன்னுரையிலே அறிமுகம் செய்துகொள்கிறார். இது ஒருவகையில் சர்ச்சைக்குரிய நாவல்தான். விவாதத்திற்குரிய நாவலாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இது நாவல்தானா என்ற கேள்விகளைக்கூட பலர் எழுப்பலாம்.

ஆதியைச் சொல்வதன் மூலமாக நம்முடைய சமுதாயத்தில் சமகாலத்தில் இருக்கக் கூடிய பல தீமைகளை எதிர்த்து அடையாளம் காட்டுவது இவருடைய நோக்கம் என்பதால்தான் இதை முதல் பெண்ணிய நாவல் என்று குறிப்பிட்டுச் சொல்கிறார். ஆதி உயிரில் தோன்றிய அந்தப் பெண்ணைப் பற்றிப் பேசுகிறபொழுது பெண்களுக்கு இழைக்கப்படும் தீமைகளையெல்லாம் பற்றிப் பேசுகிறார். இதிலே பெண்ணியத்தைப் பற்றி அவர் விரிவாகப் பேசியிருக்கிறார்.

இதனுடைய அத்தியாயங்கள் பலவாறாக விரிந்தபோதிலும் கூட இதன் தொடர்ச்சியிலே ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு கதைபோல அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.

உதாரணமாக நாற்காலிகளைப் பற்றி ஒரு அத்தியாயம். இந்த நாற்காலிகளைப் பற்றிய அத்தியாயத்திலே நாற்காலி ஒரு பிம்பமாகிறது. அந்த நாற்காலி என்ற பிம்பம் மதத்தின் வடிவமாக வருகிறது. சமூகத்தினுடைய அழுத்தம் என்பதாக வருகிறது. எழுத்து என்ற இலக்கியத்தின் வடிவமாக வருகிறது. இவைகளையெல்லாம் சொல்லி இவைகளுக்கான போரிடுகிற மறுப்புக்களை சொல்லுகிற போக்கு அந்தப் பகுதியிலே காணப்படுகிறது.

'உன்னதமான எழுத்துக்கள் உன்னதமான மனிதர்களை உருவாக்கியதில்லை' என்று திடுக்கிடும்படியாகச் சொல்கிறார்.

ஒவ்வொரு பக்கமாகத் தாண்டித் தாண்டிச் செல்லுகிறபொழுது  இதைப் புரிந்துகொள்கிற முயற்சியும் ஒரு பக்கம் தேவைபடுகிறது. இன்னொரு பக்கம் அவருடைய கருத்துக்கள்தான் என்ன என்பதைப்பற்றிய ஒரு உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு சிக்கலும் நமக்கு அதிலே உண்டாகின்றது.

அடிப்படையிலே பார்த்தால் பழைய எழுத்திலே அவருக்கு ஏற்படக்கூடிய சலிப்பு, கதைசொல்லிகளுடைய திறமையில் ஏற்படக்கூடிய சலிப்பு, இவைகளை எல்லாம் அவர் சித்தரித்துப் போய்க்கொண்டிருப்பதனாலேயே, அதனுடைய விளைவாகவே இந்த நாவலை ஆசிரியர் உருவாக்கி இருக்கிறார் என்று தோன்றுகிறது.

இதிலே எல்லா சிக்கல்களும் வருகின்றன. மனித சமுதாயத்துனுடைய எல்லா சிக்கல்களையும் வெவ்வேறு இடங்களில் தொட்டுக் காட்டித் தன்னுடைய மன அதிர்வுகளை அவர் புலப்படுத்தி இருக்கிறார். இயற்கையின் அழிவைப்பற்றி, இயற்கையோடு ஒன்றிப்போகிற தன்னுடைய இயல்பு பற்றி அவர் பேசிக்கொண்டு செல்லுகிறார்.

இந்த நாவலின் நடை வித்தியாசமானதாக இருக்கிறது. ஒவ்வொரு எழுத்தாளனும் தன்னுடைய காலத்தில் மொழியினுடைய சாத்தியக் கூறுகளையும் மொழியினுடைய அமைப்பின் எல்லைகளைத் தாண்டிப் போகிற தன்னுடைய முயற்சியையும் பதிவு செய்ய வேண்டியவனாக இருக்கிறான். மொழியினுடைய வல்லமையை தன்னால் இயன்ற அளவுக்கு நகர்த்திக்கொண்டு போகிற ஆற்றல் படைத்தவனே சிறந்த எழுத்தாளனாக உருவாகிறான். அந்த வகையில் இந்த நாவலினுடைய இந்தப் போக்குகளுக்கு மத்தியிலே அவருடைய நடை ஆச்சரியமான தன்மைகளை உடையதாக இருக்கிறது.

'பூமி தாண்டிய பெருவெளி, மேஜை விரிப்பாகி கேலக்ஸிகள் அதில் பூக்களாக மலர, நாசிக்குள் பிரபஞ்ச வாசம்' என்று எழுதும்பொழுது அவர் ஏற்கனவே கவிதை படைக்கின்ற கவிஞராக இருக்கக்கூடிய அந்த நேர்த்தியையும் அந்த சொல் சிக்கனத்தையும் அடர்த்தியையும் நம்மால் காண முடிகிறது.

ஒரு ஊடகத்தில் இருந்து இன்னொரு ஊடகத்திற்கு வெகு விரைவாக மாறுகின்ற போக்கை அவருடைய எழுத்து வர்ணித்துக்கொண்டு போகிறது.

'இசை நிறமாக விரிந்து... ராகங்கள் தோற்றம் கொண்டு பார்க்க வல்லதாகவும் இருந்த அதிசயம். சொற்களின் பிடியில் சிக்காத அற்புதம். அப்பொழுது எழுந்த ஓசை, நகர்ந்த பொருள்களின் ஓசையா? அல்லது ஓசையின் நகர்தலா? என்று பிரிக்க முடியவில்லை. எழுந்த ஓசைகள் நிறவடிவம் கொண்டு வாசனையில் நகர்ந்தன' என்று சொல்லுகிறபொழுது அந்தப் புலன்களின் பரிமாற்றமும் ஊடகங்களின் பரிமாற்றமும் மாறிமாறிப் போகின்ற அந்த வேகத்தை அவருடைய நடையினுடைய குறிப்புக்குள்ளே நாம் பார்க்க முடிகிறது.

No comments:

Post a Comment