Ads 468x60px

Social Icons

Friday 5 October 2012

மேலும் ஒரு மெய்யியல்

மீண்டும் ஆதியாகி'' நாவல் மீது ஞானியின் பார்வை



ஒரு தீர்க்கதரிசியின் வசனங்களைப் போல உச்ச மொழியில் பேசுகிறீர்கள். தீர்க்கதரிசிபோல கதை சொல்கிறீர்கள். கவிதை சொல்கிறீர்கள். கோபத்தோடு பேசுகிறீர்கள். நிகழ்கால வாழ்வை முற்றாக உதறிக் கொள்கிறீர்கள். மனத்தின் ஆதி தேடி, மனித வாழ்வின் ஆதி தேடி, பிரபஞ்சத்தின் ஆதி தேடிப் பயணம் செய்கிறீர்கள். மனித வாழ்வை முற்றாகக் கலைத்துப்போட்டு ஆதிக்கத்திற்கு இடமில்லாத இன்னொரு வடிவில் மனித வாழ்வைப் படைக்கிறீர்கள்.

விவிலியத்தில் காணப்படும் தீர்க்கதரிசிகள், இஸ்லாமில் இடம்பெற்ற சூஃபிகள் இப்படித்தான் மனித உணர்வின் உச்சங்களில் செயல்பட்டார்கள். இவர்களை மன நிலை பிறழ்ந்தவர்கள், பைத்தியக்காரர்கள் என்றெல்லாம் ஆதிக்கத்தில் இருந்தவர்கள் குற்றம் சாட்டினார்கள்; சித்திரவதை செய்தார்கள்; கொல்லவும் செய்தார்கள்; சிலுவையில் அறைந்தார்கள்; கழுவில் ஏற்றினார்கள். இவர்களை மக்கள் மறந்துவிடவில்லை. காலங்காலமாக மக்கள் நெஞ்சில் இவர்கள் கனவுகளாய்க், காட்சிகளாய் இன்னும் விளைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் சித்தர்கள் இத்தகையவர்கள். இவர்களைத்தான் னீஹ்stவீநீ - க்குகள் என்று சொல்கிறார்கள். நீங்களும் இப்படித்தான் கவிதை மனத்தோடு, வாழ்வின் அடிப்படைகள் தேடி, மனம் முதலியவற்றின் ஆதி தேடி அலைகிறீர்கள். 20-ஆம் நூற்றாண்டு இறுதியில் தீர்கதரிசிகளின் தோற்றத்திற்கு நிச்சயம் இடம் உண்டு.

உங்கள் படைப்பை நாவல் என்று சொல்கிறீர்கள். கவிதை வடிவில் நாவல் எழுத முடியும். இதற்கு முன் உதாரணங்கள் உண்டு. நீங்கள் சொல்லும் கதையை ஜிணீறீமீ என்று குறிப்பிடுவது பொருத்தம்தான்; திணீதீறீமீ என்றும் குறிப்பிடலாம்; பெண்ணிய நாவல் என்பதிலும் ஐயமில்லை; ஜிக்ஷீணீஸீs நாவல் என்று குறிப்பிடுவதன் பொருள் புலப்படவில்லை. தமிழிலும் தளையசிங்கம் போன்றவர்கள் உங்களைப்போன்று தீர்க்க தரிசனத்தோடு கதை, கவிதை, கட்டுரை என்ற வேறுபாடுகளைக் கடந்து அற்புதமாய் எழுதியிருக்கிறார்கள். இடையிடையே இந்தப் படைப்புக்கான காரணத்தையும் பலமுறை சொல்கிறீர்கள். நீங்கள் தரும் விளக்கங்களை ஏதாவது ஒரு புள்ளியில்/ ஒரு இடத்தில்/ தளத்தில் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். என்னைப் பொருத்தவரை இதில் சிரமம் எதுவும் இல்லை.

எல்லாத் தீர்க்கதரிசிகளும் கவிஞர்களாக இருந்தார்கள். தமக்கானதொரு உலகைப் படைத்துக் கொண்டார்கள். புத்தர் முதலியவர்களும் இப்படித்தான் தமக்கான உலகைத், தக்கான வரையறைகள் மற்றும் எல்லைகளோடு/ எல்லையற்ற தன்மைகளோடு படைத்துக்கொண்டார்கள். கவிஞர்கள், சிந்தனையாளர்கள் மட்டுமல்லாமல் எந்த ஒரு மனிதனும், சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ இப்படி ஒரு உலகைப் படைத்துக் கொள்ளத்தான் செய்கிறார்கள். புறநிலை அளவில் உலகம் ஒன்றுதான் என்ற போதிலும், மனிதர்களின் அகநிலை அளவில் உலகங்கள் கோடி. மரத்தை வெட்டுபவனோ, ஒரு கற்பாறையை நெம்புகோலால் உருட்டுபவனோ ஒரு தளத்தின்மீது நின்றுகொண்டுதான் இதைச் செய்ய வேண்டும்; கருவி என ஒன்றையும் பயன்படுத்த வேண்டும். வெட்டுவதற்கான தேவை முதலியனவும் இருக்கத்தான் செய்கின்றன. நீங்கள் எடுத்திருப்பது இப்படியொரு படைப்பு.

தமிழகச் சூழலை மட்டுமல்லாமல் இன்றைய உலகச் சூழலையும் உள்வாங்கிக்கொண்டுதான் இயங்குகிறீர்கள். உலகளவிலான ஆதிக்கங்களையும் அவலங்களையும் நீங்கள் அழுத்தமாக உணர்ந்திருக்கிறீர்கள். தமிழகச் சூழலிலும் எத்தைனையோ வகை ஆதிக்கங்களும் அவலங்களும். மனிதர்களை இவை நோகடிக்கின்றன, கூறு போடுகின்றன. இந் நிலையில் வாழ்வின் அர்த்தங்களோ அலகுகளோ இவர்களுக்குள் இல்லை. உருவமும் உள்ளமும் திரிந்து தம்மைத்தாமே மறைத்துக்கொண்டு ஆரவாரம் முதலியவற்றில் தம்மைத்தாமே இழந்து இந்த மனிதர்கள் வாழ்கிறார்கள்.

மதம் என்றும் இலக்கியம் என்றும் கட்சிகள் என்றும் இவர்கள் தொடர்ந்து தமக்குள் பிரிந்தும் பிளவுபட்டும் அழிந்து கொண்டிருக்கிறார்கள். இலக்கியவாதிகள், படைப்பாளிகள் என்பவர்களும் இத்தகைய மூடத்தனத்திலிருந்து, மூர்க்கதனங்களிலிருந்து விடுபடாதது மட்டுமல்ல, இவற்றையே மூல பலமாகாக் கருதிக்கொண்டிருக்கிறார்கள்; மேற்கிலிருந்து வாங்கிய படைப்புகளை மறுவார்ப்பு செய்கிறார்கள்; தமிழின் ஆழங்களுக்குள் இவர்கள் செல்வதில்லை.; தமிழை நேசிக்கவும் இல்லை. சமூக அக்கறை உடையவர்களைப் போல இவர்கள் வேடம் போடுகிறார்கள். வேடம் போடுபவனுக்குத் தன் சுயம் தெரியாது. சுய விமர்சனம் இவனால் செய்து கொள்ள முடியாது. இவர்கள்தான் இன்று எல்லா அரங்குகளையும் அடைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களிடமிருந்து விலகிச் செல்ல வேண்டும். மனிதனை திரும்பவும் படைப்பது எப்படி என்று சிந்திக்க வேண்டும். மனிதன் மீது குவிந்துள்ள எல்லாச் சுமைகளையும் எல்லா வார்ப்புக்களையும் கேள்விக்குட்படுத்தி ஆராய வேண்டும். இத்தகைய ஒரு ஆய்விலும் நீங்கள் ஈடுபட்டிருக்கிறீர்கள்.

மனிதனின் வரலாறு, தத்துவங்கள் முதலிய பலவற்றையும் தொடர்ந்து புரட்டிப்பார்ப்பதோடு, மனிதனின் ஆதிநிலை தேடிச் சென்ற எத்தனையோ மனிதர்களை நாம் இப்பொழுது நினைத்துக் கொள்கிறோம்; பிளாட்டோ முதலியவர்கள் இப்படிச் செய்தார்கள். விவிலியத்தில் கூறப்படும் ஆதாம், ஏவாள் கதை இப்படி ஒரு மூலம்/ ஆதி தேடும் கதை. தெய்வத்திடமிருந்து மனிதன் எப்படிப் பிரிந்தான் என்பதற்கான காரணம் தேடும் கதை. மூலத் தீவினை என்றும் அப்புறம் கடவுள் என்றும் சாத்தான் என்றும் கதை சொல்ல நேர்ந்திருக்கிறது. அநேகமாக எல்லா மதங்களும் இப்படி ஒரு படைப்புக்கதையை சொல்லிதான் ஆக வேண்டும். எல்லாத் தத்துவவாதிகளும் மனிதனின் துயரம் முதலியவற்றுகான ஆதியை தேடி இருக்கிறார்கள்.; புத்தர் முதலியவர்களும் இப்படிச் செய்தார்கள்.; ஹெகலும் ஒரு கதை சொன்னார்; மார்க்ஸ் சொல்வது இன்னொரு கதை. வரலாற்று ஆசிரியர்கள், பொருளியல் அறிஞர்கள் முதலியவர்களும் இப்படி தன் நோக்கில் ஆதியைத் தேடுகிறார்கள்.

நாட்டார் கதைகளிலும் ஆதியைத் தேடுகிற அற்புதமான கதைகள் உண்டு. 'பண்டோராவின் பெட்டி' என்ற கதை நமக்குத் தெரியும். தமிழிலும் தேடினால் படைப்புக் கதைகள் கிடைக்கும். சைவம் சிவன் சக்தி என்ற ஒரு கதை கூறுகிறது. நிகழ்கால வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் முரண்பாடுகள் சிக்கல்கள் முதலியவை எங்கிருந்து தொடங்குகின்றன என்பதற்கான தேடுதல் இத்தகையது. சிக்கல்கள் நமக்குள்ளும் வந்துவிட்டன. நமக்குள்ளும் தேடியாக வேண்டும். தேடிச் சென்றால் ஏதாவது ஒரு விளக்கம் கிடைக்கும். அதை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும். அப்புறம் அதை வைத்து எல்லாவற்றையும் விளக்குவதாகிய முயற்சியைச் செய்ய வேண்டும். இதைத்தான் எத்தனையோ பேர் செய்திருக்கிறார்கள். இவர்கள் வரிசையில் இப்பொழுது உங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை உண்டு. உங்களுக்கும் உண்டு.

வரலாற்றுக்குள் தேடிச் செல்வதைப்போலவே மனத்தினுள்ளும் இப்படி ஆழமாகத் தேடிச் செல்ல முடியும். மதங்கள் குறித்து பிராய்டு தந்த ஒரு விளக்கம் இங்கு குறிப்பிடத்தக்கது. நிகழ்காலத் துயங்களிலிருந்து விடுபடத் தவிக்கும் மனிதன் தனக்குள் தொடர்ந்து செல்லும்பொழுது, தன் குழந்தை மனம் கடந்தும் தாயின் கருப்பைக்குள் செல்கிறான். அந்தக் கருப்பையின் அற்புதமான பாதுகாப்பு இந்த உலகில் எங்கும் இல்லை. மதம் என்பது இப்படி கருப்பை தேடும் முயற்சிதான் என்றார் பிராய்டு. தியானம் முதலியவற்றில் ஈடுபடுபவர்கள் தம் மனதிற்குள் ஆழ்ந்து சென்று இறுதியில் மனம் கடந்த நிலைக்குள் செல்கிறார்கள்/ செல்வதாகச் சொல்கிறார்கள். ஜே.கே ஓஷோ முதலியவர்கள் நம் காலத்தில் இத்தகைய தியான முறை குறித்து விவரிக்கிறார்கள்.

மனம் கடந்த நிலைக்குள் செல்லும்பொழுது, சில சந்தர்ப்பங்களில் இவர்கள் உள்ளொளி, நிதர்சனம், காலாதீதம் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். இவர்கள் தெய்வம் பற்றிச் சொல்வதில்லை; ஆனால் தெய்வத்தன்மை என்று பேசுகிறார்கள். வாழ்வின் முரண்பாடுகளிலிருந்து விலகி நிற்கிறார்கள். எல்லாவற்றையும் ஒரு காட்சியில் பார்க்கிறார்கள். ஜென் என்று பேசுகிறவர்களும் இத்தகையவர்கள். இவர்கள் எல்லோருமே தம் மனத்தைக் கடந்து ஆதி நிலை தேடிச் செல்வதாகச் சொன்னவர்கள். அப்படி ஒரு நிலை இருக்கத்தான் வேண்டுமென்ற நம்பிக்கையோடு இவர்கள் சென்றார்கள். காலந்தோறும் மனிதர்கள் மனிதர்கள் புணைந்து வைத்திருக்கிற காரண காரியங்கள், தர்க்கங்கள், அமைப்புக்கள், கல்விமுறை முதலியனவெல்லாம் இவர்களுக்கு உடன்பாடில்லை. இவர்கள் தேட்டம் தீவிரமானது என்பது மட்டுமல்ல. உண்மையானது என்பதிலும் அய்யமில்லை. நீங்களும்தான் இப்படி ஆதியைத் தேடுகிறீர்கள்.

மனத்தைக் கடந்து, வரலாறு கடந்து, வாழ்வு கடந்து, அப்புறம் பொருள் கடந்து, இயக்கம் கடந்து, பிரபஞ்சம் கடந்து இயங்குகிற ஆதி என்பது குறித்து நீங்கள் நிறையப் பேசுகிறீர்கள். அற்புதமான வர்ணனைகள் தருகிறீர்கள். ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாதது அந்த ஆதி. ஓயாமல் உயிர் / உயிர்கள் என்று பேசுகிறீர்கள்; ஆண் ஆதி என்றும், பெண் ஆதி என்றும் பேசுகிறீர்கள்; மறைபொருள் என்றும் இருள் என்றும் பேசுகிறீர்கள்; மெய்ஞானம் கடந்த மறைபொருள் என்றும் விவரிக்கிறீர்கள்; ஆதிவயல் என்கிறீர்கள். ஆதி என்பது பொருளாகவும் சிந்தனையாகவும் இல்லை. அது உணர்வாக இருக்க முடியும் என்று நான் புரிந்து கொள்கிறேன். பிரபஞ்சத்தின் தொடக்கம் குறித்து அறிஞர்கள் ஆய்கிறார்கள். பிரபஞ்சம் ஒன்றல்ல எத்தனையோ என்றும் கூறுகிறார்கள்.

மூலப் பெருவெடிப்பிலிருந்து வெடித்துப் பரவுகிற பிரபஞ்சம் மீண்டும் சுருங்குகிறது என்றும் கூறுகிறார்கள். மீண்டும் இது வெடிக்கிறது. பிரபஞ்ச இயக்கத்தில் விடுபடாத எத்தனையோ புதிர்கள். இவற்றையெல்லாம் விளக்கத் தொடரும் கோட்பாடுகள். இவற்றுக்கிடையில் முரண்பாடுகள், மனித வாழ்வின் சிக்கல்கள் என்று தொடங்கி இவற்றுக்கான காரணம், இயக்கம் முதலியவற்றைத் தேடிச் செல்லும்பொழுதுதான் வரலாறு, பொருளியல் என்றெல்லாம் பேசுகிறோம். இவை போதா என்று கருதி கடவுள், சாத்தான் என்றெல்லாம் இடையில் பேசி பிறகு இவற்றையும் ஒதுக்கிவிட்டுப் பிரபஞ்சத் தொடக்கம் என்று பேசி பிறகு அதற்கப்பாலும் செல்வதாகவும், செல்ல முடியுமென்றும் நாம் கருதுகிறோம். விஞ்ஞானிகள் ஒரு புறம் இயங்க, தீர்க்கதரிசிகள் முதலியவர்கள் தம் மனத்திற்குள் பயணம் செய்து, பிறகு மனத்தையும் / அறிவையும் கடந்து சென்று உயிரியக்கத்தின் ஆதியைத் தேடுகிறார்கள்; தம் கையில் ஆதி அகப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

எல்லையற்ற ஒன்றுடன் இணைந்திருக்கிற ஆதி என்பதை நம்மால் கண்டறிய முடியுமா? என்பது மிக முக்கியமான, கடும் சிக்கல்கள் நிறைந்த ஒரு தீவிரமான கேள்வி. நம் அறிவு, உணர்வு முதலியவற்றின் இயக்கத்தில் பெரும் தீவிரம் கொண்டு, இடையறாது முயன்று, நம் உணர்வுகள் முதலியவற்றை மேலும், மேலும் தொடர்ந்து தீவிரப்படுத்திக் கொள்ளும் ஒரு பயணம் என்று இதைக் கூற முடியும். உணர்வுகள் உச்ச நிலையில் இயங்குகின்றன. இடையில் எத்தனையோ மனக் காட்சிகள். மனம் சிதறாமல் இருக்க வேண்டும்; சிதறுவதற்கு இங்கு வாய்ப்புக்கள் உண்டு. எனினும் இந்த ஆதி தேடும் ஒரு முயற்சி என்பது ஒருவகைத் தர்க்கம், மனித தர்க்கம் என்றுதான் தோன்றுகிறது. பிரபஞ்சம் பொருண்மை கொண்டது / பொருள் சார்ந்தது என்றால், பொருண்மைக்கு அப்பாற்பட்டதாக ஆதி இருக்க வேண்டும். உணர்வுகள் என்பவை நரம்பு மண்டலம் சார்ந்த ஒரு இயக்கம். நரம்பு மண்டலம் என்று சொல்லும்பொழுது மனிதர், விலங்குகள், பறவைகள் குறித்துத்தான் பேசுகிறோம். தாவரங்களுக்கும் உண்ர்வுண்டு. தாவரங்களுக்குள் நடைபெறும் உணர்வியக்கம் எப்படி நடைபெறுகிறது என்பது எனக்குத் தெரியவில்லை. நரம்புத் தொகிதி இல்லாத ஒரு களத்திலும் உணர்வுகள் / சிந்தனைகள் இருக்குமென்று எனக்குத் தெரியவில்லை. ஆதி என்பது ஒரு பொருள் அல்ல; உணர்வு நிலை; மனிதனுக்குள் சாத்தியப்படுகின்ற, தர்க்க ரீதியாக தனக்குள் நிணயம் செய்து கொள்ளுகிற ஓர் உணர்வு நிலை. விலங்குகள் இப்படி சிந்திக்க முடியாது. தன்னையும் தன்னைச் சூழ உள்ளவற்றையும் விளக்குவதற்கு மனிதன் கண்ட இந்தத் தர்க்கம், மனித எல்லைக்கு அப்பால் இப்பொழுது இயங்குவதாக நாம் கருதிக் கொள்ள வேண்டும்.

உயிர் என்றும், உயிர்கள் என்றும் பேசுகிறீர்கள். உடலையும், உயிரையும் வேறு படுத்துகிறீர்கள். ஒரு உயிராகிய ''அமீபா'' வுக்கு அப்பால் நாம் செல்ல முடியாது. உடலோடு கூடியதுதான் உயிரியக்கம். உயிரியக்கம் எப்படித் தோன்றியது என்பது தொடர்ந்து ஆய்வுக்குரியது. உடலிலிருந்து தனித்து உயிர் என்று நம்மால் பேச முடியாது. விண்வெளியில் இருந்து உயிர் வந்ததாகவும் சிலர் சொல்கிறார்கள். ஒரு கருதுகோள் என்று இதைக் கருத முடியுமே ஒழிய இதற்கு மேல் நாம் எதையும் சொல்வதற்கில்லை. அரிவுலகத்தின் ஆய்வு இதுவரை செல்கிறது. மதவாதிகள் அறிவு கடந்து தம்மால் செல்ல முடியும் என்று சமயவாதிகள் சொல்கிறார்கள். இனிக் கடவுள், ஆன்மா என்று பேச முடியும் என்றும் எவ்வளவோ சொல்லிக்கொள்ள முடியும். மனிதனை விளக்குவதற்கான கருத்தாக்கங்கள் என்று இவற்றை நாம் கருத முடியும்.

இங்கு மனித தர்க்கம் தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்வதுதான் அறிவுடமை. உயிர் தனியே இயங்கும் என்றும் பொருள் இல்லாத நிலையிலும் உணர்வு இயங்கும் என்றும் பிறகு அதுவே பொருள் மற்றும் பிரபஞ்சத்தைப் படைத்துக் கொள்கிறதென்றும் அதற்கு ஏதோ ஒரு நோக்கம் இருக்கிறதென்றும்மத வாதிகள் பேச முடியும்; தம்மைத் தாமே கொண்டாடிக் கொள்ள முடியும்; புத்தரும் கூட இப்படி ஒரு இறுதி நிலை பற்றிப் பேசினார்; அதை சூன்யம் என்றார்; நிர்வாணம் என்றார்; பேரறம் என்றார்; சூன்யம் என்பது பூஜ்யம்; ஒன்றுமற்ற ஒன்று; பூஜ்யத்திற்கும் ஒரு மதிப்புண்டு. அறவே மதிப்பில்லாத முழுமையான வெறுமை குறித்து மனிதனால் சிந்திக்க முடியாது. பூஜ்யம் என்பது மனிதனின் சிந்தனை; எல்லைக்குள் கண்ட ஒரு தர்க்கம். இப்படி ஒரு தர்க்கம் இல்லாது கணிதம் இயங்காது; அறிவியலோ வாழ்வோ இயங்காது. இதப் பேரறம் என்று சொன்னது ஒரு அற்புதம்.

இப்படி எல்லாம் நாம் சொல்வதனால் உங்களை மறுக்கிறேன் என்று கருத வேண்டாம். உங்களுக்குள் இயங்கும் தேடுதலை மதிக்கிறேன், பாராட்டுகிறேன், புரிந்துகொள்கிறேன். இதை மேலும் ஒரு மதவாதம் என்று நான் சொல்ல மாட்டேன். ஒரு தீர்க்கதரிசி என்பவர் நிறுவன வடிவத்திலுள்ள மதத்தை எளிதாகக் கடந்து செல்பவர். மனித வாழ்வில் இருந்து எல்லா வகையான குறைகளையும் களைய முனைபவர் அருளாளர். இந்தளவுக்கு உங்களை நான் கொண்டாட முடியும். பிரபஞ்சம், உயிரியக்கம் குறித்து எத்தனையோ புதிர்கள். இவற்றைக் கருத்தில் கொண்டு நாம் இயங்க வேண்டும். என்றைக்கோ இந்தப் புதிர்களை அறிவியல் கண்டு தெளிவு படுத்தும் என்று சொல்லிக்கொண்டு இன்றே விடை கிடைத்துவிட்டதைப் போலவும் இன்றுள்ள எனது அறிவு கொண்டே இவை குறித்து என்னால் முடிவு கட்ட முடியும் என்பது போலவும் என்னால் சிந்திக்க முடியாது.

அற்புதங்கள் நம்மைச் சூழ இன்றும் நிகழ்கின்றன. நாளை நடை பெறுவதை இன்றே சிலர் சொல்கிறார்கள். கைரேகை, ஜோதிடம், எண்சோதிடம் முதலியவற்றை முற்றாக ஒதுக்குவதற்கில்லை. நீங்கள் திரும்பத் திரும்பச் சொல்வதைப் போல இதுவரை மனித குலம் அறிந்தது குறைவு. அறியாதது அளவற்றது. ஒரு மனிதன் என்ற முறையில் என்னை நானே இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்குள்ளும் எத்தனையோ உணர்வுகள், இயக்கங்கள். படப்பியக்கம் என்பதைத் துல்லியமாக விளக்க முடியாது. ஒரு மனிதனுக்குள்ளேயே இவ்வளவு என்றால், உலக அளவில் 600 கோடி மனிதர்கள். உயிரினங்கள் எத்தனை கோடிகளோ! எல்லாவற்றினுள்ளும் எத்தனை இயக்கங்கள் / அதிர்வுகள். யார் இவற்றை அளவிட முடியும். இவை பற்றிய புரிதலோடுதான் நான் இங்கு இயங்க முடியும். என்னை நானே முற்றானவன் என்று கருத முடியாது. நிலவு மன நோயாளிகளை பாதிக்கிறது. சூரியனில் தொன்றும் கரும்புள்ளிகள் மனிதர்களைப் பாதிக்கின்றன. இதற்கு மேலும் ஆய்வாளர்கள் சொல்கின்றனர். நம்மை சூழ உள்ள பிரபஞ்சம் எத்தனையோ வகைகளில் நம்மைப் பாதிக்க முடியும். மார்க்சியம் முதலிய தத்துவங்கள் முன்வைக்கிற முற்றான நிர்ணயவாதத்தை நாம் ஏற்பதற்கில்லை.

ஆதி தேடுகிற உங்கள் பெரும் முயற்சியை ஒரு அற்புதமான கதையாக்கத்தில் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். கதை சிறியது என்றாலும் மிக, மிக அழகான கதை; படப்பியக்கத்தின் பேராற்றலைக் கொண்டு இயங்குகிற கதை; ஆணும் பெண்ணும் இணைவதான இயக்கம்தான் இந்தப் பிரபஞ்சம் என்று திரும்பத் திரும்பச் சொல்கிற கதை; பிளவுபட்ட நிலையில் நேருவது எத்தனை பெரிய அவலம் என்று சொல்லுகிற கதை; நூறாயிரம் வண்ணங்களும் வடிவங்களும் கூடியும், குலவியும், பிரிந்தும், திரிந்தும் செல்கிற கதை. கவிதை மனநிலையின் உச்சங்களை எத்தனை முறை தொடுகிறீர்கள். உயிரின் ருசி, உயிரின் ருசி என்று ஓயாமல் பேசுகிறீர்கள். ஆதி புத்திரியின் கதை (எட்டாம் இயல் முதற்கொண்டு நடைபெறுகின்ற) ஒரு அருமையான கதை. ஆதி மரம் இவளோடு பேசுகிறது. ஓயாமல் ஒரு அழகிய ஓவியத்தைப் பல்வேறு மன நிலைகளில் இவள் பார்த்துப் பார்த்துப் பொருள் படுத்துகிறாள். அந்தக் குதிரையின் வேகம் சொற்களில் அடங்குவதாக இல்லை. கண்ணாடிக்குள் இவளும் இவளுக்குள் கண்ணாடியும் கரைந்து போகின்றன. கணவன் ஒரு மூடன் மற்றும் முரடன். இவன் இன்றைய உலகியலின் பிரதி. இவனது குரூரமான தீண்டலோடு இவளால் வாழ முடியாது. இவள் மீண்டும் அந்த ஆதி ஆணைச் சேர வேண்டும். அவன் இப்பொழுது எங்கிருக்கிறான்? இவளும் ஒரு படைபாளி. பல துறை அறிவில் தேர்ந்தவள். இவளது இயக்கம் குடும்பத்துக்குள் முடங்கிவிட முடியாது. ஒரு ஆணுக்கு சேவகம் செய்து இவள் தன்னை அழித்துக் கொள்ள முடியாது. பல திசைகளில் இவள் ஆற்றோலோடு பயணம் செய்ய வேண்டும்.

உலகை இவள் புரட்டிப்போட வேண்டும். இதற்கு இவளுக்கு யார் கை கொடுப்பார்கள்.? கை கொடுக்க வேண்டும். இவளுக்குள் இயங்குவது ஆதி மனம். பிளவுகளோ, ஏறத் தாழ்வுகளோ, ஆதிக்கமோ, இடம் தராதது அந்த ஆதி மனம். பொருளுக்கும் அதிகாரத்திற்கும் இவள் இடம் தர மாட்டாள். அன்பில் இவள் கரைந்து போவாள். கலைகள் இல்லாமல் இவளால் வாழ முடியாது. உயிரியக்கத்தின் நூறு வகை வண்ணங்களும் வடிவங்களும் இவளுக்குத் தேவை. ஆசிரியர் என்னதான் மறுத்தாலும் இவளுக்குள் இயங்குபவள் ஒரு காளி / துர்க்கை. இவளின் துணையின்றி எந்தச் சிவனாலும் இயங்க முடியாது. ஆதி ஆணை இழந்த நிலையில் இவள் துடிக்கிறாள். புராணக் கதைகளில் சிவனால் தண்டிக்கப்பட்டுச் சிவனைப் பிரிந்த நிலையில் உலகில் பிறந்த பார்வதி தவம் செய்வதும் இறுதியில் சிவனைப் பெறுவதுமாகிய கதை நினைவுக்கு வருகிறது.

மனிதர்கள் சில சந்தர்ப்பங்களில் மனத்தின் விளிம்பு நிலைக்குச் செல்கிறார்கள்.

கணவனை இழந்த பெண், தந்தையை இழந்த மகன், சாவை இப்படிச் சந்திக்கிற நிலையில் மனத்தின் விளிம்பு நிலையில் நாம் தவிக்கிறோம். மனம் முழு அளவில் விழித்துக் கொள்கிறது. வாழ்க்கை முழுவதுமே நமக்குள் ஒரு புள்ளியில் குவிகிறது. இந்தப் புள்ளியில் மனம் எத்தனை வேகத்தில் செயல்படுகிறது. எல்லாம் முடிந்த பிறகு மதுரை விட்டுக் கிளம்புகிற கண்ணகியின் மனத்தில் எத்தனை பெரிய புயல் அடித்திருக்கும். மாதவி, மணிமேகலை, குண்டலகேசி முதலியவர்களையும் அவர்களின் உச்ச நிலை அவலத்தோடு இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். உங்கள் கதையில் வரும் ஆதிபுத்திரி இத்தகையவள். ஒரு முறை மட்டுமே ஒலி நாடாக்களை கேட்ட அளவில் என் உணர்வுகளையும் கருத்துக்களையும் இங்கு தொகுத்திருக்கிறேன் இன்னும் ஒன்று, இரண்டு முறை நான் கேட்க வேண்டும். அங்கங்கே நிறுத்தி எனக்குள் மீண்டும் சிந்திக்க வேண்டும். ஒலி நாடாக்களை கேட்டு வரும்பொழுது எனக்குள் சில நினைவுகள். உங்களது தேடல், நீங்கள் என்னதான் மறுத்தாலும் மேலும் ஒரு மெய்யியல். எந்த ஒரு மெய்யியலும் சில தரவுகளில் / அடிப்படைகளின் மீதுதான் இயங்க முடியும். மீண்டும், மீண்டும் இந்த அடிப்படைகள் கேள்விக்குள்ளாகும்பொழுது இன்னொரு மெய்யியல் தோன்றும். இப்படித் தோன்றியது உங்கள் மெய்யியல். முன்பே நான் கூறியது போல பிளாட்டோ முதல் எத்தனையோ திர்க்கதரிசிகள். இவர்கள் வரிசையில் நீங்களும் ஒருவர்.

இந்திய மெய்யியலை இன்னும் நாம் ஆழமாக கற்க வேண்டும். உங்கள் சிந்தனைகளின் ஊடே பயணம் செய்யும்பொழுது ஐ டெக்கர் என் நினைவுக்கு வந்தார். இன்னும் சில மேற்கத்திய மெய்யியலாளர்கள். நீங்கள் தனியாக இல்லை. கவிஞருக்குள் எப்பொழுதும் மெய்யியலாளர் உண்டு. கவிதை தன் இயக்கத்தில், மெய்யியலில் கரைந்து போகும். தமிழகத்தில் படைப்பாளிகள் என்பவர்கள் மெய்யியலைத் தள்ளி வைக்கிறார்கள். தீண்ட மறுக்கிறார்கள். தன்னை நிறுவிக் கொள்வதிலேயே கவனம் வைத்திருக்கிறார்கள். தங்களுக்கு நிகராக இன்னொருவரை இவர்கள் வைத்துக் கொள்ளமாட்டார்கள். இவர்கள் பற்றி நாம் கவலைபட முடியாது

No comments:

Post a Comment