Ads 468x60px

Social Icons

Sunday 14 October 2012

சோதனை முயற்சியே எழுத்தாய்.....


சோதனை முயற்சியே எழுத்தாய்.....

File:கவிஞர் பாலா.jpg

பாலா ..... 'கவி' கதைக்கவிதை குறித்து .... 

இன்றைய அனுகூலமற்ற சூழலில் கவிதைத் தொகுதி வெளியிடுகின்றவர்கள் சோதனை அவாவும் சாதனை வேட்கையும் நிறைந்தவர்களே. க.வை.பழனிசாமியின் இந்த கவிதை நூல் ஒரு ambitious project என்பது இதன் அச்சிலும் அமைப்பிலும் கதாநாயகன் பற்றிய சித்தரிப்பிலும் தெரிகிறது .

பாலா..... 'பிஞ்சு விழிகளில்' 

கவிதை நூலுக்கு எழுதிய முன்னுரையில் .....பழனிசாமியின் முந்தைய கவிதைத் தொகுதிகளில் இருந்து மட்டுமல்ல, இன்றைய பல கவிதைத் தொகுதிகளில் இருந்தும் வேறுபட்ட தொகுப்பு இது.

''வெண்மை ஒரு நிறமல்ல'' கவிதை நூலின் பின்னுரையில் பாலா ...

 மொழிக்குள் இன்னொரு மொழியை உருவாக்குவதில்தான் கவிதை வெற்றி பெறுகிறது. Poetry is creating a language  with in a language ) ஒரு வகையில் பார்த்தால் தனித்துவமான ஒரு வெளியீட்டு மொழியைச் சாதித்தலே கவிதை எனலாம். சங்கக் கவிகள் முதல் கம்பன் வரை யாரை நோக்கினும் மொழியைப் புதுக்கிப் புகழ்பெற்ற சரித்திரமே இலக்கிய வரலாறு என்று ஏற்றம் பெற்றுள்ளது.

 சிலர் நினைக்கிறார்கள்; ஒரு நற்கருத்தை எடுத்து வைப்பதே கவிதை என்று. நற்கருத்து கவிதையாக்கப்பட வேண்டும். அதுவே கவிதையாவதில்லை. விதவைத் திருமணம் பற்றி எழுதியதால் பாரதிதாசன் புரட்சிக்கவியாக மலரவில்லை. ''வேரிற் பழுத்த பலா'' என்றும் ''குளிர் வடிகின்ற வட்டநிலா'' என்றும் கொண்டாடப் படவேண்டியவர்கள் சமூகக் கொடுமையால் இதயம் துண்டாடப்படுகின்றார்களே என்று அவர் பாடிய முறைக்காகவே புரட்சிக் கவியாக கருதப்படுகிறார்.

 விடுதலை வேண்டும் என்ற நாட்டுப் பற்றுக் குரல் பாரதியைக் கவியாக்கவில்லை. ''தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா, இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்'' என்று எழுதித் தன் கருத்தைக் கலைநயப்படுத்திய காரணத்திற்காகவே பாரதியைச் சிறந்த கவி என்று போற்றுகிறோம்.

 கருத்துக்களை நேரடியாகத் தரும் முயற்சியே புதுக்கவிதை என்று சொல்கின்றவர்கள் இந்த உண்மையை மறந்து விடுகின்றனர். இன்றைய புதுக்கவிதையின் அயற்சி நிலைக்கு இதுவே பிரதான காரணம் எனலாம். கலை நயப்படுத்துதலில் புதுமையும் செழுமையும் கூடுகின்ற பொழுதுதன் புதுக்கவிதை வெற்றி பெற இயலும்.

 இத்தகைய தமிழ்க் கவிதைச் சூழலில் கவனிக்கத்தக்க ஓர் இளங்கவியாக மலர்ந்திருப்பவர் கவிஞர் க.வைபழனிசாமி. ''பொற்கைப் பாண்டியன் இல்லை'' என்ற தன் முதல் கவிதைத் தொகுதி முதல் அண்மையில் வந்த ''பிஞ்சு விழிகளிலே'' வரை தன் கவிதை மொழியைச் செப்பம் செய்து ஒரு நுட்பமான வெளியீட்டு மொழியை உருவாக்கிக் கொண்டுள்ளார் பழனிசாமி. அவரின் தனித்தன்மைக்கு  இன்னொரு சான்றாக வெளிவந்துள்ளது 'வெண்மை ஒரு நிறமல்ல' என்ற இந்தக் கவிதை நூல்.

 தன் உணர்வெல்லைகளைக் கவிஞன் தன் நோக்கிற்கும் போக்கிற்கும் ஏற்ப விரித்துச் செல்கின்றான். கனவு - நனவு என்ற பேதங்களற்று சிலரின் எல்லைகள் விரிகின்றன. நாடு மொழி என்ற எல்லைகளைத் தாண்டி சிலரின் பார்வை விரிகிறது. மனசைச் சீண்டும் ஒரு ஒற்றை ரோசாவின் சிரிப்பைச் சொல்லிக் காதல்வெளியில் பாடித்திரியும் பழனிசாமி இன்று மானுடம் முழுமையையும் அள்ளி அரவணைக்கும் பேருணர்ச்சித் திளைப்பில் மாறி நிற்பதை இந்நூல் வெளிக்காட்டுகிறது.

 மண்ணை, மனிதனை, இயற்கையை, மாநுட ஆற்றலை, மனிதப் படைப்புகளாம் கலை, கவிதை, அறிவியல் தொழில் நுட்ப வாழ்க்கையை பழனிசாமி தனதாக்கிக் கொள்கிறார்.''Bridal Mysticism'' என்ற வகைக் கவிதைகள் இறைவனை தலைவனாகவும் தன்னைப் பெண்ணாகவும் கற்பித்து எழுதப்படும் உணர்வு நிலைப்பாட்டை நாம் கண்டிருக்கிறோம்.

 பழனிசாமியின் இந்தக் கவிதைகளில் மானுடத்தை அவர் தனதாக்கி மகிழ்ந்தும், பிறராக்கி அறிவுறுத்தியும் மகிழ்வெய்துகின்றார். ஒரு நிரந்தரத்தை தன் நிகழ்காலச் சொற்களினால் கட்டிப்போட விழைகின்றார். தமிழுக்கு இது புதுக்கருத்து புதுச்சிந்தனை.

''உன் விழிகளில் விழுந்து
விடாது நீந்துகிறேன்
கைகள் சோர்வடையவில்லை.
நீல விழிகளுக்குள்
பிரபஞ்ச தூரத்தையே
பூட்டி வைத்துருக்கிறாய்.
உன்னுள்... உன்னுள்
கரைந்து போகிறேன்.
கரவது சுகமாகயிருக்கிறது''
என்று நேசிப்பில் தன்னை இழக்கிறார்.

''எழுந்து என்னோடு வா
வாழ்க்கையை
வாழ்கையின் வழியில் சந்திப்போம்.
இஸங்களின் இறுக்கிய பிடியில்
இற்றுப் போகாதே.
தவமும் தத்துவமும் தீர்வல்ல.
பிரச்னைகளுக்குத் தீர்வு...
பிரச்னைகளின் தளத்தில்.
உன் உள்ளே
உன் உலைக்களத்தில் உனக்குக் கருவி

என்று மானுடத்தை மாணவனாக்கி அறிவுறுத்துகின்றார். வாழ்வில் கரைகின்ற போதும் சரி, வாழ்க்கைக்கு கருத்துரை பகர்கின்றபோதும் சரி, பழனிசாமியின் சொற்களில் உள்ள தொனி உணர்வு நிலைப்பட்டு ஒலிக்கின்ற தன்மையால் கவிதையாக மலர்கிறது. தமிழுக்கும் தனக்கும் ஒரு புதுமொழியில் ஒரு புத்துரை வழங்கும் முயற்சி இது. 

 கலீல் கிப்ரான் கவிதைகளில் ஒரு 'தான்' நின்று ஆட்சி செய்யும். ஆண்டாள் கவிதைகள் 'தன்மை' நெகிழ்ந்து நம்மை வசீகரிக்கும் பழனிசாமியின் சொற்களில் இந்த இருவர் கவிதைகளின் ஒரு கூட்டு மொழியை நான் காண்கிறேன்.

No comments:

Post a Comment