Ads 468x60px

Social Icons

Wednesday 31 October 2012

ஆதிரை - ஒரு தீவிரமான நாவல்




க.வை.பழனிசாமியின் முதல் நாவலின் பெயர் ''மீண்டும் ஆதியாகி''. இரண்டாம் நாவல் ஆதிரை. ஆதிரையைப் படித்த பிறகு க.வை-யின் பிற எழுத்துக்களைப் படிக்க யாருக்கும் ஆசை தோன்றும்.

ஆதிரை பற்றி எழுதுவதற்கு முன்பு இன்றைய இலக்கிய சூழல் பற்றி நாம் எல்லாம் யோசிக்க வேண்டும். எந்த நூலும் இலக்கியமாய் அணுகப்படாமல் தமிழகத்தில் உள்ள குழுக்களின் அடிப்படையில் அணுகப்படுகின்றன. சிலர் ஒருபடி மேலே போய் ரசிகர் மன்றம் எல்லாம் வைப்பதாகக் கேள்வி. க.வை. நினத்தால் பெரிய ரசிகர் மன்றமே உருவாக்கும் ஆற்றல் உள்ளவர்.

உதாரணமாக சேலத்தில் ஆதிரப் பற்றி பேச வந்திருந்த தமிழ்ச்செல்வன் நாவலில் ஷேர்மார்க்கெட் மூலம் பணம் சேர்ப்பது பற்றி வரும் குறிப்பை விமர்சனம் செய்தார். அதாவது இடது சாரி மனோபாவம் கொண்ட வாசகர்களை நோக்கித்தான் நாவல் எழுதப்படவேண்டும் என்பது, எழுதப்படா விதி. ஆதிரை நாவல் குறிவைக்கும், உருவாக்க விரும்பும் வாசகன் வேறு. ஆதிரை நாவலுக்கு சாகித்திய அக்காதமி பரிசு வராது. சு. வெங்கடேசன் நாவலுக்குத்தான் வரும். இந்த நாவலைப் பிரச்சாரம் செய்து பரப்பியவர் தமிழ்ச்செல்வன் என்பதும் இங்கு ஞாபகம் வருகிறது. அதாவது மு.வ காலத்திலிருந்து, ஜெயகாந்தன் காலத்திலிருந்து நாவல் ஒரு ''ஐடியாலஜி''யைப் பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆதிரை இதிலிருந்து விடுபட்ட நாவல். தமிழ் சினிமா, கடைசியில் நல்லவனை உதைத்துத் தண்டனை கொடுப்பது போல் நல்லது/கெட்டது என்ற பெரும் பிரிவினையை அங்கீகரிப்பவை எல்லாம் ஐடியாலாஜி நாவல்கள். எனவே, இந்த பெரும் பிளவு வியாதி தொற்றாத உண்மையான நவீன எழுத்துக்கள் தமிழில் அங்கீகரிக்கப்பட இன்னும் ரொம்ப காலம் ஆகுமென்றே தோன்றுகிறது.

இப்படி நான் எழுதும்போது நான் லௌகீக கருத்து உருப்பெறாமையைப் படைப்பில் ஆதரிக்கிறேனே ஒழிய படைப்பில் கருத்தே இருக்காது என்கிற தூய இலக்கியவாதியை ஆதரிக்கவில்லை. நல்ல எழுத்து, கருத்துருவாக்கத்துக்கும் கருத்தே இல்லாமைக்கும் நடுவில் இருக்கும்.

ஆதிரை நவீன வகை நாவலாகும். எனவே நாவலிலிருந்து கதை பிதுக்கி வெளியில் வீசப்படுகிறது. கதை Concept  ஆகிறது. இதனால் நாவல் முழுதும் உரைநடை கவிதையாகிறது. வாசித்து வாசித்து ஆனந்தப்படலாம். அந்தக் கவிதை, தனிமையை நாவல் பூராவிலும் பரவவிடுகிறது. ஆதிரை பாத்திரம் கவிதை; ஆதிரை தனிமையின் குறியீடும் கூடத்தான். அவள் காடு. கவிதை-தனிமை-காடு-சூன்யம் இவை ஒன்றை ஒன்று தொட்டு ஒரு தொனியை நாவலின் உபபிரதித்தளத்தில் (Sub-Text) சிருஷ்டிக்கின்றன. காட்டில் பல பாத்திரங்கள் அலைகிறார்கள். இது தமிழின் முதல் Eco நாவலாகிறது. இன்றைய முற்போக்குப் போராட்டம் இந்தியாவெங்கும் ஆதிவாசிகளைச் சுரண்டும் இந்தியாவுக்கு எதிராக நடந்துகொண்டிருக்கிறது. இந்நாவலெங்கும் ஆதிவாசிகள் நிறைந்துள்ளார்கள். அவர்களின் குழந்தைமையும் ஆண் பெண் உடல்களுக்குள் வேறுபாடற்ற தன்மையும் புகழப்படுகின்றன.

ஓரிடத்தில் கவிஞனும் ழ என்ற இளைஞியும் இரு உடல்களை இணைக்கிறார்கள். அந்த இடத்தை நாவலாசிரியர் இப்படி விளக்குகிறார்.

''உடல்கள் இரண்டும் பின்னிப் பிணைந்து புது உடல் கண்டு களித்தன. களிப்பின் தீ வான் தொட்டு எரிந்தது. எரியும் நெருப்பால் உடல்களின் கதகதப்பு ஏறியது. அப்போது அவளிடம் கால்கள் இல்லை கைகள் இல்லை...''

இப்படி விவரிப்பு செல்கிறது. பொதுவாகத் தமிழ் நாவல்கள் புணர்ச்சியைக் கூறும்போது உருவகங்களுக்குள்ளும் உவமைகளுக்குள்ளும் போய் பதுங்கிக்கொள்வதுண்டு. இந்த நாவலும் அத்தகைய ஒழுக்கக் கட்டுப்பாட்டை பாதுகாக்க விரும்பியதோ என்று சில இடங்களில் தோன்றினாலும் இது பலரால் வாசிக்கப்படவேண்டிய தீவிரமான நாவல் என்பது என் கருத்து.



No comments:

Post a Comment