Ads 468x60px

Social Icons

Thursday 18 October 2012

'வார்ஸாவில் ஒரு கடவுள்' பிரதிகளைத் தரும் குவி மையம்


'வார்ஸாவில் ஒரு கடவுள்' பிரதிகளைத் தரும்

குவி மையம்



     இலக்கியம் குறித்துப் பேசுவது ஒரு போதும் முழுமையைத் தருவதில்லை. மனம் போதாமையில் தோய்வதால் மீண்டும் மீண்டும் அது பற்றிப் பேசுகிறோம். ஆனால் ஒவ்வொரு முறையும் இதன்மீது சொல்ல முயலும் எதுவும் புதிதாக ஒரு பரிமாணத்தைக் காட்டுகிறது. அதனால் ஆர்வம் கூடுகிறது. இப்படி..... பலரும் முயல்வதால், பெருகும் பரிமாணங்களால் உரு கொள்ளும் வடிவில், நமது மனம் லயித்திருகும் பொழுதுதே.... வேறு ஒருவர், இன்னொன்றைப் புதிதாகச் சொல்ல..... உருமாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
 இலக்கியமும் கடவுள் போல, பிடிபடாத மறை இருள் போல, விளங்காமெய் போல அர்த்தம் பொதிந்து சுடர்கிறது. எனவேதான் ஒவ்வொருவரும் புதிதாக ஒன்றைச் சொல்லி மகிழ்கிறோம். இந்த மகிழ்ச்சி தான் இலக்கியத்தின்மீது இத்தனை ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.

 இப்படியான இலக்கியத்தில் நாவல் ஒரு அங்கம். நாவல் என்ற சொல்லே முன்னிலிருந்து வேறானது என்கிற பொழுது புதிதாகச் சொல்ல வேறு ஏதோ நிகழ வேண்டியிருக்கிறது. நிச்சயமாக அது வெறும் அனுபவம் மட்டுமல்ல. அனுபவம் இல்லாத மனித உயிர் கிடையாது. அனுபவம் ஒரு வாயில்தான். வாயிலைப் பார்த்தே பிரமித்து நின்றுவிடக்கூடாது. உள்ளே  ஒரு பயணம் நிகழ வேண்டும். எண்ணம்தான் பயணம். எண்ணம் எல்லாமும் செய்யும்.

 ஆக முதலில் அனுபவம். . .  பிறகு மனதில் எழும் எண்ணம்.  உடலில் உயிர் இருப்பது போல மனதில் எண்ணம் ஓடுகிறது. இந்த எண்ணம்தான் உண்மையில் மனிதன். பயணம் எப்போதும் உள்ளேதான் நிகழ்கிறது. எண்ணம்தான் நம்மை எல்லா இடங்களுக்கும் கூட்டிச் செல்கிறது. மனவெளி விரிய எண்ணம்தான் ஊற்று. அது ஒரு காட்டாறு. முடிவில்லாத மழையில் பெருக்கெடுத்து ஓடும் ஆறு. அப்போது ஜனிக்கும் மனவெளிக¢குள் பிரபஞ்சமே பம்பரமாய்ச் சுழலும். ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல. கற்றுத் தரக்கூடியதும் அல்ல. இயல்பிலேயே ஒருவன் அவ்வாறாக இருப்பது.

 எண்ணம் கூட்டிச் செல்கிற இடம். எண்ணம் கூட்டிச் சென்ற அந்த இடமிருந்து மனம் அப்போது பார்க்கின்ற வெளி. ஆக அனுபவத்திற்கு பின்பு நடக்கிற உள் நிகழ்வுதான் மிக முக்கியமானது. அதற்கான சாத்தியமுள்ள மனதில்தான் இது நடைபெறும். எல்லாரிடமும் நடக்காது. நிலவைப் பார்க்கும் அனுபவம் பொதுவானது. இந்த அனுபவம் உள்ள அத்தனைபேரும் கவிதை எழுதுவதில்லை. அப்படிச் சிலர் கவிதை எழுதினாலும் ஒவ்வொரு கவிதையும் வேறு வேறாகத்தான் தெரியும். அவ்வாறாக எழுதப்பட்ட எல்லாக் கவிதைகளையும் தொகுத்துப் பார்த்தால் ஒரு சில கவிதைகள் மட்டுமே கவித்துவ மேன்மையில் ஒளிரும். அதற்கானக் காரணம் இதுதான். அனுபவத்திற்குப் பின் நிகழ்கிற ஒரு பயணம்தான் இதை முடிவு செய்கிறது. ஆக கலா பூர்வமான ஒரு பயணம் நிகழ எண்ணம்தான் மூல காரணம்.

நாம் காணும் ஒரு நிகழ்வு
பார்க்கும் ஒரு புறவெளி
கண்கள் தீண்டும் பொருள்கள்
ஐம்புலன் வழி இறங்கும் எல்லாமும் அகவயமாக மாறுகிறது

சுற்றி அலைந்து திரிந்த காடு
வானம் பார்த்தக் காட்சிகள்
கால் நனைக்கும் ஆறு
சந்திக்கும் மனிதர்கள்
மனம் திளைத்த உடல்
பார்த்துப் பரவசமான வசீகர எழில்

இவை எல்லாமும் புறவெளியின் அதிர்வுகள்தான். ஆனால் இந்தப் புற நிகழ்வுகள் அகவயமாகி அழியாது மனதில் எங்கோ சேகரமாகிறது. இவை எல்லாவற்றையும் கூட்டிச் சென்று வண்ணம் பூசி மன அடுக்குகளில் சேகரிக்கும் வேலையை யார் செய்கிறார்கள்?

எண்ணம்தான். இந்த எண்ணம்தான் இவற்றை அழைத்துச் செல்லும் வாகனம். எண்ணம்தான் எல்லாவற்றுக்கும் புதுப்புது வண்ணம் பூசுகிறது. வெளியில் பார்த்த காடு உள்ளே இருப்பதில்லை. வெளியில் பார்த்த காட்டை எழுதுவது எழுத்தல்ல. மனதிற்கு உள்ளே இருக்கும் காட்டை எழுதுவதே எழுத்து. உள்ளே இருக்கும் காட்டின் அழகு, அதன் வசீகரம், பிடிபடும் உண்மை எல்லாமும் எண்ணம் சார்ந்தது. மனிதர்களிடம் இது ஒரு தனித்துவமான நிகழ்வு. இந்த இடத்தில் நிகழும் படைப்பு வினைகள்தான் ஒருவனை கலைஞன் ஆக்குகிறது

குக்குக்கூ வென்று குயில் பாடும் பாட்டினிலே
தொக்க பொருளெல்லாம் தோன்றியதுதென் சிந்தைக்கே;
அந்தப் பொருளை அவனிக் குரைத்திடுவேன்;
விந்தைக் குரலுக்கு, மேதினியீர், என்செய்கேன்?

என்கிறார் நம் மகாகவி பாரதி. வேடர் வாராத விருந்துத் திருநாளில் கன்னிக் குயிலொன்று காவிடத்தே பாடியதை (கூவியதை) கேட்டப் பாரதிக்கு 'குயில்பாட்டு'க் கவிதை சாத்தியமாகிறது. அந்த இடத்தை அவரே சொல்லுகிறார். ''தொக்க பொருளெல்லாம் தோன்றியது என் சிந்தைக்கே'' என்று. பாரதியின் மன உள் நிகழ்ந்த பயணம்தான் இந்தக் கவிதை. இதை சாத்தியமாக்கியது அவரின் எண்ணம். எண்ணம் இட்டுச் சென்ற இடம். அங்கு அவர் பார்த்த வெளி... பாரதி மட்டுமே பார்க்க முடிந்த இடம். நாதக் கனலிலே நம்முயிரைப் போக்கோமோ என்று நெகிழ்ந்த மனம்தான் அவரை... கனவு காணத் தூண்டியது. கட்டவிழ்ந்த மனம் எண்ணத்தை ஆறாய்ப் பெருக்க உள் நிகழ்ந்தது பயணம். பயண வெளிப்பாடுதான் எழுத்து.

 மனம் திளைக்கும் இப்படியான உள்வெளிப் பயனம்தான் வேறு ஒரு உலகத்தைப் படைத்துக் காட்டுகிறது. எதிர் வினை செய்யாது அது தூண்டும் வழி செயல்பட வேண்டும்.  கலையின் சிருஷ்டி மையம் இந்தப் புதிய வெளிதான். அந்த வெளி வேறு யாரும் பார்க்காத வெளி. படைப்பாளி மட்டும் பார்த்த, பார்க்க முடிகிற வெளி. கலைஞனுக்குள் இப்படி ஏற்படும் நிகழ்வை கலைஞன் அறிவதில்லை. இயல்பாகவே அப்படி நிகழ்வதால் அவனிடம் அது பற்றிய பிரக்ஞை இல்லை. கலை வெளிப்பாடு என்பது இதனால்தான் சாத்தியமாகிறது.

 இந்த இடமிருந்து பார்த்தவற்றை உணர்ந்தவற்றை எழுதுவது நாவல் எனத் தோன்றுகிறது. அந்த வகையில் எழுதப்படும் நாவல்தான் முன் சொல்லப்பட்டவைகளிலிருந்து வேறாகவும் தனித்தும் இருக்கும். அப்படியான ஒரு உள் மன நிகழ்வு தமிழவனுக்கு ஏற்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். நாவலை அக்கறையோடு வாசிக்கும் யாரும் இதில் உள்ள புதுமையைக் கண்டிப்பாக உணர்வார்கள். அனுபவத்தை அப்படியே கலையாக¢க முயன்றவர்களிடம் நாவலை/கலையை பார்க¢க முடியவில்லை.

 தமிழவன் நீண்டகால விமர்சகர். தற்பொழுதுள்ள விமர்சகர்களில் மிக முக¢கியமானவர். ஜே.ஜே. சில குறிப்புகளின்மீது அன்று அவர் வைத்த விமர்சனம் முற்றிலும் வேறானது. விமர்சனம் குறித்த இலக்கணமாகவே கருதலாம். நாவலும் விமர்சனமும் இரு நிகழ்வுகள் என்கிறார். ஒவ்வொரு நாவலுக்கும் அதற்கேயான தனி விமர்சனம் வேண்டும் என்கிற அவரது பார்வை கவனிக்கத்தககது. அவரின் இந்தக் கருத்துக்கள்தான் ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ நாவலை ஆவலாகப் படிக்கத் தூண்டியது.

 ஒரு கனவுவெளியை, ஒரு மாயத்தோற்றத்தை காட்ட முயல்கிற இடங்கள் இந்த நாவலில் நிறைய உள்ளன. விஜயாவோடு சந்திரன் சேர்ந்திருக்கும் பல இடங்கள் குறிப்பாக அந்த குகை உடலும் மனமும் சேர்ந்து விரியும் வெளியாக அற்புதமாக தோற்றம்கொள்கிறது. சந்திரனின் மனோரதத்தின் பாத்திரமாக வந்துபோகும் மாக்தா, இவர்கள் இருவரின் நெருக்கத்தில் அப்போது விரியும் உடல்வெளி, நண்பன் வீட்டில் வசித்த உயரமான பொட்டு வைத்த அடிக்கடி துப்பும் பெண், சிறு வயதில் சிவப்பு ஊற்றைக் காட்டுவதாகச் சொல்லி சந்திரனை அழைத்துச் சென்று காட்டும் இடங்கள், லிடியா தன் பத்தொன்பதாவது வயதில் இருபத்தி நான்கு வயது இளைஞனை சந்திப்பதும் அவன் அவளிடம் கூறும் இந்தியப் பழமும் அப்படியான இடங்கள்தான்.
   
 உடலின் கொண்டாட்டம் நாவலின் மொழியோவென வாசிப்பில் ஒரு எண்ணம் நம்மைப் பின் தொடர்வதை உணர முடிகிறது. ‘’யாருமில்லாதபோது இரண்டு மனித உயிர்கள் ஒன்றை ஒன்று அணைக்கும்போது இரண்டு உயிர்களின் முழு ஆற்றலும் எழுந்து வெளிப்படுவதை நானும் விஜயாவும் உணர்ந்தோம்’’ சந்திரன் குகைக்குள் இருக்கும்போது விஜயாவின் நெருக்கத்தை இப்படி உணர்கிறான். ‘இந்த இடத்திலேயே செத்துப்போகலாம் போல் சந்தோஷமாக இருக்கிறது’’ இது விஜயா. இதையே பிறகு சந்திரனும் கூறுகிறான்.

சந்திரன் விஜயா அமலா அஷ்வினி பிரதாப் அன்பழகன் ( ராஜேஸ் ) சந்திரனின் பர்மியத் தாய் அன்னா மாலினோவ்ஸ்கா லிடியா பியோத்தர், சந்திரன் சிறு வயதில் சந்திக்கும் அக்கா, வார்ஸா, மியான்மர், சந்திரனின் கிராமம் இவை யாவும் இந்த நாவலில் கட்டுமானப் பொருள்களாகக் குவிந்துள்ளன. இவற்றிலிருந்து வாசகன் தனக்கான ஒரு வடிவத்தைக் கட்டமைத்துக்கொள்ள முடிகிறது. வடிவமின்மைதான் இதில் வடிவம். வடிவமின்மையே வடிவங்களுக்கான சாத்தியம் என்ற புத்தரின் பார்வை இந்த இடத்தில் நினைவில் வர வேண்டும்.

சந்திரனின் தாத்தா இரண்டாம் உலக யுத்தத்தின்போது பர்மாவிலிருந்து வெளியேறுகையில் வழியில் சேகரித்த பல பொருட்களோடு உயிருள்ள ஒரு நாய்க்குட்டியைத் தூரத்திலிருந்து பார்த்துத் தூக்கிக்கொண்டு வந்ததாகச் சந்திரன் லிடியாவிடம் தன் வாழ்க்கையைச் சொல்லத் தொடங்குகிறான். அந்த உயிருள்ள நாய்க்குட்டி என் அம்மா என்கிறான். அப்போது அவன் அம்மாவுக்கு மூன்று வயது. இந்த இடம் நாவலை வேறு ஒரு தளத்திற்கு நகர்த்துகிறது.

லிடியா சந்திரனிடம் இவ்வாறு பேசுகிறாள். ‘’சரித்திரம் மரபணு வம்சம் ரத்தம்... இப்படி... இப்படி... சொல்லி இரண்டாம் உலக யுத்தத்திற்கு இடப்பட்ட அத்தனை தத்துவரீதியான அடிப்படைகளையும் தென்னிந்தியாவில் ஒரு மனிதன், மனித அன்பால் உந்தப்பட்டு ஒரு குழந்தை பரிதாபமாக சாகக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் உதறி எறிந்திருக்கிறார்.’’ லிடியாவின் இந்த கூற்று ஏனோ நம்மை ஒரு குற்ற உணர்வுக்குத் தள்ளுகிறது. சமீபத்தில் இலங்கையில் நடந்த படுகொலையில் அனாதைகளான குழந்தைகள் நினைவில் வருகிறார்கள்.

 அந்த மூன்று வயது குழந்தை இந்த நாவலுக்கு ஒரு உலகலாவியப் பரப்பைத் தருகிறது. பர்மிய ரத்தமும் தமிழ் ரத்தமும் எந்தவித எதிர்ப்பும் இல்லாது இணைந்த அதிசயத்தை லிடியாவோடு நாமும் வியக்கிறோம். இந்த சங்கமம்தான் நீரையும் நெருப்பையும் இணைக்கிறது. சந்திரன் லிடியாவிடம் கூறுகிறான் ‘’நான் நெருப்பாலும் நீராலும் செய்யப்பட்ட மனம்கொண்டவன்.’’ நெருப்பு பற்றுவதை முன் கூட்டி அறிவது அம்மாவிடமிருந்தும் நீர் இருக்கும் இடத்தை அறிவது அப்பாவிடமிருந்தும் சந்திரன் பெறுகிறான்.

 இந்த நாவலின் பாத்திரங்கள் எல்லாமும் தனித்து ஒரு மூலகம்  போல் இயங்குகின்றன. யாரும் யாருக்காகவும் இல்லை. அவ்வப்போது சேருவதும் விலகுவதுமாக இயங்கி புதுப்புது வெளிகளை உருவாக¢கி சற்றே வாசகனை அலையவிட்டு பிறகு தங்களுக்கேயான பிரத்யேகக¢ குணங்களை இழக்காது சுயத்தோடு செயல்படுகின்றன. அதனால்தான் பாத்திரங்கள் வாசக உணர்வுகளுக¢கு ஏற்ப வடிவங்களைக் காட்டும் கட்டுமானப் பொருள்களாகத் தோற்றம்கொள்கின்றன. அவரவர் திறக்கும் ஜன்னல்களின் வழி பார்வைகொள்ளும் அம்சம் இந்த நாவலின் சிறப்பாகும்.

 கும்மாங்குத்து மதன் ஹுசைன் செக்சனியாவிலிருந்து வந்த இரண்டு இளைஞர்கள் உக்ரைனியர் எல்லோரும் தேசமில்லாதவர்கள். இவர்கள் யாரும் விரும்பி வேறு நாட்டிற்குச் செல்லவில்லை. உயிர் பிழைக்க ஒரு காலடி மண்ணிற்கு அலைகிறார்கள். ஒவ்வொரு அகதிக்குப் பின்னாலும் மனித சமூகத்தின் வக்கிரம், அழுக்கு, மிருகவெறி, சுயநலம், வஞ்சகம் இன்னும் இப்படியான நூறு சொற்களைச் சொன்னாலும் கொடூரத்தின் கொஞ்சமான முகத்தைத்தான் காட்ட முடியும்.

 தமிழவன் விவரிக்கும் இந்த இடம் நாவலின் மிக முக்கியமான பகுதி. வேனில் ட்ரக்கில் தட்டுமுட்டுச் சாமான்கள் போல கேவலமாகத் திணிக்கப்பட்டு நாடு தேடி அலையும் அவர்களின் அவலம் மனித நாகரீகத்தின்மீது தேசப்பக்தியின் மீது ஏன் நம்மீதே மலத்தைக் கொட்டத் தோன்றுகிறது. காலூன்ற மண் தேடி அலையும் பரிதாபம் நெஞ்சில் நெருப்பாய் இறங்குகிறது.

 இதில் வரும் அகதிகள் யாரும் பயங்கரவாதத்திற்குத் துணை போனவர்கள் அல்ல. தீவிரவாதத்தை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்தவர்களும் அல்ல. மிகச் சாதாரணமான மக்கள். அதுவும் மிக இளையர். உயிரைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடும் அப்பாவிகள். இந்த இடங்களில் எல்லாம் தமிழவன் ஒரு வார்த்தையும் பேசாது பாத்திர அதிர்வுகளின் வழியாக வாசக மனத்தில் நிரந்தர அலையைத் தோற்றுவித்து விடுகிறார். ஒரு நாவல் இப்படித்தான் இயங்க வேண்டும். இலக்கணம் தெரிந்தவர் இலக்கியத்தையும் படைக்கிறார். க. நா. சு சாதிக்க முடியாத ஒன்றை தமிழவன் சாதிக்கிறார்.

மதன் என்று அழைக்கப்படும் குலசிங்கம் தனக்கான ஒரு இடம்தேடி அலைகிறான். மதனின் அக்கா ஜெர்மனியிலிருக¢கும் அவளது கணவனின் தம்பிக்குச் சொல்லி தன் தம்பிக்கும் ஒரு வேலை வாங்கிக் கொடுத்துத் தம்பியைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி ஏற்பாடு செய்து அவளது ஆபரணங்களைத் தன் கணவனுக்கும்கூட தெரியாமல் அடகு வைத்து பணம் கொடுத்து கொழும்பில் உள்ள ஒரு ஏஜெண்டு மூலம் அனுப்பிவைக்கிறாள். கும்மாங்குத்துவைப்போல அவனும் மாஸ்கோவில் இறங்கி ஆடுமாடுகள் போல அடைக்கப்பட்டு ரகசியப் பயணம் மேற்கொள்கிறான்.

பயண இறுதியில் பனி கட்டிகள் கிடக்கும் ஒரு மைல் தொலைவு ஆற்றில் இறங்கி கடக்கும் முயற்சியில் மதன் என்று அழைக்கப்பட்ட குலசிங்கம் பனி இளகி இழுத்துப்போக இறக்கிறான். காலூன்ற மண்தேடி அலைந்த தமிழ் அகதியின் முடிவு வாசிப்பின்போது உள்ளே நிரந்தர வலியை ஏற்படுத்திவிடுகிறது. கொஞ்சமான தூரத்தில் அவன் இனத்தின் மண் இருந்தும் அவனுக்கு வாழ்வு தராத அவலம்தான் அந்த வலி. தமிழவன் எழுத்து அதைச் சரியாகச் செய்திருக்கிறது.

 குமாங்குத்து சிவனேசனாக வளர்ந்து வார்ஸாவில் ஒரு கடவுளாக உருக்கொள்கிறபொழுது தன் சிருஷ்டி சக்தியை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு உயிரைப் படைக்கிறார். கேன்வாஸில் தீட்டப்ப்படும் ஒரு ஓவியத்தின் வழியாக இறந்த மதன் அதாவது தமிழ் அகதி மீண்டும் உயிர் பெற்று சிவநேசனைத் தேடி பலமுறை வந்து போகிறான். மனதில் ஒரு நம்பிக்கை வேரூன்றுகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு வார்ஸாவில் ஒரு கடவுள் என்பதாக. அப்போது நாவல் நம்மிடம் மேலும் நெருங்குகிறது.

 லிடியா, அன்னா இருவரும் சந்திரனைத் தேடி வர ஒரு முகாந்திரமும் இல்லை. ஆனால் வருகிறார்கள். மிக நெருக்கமாகப் பழகுகிறார்கள். தங்களைப் பற்றி அவன் கேட்காதே எல்லாமும் சொல்கிறார்கள். லிடியா சொல்கிறாள் ‘’ஸாரி, ஒரே ஒரு நாள் பழக்கத்தில் என் வாழ்க்கையில் இப்படித் தொடர்ந்து பாதுகாத்துக் கொண்டிருப்பதும் அந்தரங்கம் மிக்கதுமான பல விஷயங்களை உங்களிடம் சொல்லும்படி ஏன் என் உள்குரல் தூண்டியது?’’

 அன்னா மாலினோவ்ஸ்கா மூலமாக சந்திரனின் கதை ஏன் சொல்லப்பட வேண்டும்? நாவலில் இந்த பாத்திரங்கள் எப்படி முளைத்தார்கள்? இந்தக் கேள்விகள்தான் நாவலை மேலும் நவீனமாக்குகிறது? நாவலின் வடிவம், வடிவமின்மையின்  மீது  கட்டமைக்கப்படுவது இதனால்தான் நிகழ்வதாகப்படுகிறது. அஷ்வினி அன்பழகனை ராஜேஸாகப் பார்ப்பதும், அமலா எழுதிய கடிதத்தை ஒரு ஆண்டு கழித்து வாசிப்பதும், சிவனேசன்... போனில் அந்தக் கடிதம் குறித்துப் பேசுவதும், அதற்கு முன்பாக விஜயா நினைவாக ஒரு கனவு வருவதும் புனைவின்மீது வசீகர வண்ணம் பூசுகின்றன. இரு வேறு உலகங்களின் நிகழ்வுகளை ஒரு தளத்தில் பார்க்கவைக்கும் முயற்சியில் தமிழவன் வெற்றி கண்டுள்ளார். இதனால் காலவெளி அழிக்கப்பட்டு நிகழ்வின் கணம் உறைந்து ஒரு பாத்திரமாக உருக் கொண்டு இயங்கி வாசகனைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது. வாசிப்பில் இதுவே ஒரு வாசனையாக மாறி வார்த்தைகளின்மீது ஒருவித மோகத்தைத் தூண்டுகிறது.

 வார்ஸாவில் இறங்கும் சந்திரனுக்குப் பிரக்ஞை தட்டுகிறது அல்லது அதை கொஞ்சநேர மரணம் என்று சொல்லலாம். இந்தச் சிறு மரணம் நாவலில் சொல்லப்படும் பல நிகழ்வுகளை வேறுமாதிரியாக யோசிக்கவைக்கிறது. பாத்திரங்களுக்குப் புது வண்ணம் பூசுவதாகவும் சொல்லலாம். சிவநேசன், லிடியா, அன்னா, லிடியாவின் சகோதரன் எல்லோருமே இந்த மரணம் தோற்றுவித்த வெளியின் பிரஜைகளாகத் தோன்றுகிறார்கள். மற்றவர்கள் சந்திரனின் பிரக்ஞையில் எப்போதும் இருப்பவர்கள். இந்த இரண்டின் கலப்பாக நாவலில் அவ்வப்போது காட்சியாகும் வெளிதான் நவீனத்தை எழுத்தில் இறக்குகிறது. இந்த ஈரம் தோயும்போதுதான் விஜயா வேறுவேறு பரிமாணங்கள் கொள்கிறாள். இது மற்ற பாத்திரங்களுக்கும் பொருந்தும். சாதாரண அன்பழகன் ராஜேஸாக மாறி ஹோட்டல் அறையின் கூரையைக் கிழித்து மாயமாவதும் இந்த கலப்பின் காரணமே. விஜயாவின் கிராமத்தில் விரியும் வெளி, அவள் அழைத்துப்போகும் இடங்கள், தந்தையின் தம்பி, ஊரில் சந்திரன் அக்கா என்று அழைக்கும் அந்த அமானுஷ்யப்பெண், விஜயாவின் மரணம் எல்லாமும் இதை வலுப்படுத்துகின்றன.

சந்திரனின் கூற்று இதை மேலும் தெளிவாக்குகிறது. ‘நான் தனியாக எந்தக் குறிக்கோளுமின்றி கடந்த ஒரு வருடமாய் எதிலிருந்தோ தப்பவோ, எதையோ கண்டுபிடிக்கவோ எந்தக் காரணகாரிய தொடர்புமின்றி எந்த முன் திட்டமின்றி யார் யாரையோ சந்திக்கிறேன். எதை எதையோ பேசுகிறேன். எதிலும் எந்தத் தொடர்புமில்லை. அல்லது ஏதோ தொடர்பு இருக்கிறது. எனக்குத் தெரியாதவிதமாய்---------------------------------- நானும் ஒரு பேயோ என்ற நினைப்பு வராமலில்லை.’

நாவலின் இறுதி அத்தியாயத்தில் மும்பைக்குச் செல்லும் விமானத்திலிருக்கும் போது சந்திரனுக்கு ஒரு மறதி பீடிக்கிறது. வார்சாவில் நடந்த எல்லாமும் நினைவிலிருந்து விடைபெற்றதாக அவன் கூறுவதும் கவனிக்கத் தக்கது. இந்த மறதி சந்திரனுக்கு ஏன் ஏற்பட வேண்டும்? அப்படியானால் வார்ஸாவில் முன் நடந்த எல்லாமும் என்ன?

அன்னா சந்திரனோடு கொண்டிருந்த உறவை முன் அறிந்திராத வேறு ஒரு உறவாக மதிக்கிறாள். ‘’நாம் தகப்பன் மகள் அல்ல. காதலன் காதலி அல்ல. கணவன் மனைவி அல்ல. ஆனால் இந்த மூன்று உறவுகளுக்கும் இருக்கும் சக்தி மிக்க அந்நியோன்யத்தை ஆழமாக நான் உங்களிடம் உணர்ந்தேன். இது புது உறவு. இத்தனை நூற்றாண்டுகளில் மனிதகுலம் புதிய உறவை ஸ்தாபிக்காதது பரிதாபம் என்றே நினைக்கிறேன். இந்த உறவு மிக பலமானது என்பதால் இந்த உறவை முறித்துக் கொள்கிறேன். அந்த பலம் தான் எங்கிருந்தோ என்னையும் உங்களையும் இணைத்தது. முதலும் முடிவும் இல்லாத கதை இனி வரும் காலத்தில் இலக்கியவகையாக ஏன் ஆகக்கூடாது’’ அன்னாவின் இந்த வார்த்தைகள் இந்த நாவலின் உள்ளீட்டை தெளிவாக விளக்குகிறது.

நடுவில் புகுந்து எதுவும் செய்யாதீங்க என்ற சிவநேசனின் வார்த்தைகள் வாசகன், தன்னிடமும் சொல்லப்பட்ட வார்த்தைகளாக உணர்ந்து நாவலை வாசித்தால் புதிய எழுத்தை, புதிய  நாவலை வாசிக்க முடியும். 

No comments:

Post a Comment