Ads 468x60px

Social Icons

Thursday 8 November 2012

மனம் போனபடி…


மனம் போனபடி…

க.வை. பழனிசாமி

ஏதோ நடந்து கால் முறிந்து விடுகிறது. வயிற்றில் புண் என்கிறார்கள். குடலில் உங்களுக்கு ரத்தக் கசிவு…. ஒரு வேளை கேன்சராக இருக்கலாம் என்ற வார்த்தைகள் அவன் காதில் விழுகிறது. இதய நோய்… மூன்று இடங்களில் அடைப்பு… இருதயத்திற்கு இரத்தம் போவது எந்தக் கணமும் நிற்கலாம்… மரணத்தின் விளிம்பில் இருக்கிறீர்கள்.
வாழ்தலில் இப்படியான இடங்களில் நிற்கும் மனிதன் ஒரு கால அளவில் மேற்சொன்ன உடல் நோய்களிலிருந்து மீண்டு விடுகிறான். நவீன மருத்துவம் புத்துடல் கொடுத்து விடுகிறது. காரணம் இங்கே வலியின் இடம் தெரிகிறது. நோய் நாடி, நோய் முதல் நாடி, இடம் அறிந்து சிகிச்சை செய்து மீட்க முடிகிறது. ரூப உடல்மீது அதற்கான கண்ணை விழித்து வைத்தியம் செய்து விடலாம்.
அரூப உடலில் ஏற்படும் வலியை… வலியின் இடம் அறிந்து வைத்தியம் செய்யும் சாத்தியம் இல்லை.
மனம் நோயுற்றால்… மனம் பாதிப்பு அடைந்தால்… மனம் கட்டுப்பாட்டிலிருந்து விலகி விட்டால் ஒருவராலும் காப்பாற்ற முடியாது. மனம் ஓர் அரூப உடல். எல்லையில்லாது விரிந்து கிடக்கும் அந்த உடலை வெளியிலிருந்து யாராலும் பார்க்க முடியாது. விளிம்பில் நிற்காத… வடிவம் மாறும் அரூப உரு…. ‘மனம்’.
மனம் சிதைந்து இறுதி வரை மீளாது இறந்த பெண்களின் துயரம் பெரிதினும் பெரிது. எந்த மன நல மருத்துவனும் இந்தப் பெண்களைக் காப்பாற்றியதில்லை. சேலை விலகாத போதே நூறு முறை மார்பை மறைக்கச் சரி செய்துகொள்ளும் ஒரு பெண், மனம் சிதைந்தால்… வழுவினால்… தன் நிர்வாணம் அறியாது காட்சிப் பொருளாகி விடுகிறாள். சேலத்தில் இருக்கிறேன்… என் வீட்டில் இருக்கிறேன்… வேலையாக இருக்கிறேன்… மாலையில் சந்திக்கலாம் என்று கால இடம் அறிந்து பேசும் பிரக்ஞை விழிப்பு முற்றாக அழிந்து விடுகிறது. மன உடல் மடிந்தால்… உயிர் இருந்தும் பிணம்தான்.
ஆம்… மனம்தான் உண்மையில் உயிர். உடலைப் போற்றும் நாம் இந்த உயிரைப் போற்றிப் பாதுகாப்பதில்லை. மனம் சிதைந்தவர்கள்… உடல் இருந்தும், உயிர் இருந்தும் ‘சதை உருவாய்’ தன் இருத்தலைத் தானே அறியாது, வெறுமைமீது கண்கள் நிலை குத்திக் கிடக்கும் அவல நிலை.
மனதை, இந்த இடம் போகாது பாதுகாப்பதே வாழும் கலை. இது பெரிய காரியம் அல்ல. மிக எளிதான ஒன்று. மனதின் மீதான வழுவாத பார்வை இருந்தாலே போதுமானது. குழந்தையைப் பார்த்துக்கொள்வதுபோல, குழந்தையைக் கை பிடித்துக் கூட்டிப்போவதுபோல அணுகவேண்டும். ஆம், மனம் ஒரு குழந்தை. நான் அதன் தாய்.
இந்த எண்ணம் வேரூன்றும் இடத்தில் மன நோய் என்பதே இல்லை. நோயில்லாத உடல் மீது எவ்வளவு மோகம்கொண்டு அலைகிறோம். அதைவிடக் கோடி மடங்கு மேலானது நோயில்லா மனம். மனதை நாம் பார்க்க முடிவதே… நோய் இல்லா மனத்தின் முதல் அறிகுறி.
மனதின் அசாத்தியத் திறன் குறித்துக் கொஞ்சம் யோசிக்கலாம்.
இருத்தல் வாழ்தல் சார்ந்தது. ஒருவன் அறையின் சுவர்களுக்குள்ளேயே வாழ்ந்தும் மடியலாம். பெருவெளிச் சுவர்களின் மத்தியிலும் தன் வாழ்க்கையை விரிக்கலாம். இது மனித விருப்பம் சார்ந்தது. எண்ணம்தான் நம்மை அறைக்குள் அடைக்கிறது. எண்ணம்தான் அறையின் சுவர்களை உடைத்துப் பெருவெளி காண விழைகிறது.
எண்ணம் எல்லாமும் செய்யும். பூவைப் பூவாகவும் காட்டும். பூவை ஆதி மெய்ஞ்ஞான மறை இருளுக்குள் நுழையவல்ல வெளிச்ச வாயிலாகவும் காட்டும். அதன் வினை அளப்பரியது. உடலின் விளிம்பைப் பிரபஞ்ச விளிம்பு வரை விரிக்கும் ஆற்றல்கொண்டது. எண்ணத்தை அழகுபடுத்துவது…. கலா பூர்வமாக மாற்றுவது…. மனம்தான்.
மனதை ஆள்வது பிரபஞ்சப் பெருவெளிக்கே மன்னனாக முடி சூட்டிக்கொள்வதற்கு ஒப்பானது.
மனதின் கருவிகள் எண்ணம், சிந்தனை. மனதின் செயல்பாடு, எண்ணம் சிந்தனை வழியாகத்தான் அமைகிறது. இவை இரண்டும் அரூப தூரங்களைக் கடக்கவல்ல பயண ஊர்திகள். இந்தப் பயண வழியில்தான் நமக்கு உள்ளே ஒரு கண் திறக்கிறது. புத்தனுக்குத் திறந்த கண் நமக்கும் திறக்க வேண்டிய அவசியமில்லை.
நமக்கான ஒரு கண் திறக்க வேண்டும். ஒருவனின் சுயம் அதில்தான் வேரூன்றி இருக்கிறது. எண்ணமும் சிந்தனையும்தான் அதற்கான சாத்திய வழிகள்.
மனதைப் பழக்க வேண்டும். பிறகு அதை ஆள வேண்டும். குழந்தையைக் கை பிடித்துக் கூட்டிப் போவதுபோல அதைக் கூட்டிப்போக வேண்டும்.
முன்பே சொன்னதுபோல மனம் ஒரு குழந்தை. பிறந்த குழந்தை மீதான கவனம்… பிறகு வளர்ப்பதற்கான கவனம். வளர்ந்து ஆளான பின்பு நிலைத்து நிற்பதற்கான சுய வலிமை. நம் பிள்ளைபோல ஆசையாகவும் அன்பாகவும் கண்டிப்போடும் வளர்க்க வேண்டும்.
இப்படி வளர்ந்த குழந்தை எண்ணத்தாலும் சிந்தனையாலும் மறைவெளிக்குள் ஒளியாக நுழைந்து மனிதக்கண் படாத இடங்களையும் பார்க்கவல்ல பார்வை பெறும்.
மனம் ஒரு குழந்தையாக ஆன பின்பு குப்பைத்தொட்டி போலப் பயன்படுத்த முடியுமா? மனதைக் காயப்படுத்தும் எதையும்…. மனம் தாங்காது தவிக்கும் எதையும்…. மனதைக் கனக்கச் செய்யும் எவற்றையும்…. மனம் வலிக்கும் ஒரு பொருளையும் உள்ளே போடும் துணிவு வருமா?
மனம் ஒரு குழந்தை என்று ஆனபின்பு மனதிற்கு வலி தரும் எதுவும் உள்ளே போகாதிருக்க உள்ளே தாயின் கருணை நாம் அறியாதே பிறவிகொண்டு விடும்.
குழந்தையைக் கொஞ்சுவது போலக் கொஞ்சுவோம். களிப்பில்…குதூகலத்தில் கூத்தாடுவோம். முதலில் மனமும் நாமும் வேறாகக் கருதி வளர்க்க வேண்டும். பிறகு மனம்தான் நாம். நாம்தான் மனம் என ஒன்ற வேண்டும்.
நமது பார்வையில் வளரும் பிள்ளைபோல மனம் ஆன பின்பு மனம் ஒரு போதும் நோயின் பிடியில் ஆட்படாது.
மனம்…. நமது நண்பன். மனம்…. ஒரு ஞானி. மனம்…. ஓர் அரக்கன். மனம்…. ஒரு ஞாயிறு. மனம்…. ஒரு முடிவில்லா இருள். மனம்… ஆயிரம் கதவுகளைத் திறக்கும். மனம்…. கோடி ஜன்னல்களையும் கணத்தில் மூடிவிடும்.
மனம்தான் பூக்களை மலர்த்துகிறது. பூவின் வாசம் பூக்களில் இல்லை. மனதில்தான் இருக்கிறது.
வானம்… மனம். கடல்… மனம். கொட்டும் அருவி… மனம். அழகு… வசீகரம்… கோபம்… கொலை வெறி… ஆனந்தம் எல்லாமும் மனம். அகம்… புறம் எல்லாமும் மனம். மனமே உடல். மனமே உயிர்.
மனம்தான் உண்மையில் வாழும் வெளி. அழகிய அனுபவங்கள்தான் இந்த வெளியைக் கலாபூர்வமாக மாற்றுகின்றன. வீடு… பூமி… பெருவெளி எதுவும் நாம் வாழும் இடமல்ல. அழகிய அனுபவங்களே உண்மையில் நாம் வாழும் இடம்.
இப்படியான அனுபவங்களுக்காக நகர்வதும் ஆட்படுவதும்தான் இருத்தலுக்கான மனிதப் பண்பாகத் தோன்றுகிறது.
மனம் ஆழமானது என்கிறார்கள். பல்வேறு அடுக்குகள்கொண்டது என்றும் பேசப்படுகிறது. மனதைப்பற்றி அறிவியல் ரீதியாக உளவியலாளர்கள் ஆயிரம் சொல்லி இருப்பார்கள். நாளையும் இதன்மீது பலரும் வேறு வேறு பொருள் தந்து பேசலாம். ஆனால் என் எண்ணம்…. என் சிந்தனை என்ன சொல்லுகிறது என்பதுதான் என் பாதைக்கான வெளிச்சம்.
மனம் ஒரு பாத்திரத்தின் நீர். பாத்திரத்தின் கொள்ளளவுதான் பிரதானமானது. பிரபஞ்சப் பாத்திரத்தில் இடம்விடாது நிறைந்திருக்கும் நீர்தான்…மனம். இதன் ஆழ அகலம் பிரபஞ்சத் தன்மையது.
இப்படியும் சொல்லலாம் : மனம் எல்லையில்லாது விரியும் பாத்திரம். அதன் கொள்ளளவு சொம்பு நீராகவும் இருக்கலாம். பிரபஞ்சத்தையே மிடறு நீராக வாங்க வல்லதாகவும் இருக்கலாம்.

க.வை.பழனிசாமியின் 'உடலோடும் உயிர்' காலச்சுவடு இதழில் ஞானக்கூத்தன்

க.வை.பழனிசாமியின் ‘உடலோடும் உயிர்’ 

-காலச்சுவடு இதழில் ஞானக்கூத்தன்


 தலைப்பில்லாமல் 29 கவிதைகளும் 'மரணம் பிழிந்து' என்ற தலைப்பின் கீழ் 8 கவிதைகளும் அடங்கிய தொகுப்பு க.வை.பழனிசாமியின் 'உடலோடும் உயிர்'. இரண்டு பகுதிகளையும் வேறு படுத்திக் காட்டுகிற நடையைக் கவிஞர் மேற்கொள்ளவில்லை. இரண்டு பகுதிகளுமே ஒரு பொதுத் தொனியின் கீழ் அமைந்துள்ளன. மரணம் பிழிந்து - அதாவது மரணத்தை பிழிந்து - பகுதிக்குள் பிரவேசிப்பதற்கான தயார் நிலையை முதற்பகுதிக் கவிதைகள் தூண்டுகின்றன. 

 இரண்டு நிலைகளில் கவிதை இவருக்கு இயங்குகிறது என்று சொல்லாம். ஒரு நிலையில் பரிச்சயமான உலகம் புலப்படுகிறது. ஆறு, மீன், ஜன்னல், பை, கதவு, கேன்வாஸ் போன்ற சொற்கள் இந்தப் பரிச்சயமான உலகத்தை வாசகனுக்கு நினைவூட்டுகின்றன. ஆனால் இந்த உலகைத் தாண்டி ஒன்று இருப்பது போலவும் அதைக் காட்டத்தான் அல்லது அதைப் பற்றிப் பேசத்தான் இந்தப் பரிச்சயமான உலகம் பேச்சுக்கு எடுத்துக்கொள்ளப்படுவது போலவும் ஒரு தொனியில் குரல் என்ற பொருளில் கவிதைகள் இயங்குகின்றன. ஏழாம் எண்ணிட்ட கவிதையை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

இடம்பெயராது / என்மீது விழுகின்றன / பூக்கள்
நகராது / நெருங்குகிறது / பள்ளத்தாக்கு

என்ற பகுதிகளும், கடைசிப் பகுதியான

சிறுத்தையை மீண்டு / ஓடிவந்த புள்ளிமான் / நீர் அருந்த என / நீள்தூரம் நடந்துவருகிறது ஆறு

என்ற வரிகளும் புரிதலை விழைகின்றன. 'இடம் பெயராது' என்பதில் எது, யார் என்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும். அதுபோலவே எது நகராது, யார் நகரமாட்டார் என்றும் கேட்க வேண்டும். உரையாடிதான் நகரவில்லை. பூக்கள் அவர் மீது தாமாகவே விழுகின்றன. ஆனால் எங்கிருந்து விழுகின்றன. பூக்கள் விழுகின்ற இடத்தைப்பார்த்து உரையாடி உட்கார்ந்திருக்கிறாரா? அல்லது அவர் வேறு இடத்தில் இருக்க அவரை நோக்கிப் பூக்கள் 'வந்து' விழுகின்றனவா?

 பூக்கள் தாமாக அவர் மேல் விழுகின்றன. மற்ற கேள்விகளால் பயனில்லை. இதுவே யதார்த்த பிறழ்வான விஷயமல்லவா? பூக்கள் தாமாக அவன் மேல் விழ வேண்டுமானால் அவர் நிலைமையை அறிகிற விதம் மாறுபடுகிறது. பூக்கள் தாமாகவே தம் மீது விழப் பெறுகிறவர் அசாதாரண மனிதர் என்ற கருத்து மனத்தில் எழுகிறது. 'விழுகின்றன' என்று உரையாடி சொல்லிக்கொண்டாலும் அதன் பின்னே 'அர்ச்சிக்கபடுகிறேன்' என்ற கருத்து வெளியாகிறது.

 இவர் நகராது பள்ளத்தாக்கு இவரை நெருங்குகிறது. பூமி ஒரு பெரும் பாளமாக அதன் ஆஸ்திகளோடு இவரை நெருங்குகிற காட்சி திடுக்கிட வைக்கிறது. கடைசிப் பகுதியில் தாகமுள்ள புள்ளிமான் தண்ணீர் அருந்துவதற்கு வசிதியாக நீள் தூரம் நடந்து வருகிறதாம் ஆறு. தாகமுள்ள அந்த மானைப் பற்றி ஒரு செய்தி சொல்லப்படுகிறது. அது சிறுத்தையிடமிருந்து மீண்டு வந்ததாம். இடைப் பகுதியில் ஒரு பகுதி ஒரு பத்தி

தனித்து. . . அறைக்குள் இருக்கும்
இந்தக் கணத்திலும்
அவளின் கண்களைப் பார்க்கிறேன்

 அவள் என்பது யார்? சாதாரணப் பெண்தானா? உறுதியாகச் சொல்ல முடியாது. பூ, பள்ளத்தாக்கு, பெண்ணின் கண்கள், கீழிறங்கும் ஆகாயம், மேலேறும் பாம்பு, முட்டை வெளியிடும் குஞ்சுகள், தாகமுள்ள புள்ளிமான் இவையெல்லாம் ஆகக் கவிதையில் சொல்லபடுவானேன். 'அவளின் கண்களைப் பார்க்கிறேன்' என்கிறது கவிதை. ஆனால் அவள் கண்கள் இவர் கண்களைச் சந்தித்தனவா? இல்லை. பார்வைகளின் சந்திப்பின்மை அக்கவிதையின் தொனியையும் வெளியையும் நிர்ணயிக்கிறது. வெவ்வேறு வெளிகள் ஒரு பரவெளியைச் சுட்டிக்காட்ட முயல்கின்றன.

 பொருள்களால் நிரப்பப்படாத ஒரு வெளியை ஓர் அதிர்ச்சியோடு பழனிசாமியின் கவிதைகள் சில சமயம் சுட்ட முயல்கின்றன. 13ஆம் எண்ணிட்ட கவிதை

 கையில் பெரிதாகப் பை / வேகமாக / ஒரு நினைப்பில் நடந்தான் / எதிரில் வந்த யாரையும் / பார்க்கவில்லை / சுட்டெரிக்கும் வெயில் / பெரிதாகப் படவில்லை

 அவ்வப்பொழுது / சட்டைப் பையிலிருந்த / துண்டுச்சீட்டு எடுத்து / வாங்க வேண்டிய பொருள்கள் / பார்த்தான் / யாவும் பையில் / வீடு திரும்பினான் / புற அக அடையாளம் / அழிந்து / பூட்டியிருந்தது / கதவு திறக்க என / உட்கார்ந்திருந்தான் / இரவும் பகலும் / வீட்டின் கதவு / திறக்கப்படவில்லை

 பக்தி மார்க்கத்துக் கவிதையின் ஓர் அம்சத்தை நவீனக் கவிதையாகக் கண்டதுபோல் உள்ளது இக்கவிதை. 'புற அக அடையாளம் அழிந்து' என்பதைக் கவிஞர் கூறும்போது வாசகனுக்குத் தேவையில்லாமல் உதவ முன் வருகிறார் கவிஞர் எனக் குறிப்பிடத் தோன்றுகிறது. கவிதையின் கடைசி வரிகள் கவிதையைத் தெளிவாகக் காட்டித் தருவதால் உதவி தேவையில்லை என்று தோன்றுகிறது. பூட்டுப் போட்டுத் திறக்கப்படாத கதவின் முன் காத்திருத்தல் என்ற உணர்வு நவீனக் கவிதையில் கவிஞனின் 'அன்னியப்பட்ட தன்மைக்குஅடையாளமாக அமைகிறது.

 பா. வெங்கடேசனின் ஆயிரம் சாரதாக்களை வாசகர் படிக்க வேண்டும் என்று இங்கு குறிப்பிடுவது தவறாகாது. இந்தத் தனிமைப்பட்டதின் பிம்பம் பல சூழல்களில் நவீனக் கவிதையில் நிழலாடுகிறது. பழனிசாமியின் இக்கவிதை ஆழ்ந்த சோகத்தை எழுப்புகிறது. 'அல்லி இருவது நம் மதன். இல்லி இருவது சும்மனெ' என்று புரந்தரதாஸர் பாடினார். பழனிசாமியின் கவிதை இப்படி ஆறுதல் சொல்லவில்லை. இம்மனைக்கும் அம்மனைக்கும் இடைப்பட்ட வெளியில் நிகழும் அனுபவங்களைத் தீர்க்கமாகக் காட்டுகிறது இவரது கவிதை. மூன்றாம் பத்தியில் சொல்லப்பட்ட யதார்த்தத்தின் மீதும் கருத்து தன் வலிமையைக் காட்டுகிறது.

 மரணம் பிழிந்து என்ற பகுதியில் உள்ள கவிதைகள் குறித்துச் சில  ஐதீகமான கேள்விகள் எழுகின்றன. உதாரணமாக மற்ற இந்திய மொழிகளைப் போலவே தமிழ் மொழியிலும் பல மரபுகள் இருந்தன. தொடக்கத்தில் வைதீகம், பௌத்தம், ஜைனம், ஆசிவிகம் சம்பந்தமானவையும் பின்பு சைவ, வைணவ சம்பந்தமானவையும் தமிழில் இருந்து வருகின்றன. இந்த மரபுகளின் ஐதீகங்களில் தேவதைகள் சில பொதுவாக இருந்தாலும், மரணத்துக்குப் பின் என்ன என்ற கேள்வி பதில்களில் மாறுபடுகின்றன. இந்த ஐதீகங்களில் கவிஞர்கள் எந்த ஒன்றையோ அல்லது எல்லாவற்றையுமோ சமயோசிதமாகப் பின்பற்றலாம்தான்.

 இந்த பகுதியின் முதல் கவிதையைப் பார்க்கும்பொழுது உரையாடி ஹிந்துக்களில் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதை அறிய முடிகிறது. கண்ணாடிப்பெட்டி, (சவத்துக்கு) ரோஜாப்பூ மாலை மரியாதை, பறை மேள ஒசை, பந்தல் முதலியன பற்றிக் குறிப்புகள் இறந்தவர் இன்னார் என்று தெரிகிறது. குறிப்பாக பறை மேள ஓசை. ஆனால் மற்ற கவிதைகளில் இந்த உரையாடிதான் வருகிறார் என்று சொல்ல முடியாது. 'சாம்பலாகச் சட்டியில் கிடந்தேன்' என்ற வரியும் ஒரு தகவலைத் தருகிறது. 'சாம்பலாகச் சட்டியில் கிடந்தேன்' என்ற நவீனக் கவிதையின் தோற்றத்துக்குப் பின்தான் கவிதையால் சொல்ல முடிந்திருக்கிறது. 'ஞாபக உடல்' என்ற தொடரும் 'விழிக்காது பொருள் பார்க்கிறேன்' என்ற கூற்றும் மரணத்துக்குப் பிந்திய நிலை பற்றிய  ஒரு குறிப்பிட்ட ஐதீக விளைவுக்குள் கவிதையைக் கொண்டு வருகின்றன. மரணத்துக்குப் பின்னும் ஓர் உடலிலிருந்து மிஞ்சும் விஷயங்கள் உண்டென்னும் நம்பிக்கை சார்ந்தது இக்கவிதை.

 'மரணம் பிழிந்து' பகுதியில் அங்கங்கே தெறிக்கும் பல சொற்கள், தொடர்கள், பால்வீதி, நட்சத்திர ராசிகள் முதலிய மரணத்துக்குப் பின் ஜீவன் தொடரும் பயணத்தைப் பற்றிய ஐதீகங்களை நினைவுப் படுத்துகின்றன.