Ads 468x60px

Social Icons

Saturday 13 October 2012

'கவி'


'கவி' மீது தீபம் இதழ்


மரபுக் கவிதைகளின் ஆதிக்கம் குறைந்து புதுக்கவிதைகளின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கும் இன்றைய நிலையிலும் தொடரப்பட்டு, அங்கொன்று இங்கொன்றுமாக, சிறு சிறு காவியங்கள் எழுந்த வண்ணம்தான் இருக்கின்றன. அப்படி எழுந்தவொரு நூல்தான்  இந்த நூல் (கவி)

இன்றைய சமூகத்தில் இருக்கும் மனிதாபிமானமின்மை, போலி வாழ்க்கைமுறை, செல்வம் தேடலையே குறிக்கோளாகக் கொண்ட  வாழ்க்கை நெறி மற்றும் ஏமாற்றுத்தனம் ஆகிய குறைபாடுகளை நீக்கச் செய்வதற்கான மற்றுமொரு முயற்சியே இந்நூல். அநாதையாகப் பிறந்து சமுதாயத்தின்மீது காதல் கொண்ட கவிஞனாக மாறி முடிவில் ஏமாற்றுக்காரர்களால் நஞ்சிட்டுக் கொல்லப்படும் ஒரு கவிஞன்தான், இச்சிறு காவியத்தின் கதாநாயகன்.  

நூலாசிரியர் க.வை.பழனிசாமியிடம்  கவிதை இருக்கிறதென்பதை யாரும் மறுக்க முடியாது. உதாரணத்திற்கு சில :

ஊர்கூடி அழுதார்கள்
சொற்களில் மட்டும்
சோகம் ஒட்டிக்கொண்டிருந்தது
அங்கு
அழுவது....
தொழிலாக நடந்தது.

பட்டினிகள்
பந்தியில் புகுந்துவிட்டால்...
எறிகின்ற எச்சில்களுக்கு
எவர் வருவார்?

கவிஞன் என்பவன் அவனிடம் உண்மையான கவிதை குடிகொண்டிருக்கும் பட்சத்தில், மெல்ல மெல்ல ஒரு புரட்சிக்காரனாக மாறிப் போய்விடுகிறான். இதற்கு பாரதியே தலை சிறந்த உதாரணம். அதுபோலொரு புரட்சிகாரனய்த்தான் இந்நூலின் நாயகனும் சித்தரிக்கப்படுகிறான். ஆக, கவிதை தர்மமும், கவிஞனின் தர்மமும் இந்நூலில் காப்பாற்றப்படுகின்றன.

அட்டை, அமைப்பு, அணுகுமுறை, அபிப்பிராயம் என எல்லாவற்றிலும் ஒரு புதுமையைத் தெரிவிக்கிறது இந்நூல்.

'கவி' நூல் விமர்சனம்: தாமரை 1987 டாக்டர் இராகுலதாசன்

'கவிதை என் கைவாள்' என்ற முழக்கத்தை இன்று நம்மிடையே வாழும் ஒரு ஒரு நவகவி நமக்களித்தான். அந்த முழக்கத்தை மேற்கொண்டு, இன்று தமிழ்க் கவிதை படைத்து வரும் கவிஞர்கள் வரிசையில் கவிஞர் க.வை.பழனிசாமி கவனத்திற்கு உரியவராகிறார்.

பைபிள் நடையும், கவிஞர் கண்ணதாசனின் நடையும் நினைவு படுத்தும் எளிமை மனதை கவர்கிறது. கவிதை அமைப்பு மிக நெகிழ்ந்து போகிற இடங்களில், கருத்துக்கள் கூர்மையாக அமைந்து வாசகர்களை ஈர்த்துக் கொள்கிறது. நூலின் முக்கியமான பகுதி எனக் கொள்ளத்தக்க போராட்டப் பகுதி இன்னும் சிரிது விரிவாக, அமைக்கப்பட்டிருக்கலாம்.

இவன்
தான் வடித்த குருதியில்
சிவப்பானவன்.
உலகை
சிவந்து விழிக்கும்
உரிமையுள்ளவன்

என்ற வரிகள் 'கவியை' சரியாகவே நமக்கு அடையாளம் காட்டுகின்றன. 'தான் வடித்த குருதியில் சிவப்பானவன்' என்ற வரி - சிகாகோ நகரில் சிந்திய முதல் ரத்தத்தை நினைவுபடுத்தும் ஆழமுடையது.

'கவி'யும் அவளும் மணம் செய்து வாழத் தலைப்படுகின்றனர். வாழ்க்கை யாருடையதே ஆயினும், அது சூழ்நிலையால், சுற்றுப்புறத்தால் சமுதாயத்தினால் தான் தீர்மானிக்கப்படுகிறது என்ற சமூக விஞ்ஞான உண்மையைக் கவிஞர் பழனிசாமி மிகவும் ஆழமாகவே குறிப்பிடும் இடம் கவனத்துக்கு உரியது.

வாழ்க்கையின்
முதல் அத்தியாயத்தை மட்டும்
இருவரும்
எழுதி முடித்தார்கள்.
மீதி அத்தியாயங்களை
இவர்களின் அனுமதியின்றி
சமூகம் எழுதத் தொடங்கியது.

என்கிறார் கவிஞர். கவிதையும், காட்சி அமைப்பும், கவிஞரின் தெளிவான சிந்தனையும் ஒருங்கிணைந்து நிற்கும் சிறப்பான இடம் இது எனலாம்.

மனிதனை மனிதன்
நேசிக்கும் மந்திரமே
பூமி மூச்சிழுக்கும் காற்று.

வீதியின் புழுதியில்
வீழ்ந்து கிடக்கும் வாழ்வுகளை
கைப்பிடித்துக் கூட்டி வரும்
மதமும் இஸமும்
எனக்கு வேண்டும்.

உலகின் கோடியில்
அழுகின்ற குழந்தையை
அள்ளியெடுக்கும்
பொதுமொழி வேண்டும்.

என்று 'கவி' முழங்குகிறான். சாதி, இன, சமய, கால தேச வர்த்த மானங்களையெல்லாம் கடந்து நிற்கும் அந்தப் 'பொது மொழி' மார்க்ஸிய மொழிதான் என்பதை நூலுன் ஆசிரியர் கவிஞர் க.வை.பழனிசாமி ஆழமாகவே வெளிப்படுத்துகிறார்.

கவிஞரின் எழுதுகோல் சரியான திசை நோக்கித்தான் விழித்துப் பயணம் மேற்கொண்டிருக்கிறது. அதற்கான காரணத்தை அவரே முன்னுரையில்

தேவையின் உந்துதல்
பாலைவனத்தையும்
தோண்டிப்பார்க்கும்.
சூரியனையும் விழுங்கும்
சூழல்கள் அறிந்தும்
எழுதுகோல் உறங்குமா?

என்று சொல்கிறார். தமிழ்நாட்டின் தேவை அறிந்து, சூழல் அறிந்து, ஒரு நல்ல கதைக் கவிதை நூலினைத் தந்துள்ள கவிஞர் க.வை.பழனிசாமி பாராட்டுக்கு உரியவர்.  

No comments:

Post a Comment