Ads 468x60px

Social Icons

Novel

தமிழவனின் 'வார்ஸாவில் ஒரு கடவுள்' 

பிரதிகளைத் தரும் குவி மையம்


    இலக்கியம் குறித்துப் பேசுவது ஒரு போதும் முழுமையைத் தருவதில்லை. மனம் போதாமையில் தோய்வதால் மீண்டும் மீண்டும் அது பற்றிப் பேசுகிறோம். ஆனால் ஒவ்வொரு முறையும் இதன்மீது சொல்ல முயலும் எதுவும் புதிதாக ஒரு பரிமாணத்தைக் காட்டுகிறது. அதனால் ஆர்வம் கூடுகிறது. இப்படி..... பலரும் முயல்வதால், பெருகும் பரிமாணங்களால் உரு கொள்ளும் வடிவில், நமது மனம் லயித்திருக்கும் பொழுதுதே.... வேறு ஒருவர், இன்னொன்றைப் புதிதாகச் சொல்ல..... உருமாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.


 இலக்கியமும் கடவுள் போல, பிடிபடாத மறை இருள் போல, விளங்காமெய் போல அர்த்தம் பொதிந்து சுடர்கிறது. எனவேதான் ஒவ்வொருவரும் புதிதாக ஒன்றைச் சொல்லி மகிழ்கிறோம். இந்த மகிழ்ச்சி தான் இலக்கியத்தின்மீது இத்தனை ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.

 இப்படியான இலக்கியத்தில் நாவல் ஒரு அங்கம். நாவல் என்ற சொல்லே முன்னிலிருந்து வேறானது என்கிற பொழுது புதிதாகச் சொல்ல வேறு ஏதோ நிகழ வேண்டியிருக்கிறது. நிச்சயமாக அது வெறும் அனுபவம் மட்டுமல்ல. அனுபவம் இல்லாத மனித உயிர் கிடையாது. அனுபவம் ஒரு வாயில்தான். வாயிலைப் பார்த்தே பிரமித்து நின்றுவிடக்கூடாது. உள்ளே  ஒரு பயணம் நிகழ வேண்டும். எண்ணம்தான் பயணம். எண்ணம் எல்லாமும் செய்யும்.

 ஆக முதலில் அனுபவம். . .  பிறகு மனதில் எழும் எண்ணம்.  உடலில் உயிர் இருப்பது போல மனதில் எண்ணம் ஓடுகிறது. இந்த எண்ணம்தான் உண்மையில் மனிதன். பயணம் எப்போதும் உள்ளேதான் நிகழ்கிறது. எண்ணம்தான் நம்மை எல்லா இடங்களுக்கும் கூட்டிச் செல்கிறது. மனவெளி விரிய எண்ணம்தான் ஊற்று. அது ஒரு காட்டாறு. முடிவில்லாத மழையில் பெருக்கெடுத்து ஓடும் ஆறு. அப்போது ஜனிக்கும் மனவெளிக¢குள் பிரபஞ்சமே பம்பரமாய்ச் சுழலும். ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல. கற்றுத் தரக்கூடியதும் அல்ல. இயல்பிலேயே ஒருவன் அவ்வாறாக இருப்பது.

 எண்ணம் கூட்டிச் செல்கிற இடம். எண்ணம் கூட்டிச் சென்ற அந்த இடமிருந்து மனம் அப்போது பார்க்கின்ற வெளி. ஆக அனுபவத்திற்கு பின்பு நடக்கிற உள் நிகழ்வுதான் மிக முக்கியமானது. அதற்கான சாத்தியமுள்ள மனதில்தான் இது நடைபெறும். எல்லாரிடமும் நடக்காது. நிலவைப் பார்க்கும் அனுபவம் பொதுவானது. இந்த அனுபவம் உள்ள அத்தனைபேரும் கவிதை எழுதுவதில்லை. அப்படிச் சிலர் கவிதை எழுதினாலும் ஒவ்வொரு கவிதையும் வேறு வேறாகத்தான் தெரியும். அவ்வாறாக எழுதப்பட்ட எல்லாக் கவிதைகளையும் தொகுத்துப் பார்த்தால் ஒரு சில கவிதைகள் மட்டுமே கவித்துவ மேன்மையில் ஒளிரும். அதற்கானக் காரணம் இதுதான். அனுபவத்திற்குப் பின் நிகழ்கிற ஒரு பயணம்தான் இதை முடிவு செய்கிறது. ஆக கலா பூர்வமான ஒரு பயணம் நிகழ எண்ணம்தான் மூல காரணம்.

நாம் காணும் ஒரு நிகழ்வு
பார்க்கும் ஒரு புறவெளி
கண்கள் தீண்டும் பொருள்கள்
ஐம்புலன் வழி இறங்கும் எல்லாமும் அகவயமாக மாறுகிறது

சுற்றி அலைந்து திரிந்த காடு
வானம் பார்த்தக் காட்சிகள்
கால் நனைக்கும் ஆறு
சந்திக்கும் மனிதர்கள்
மனம் திளைத்த உடல்
பார்த்துப் பரவசமான வசீகர எழில்

இவை எல்லாமும் புறவெளியின் அதிர்வுகள்தான். ஆனால் இந்தப் புற நிகழ்வுகள் அகவயமாகி அழியாது மனதில் எங்கோ சேகரமாகிறது. இவை எல்லாவற்றையும் கூட்டிச் சென்று வண்ணம் பூசி மன அடுக்குகளில் சேகரிக்கும் வேலையை யார் செய்கிறார்கள்?

எண்ணம்தான். இந்த எண்ணம்தான் இவற்றை அழைத்துச் செல்லும் வாகனம். எண்ணம்தான் எல்லாவற்றுக்கும் புதுப்புது வண்ணம் பூசுகிறது. வெளியில் பார்த்த காடு உள்ளே இருப்பதில்லை. வெளியில் பார்த்த காட்டை எழுதுவது எழுத்தல்ல. மனதிற்கு உள்ளே இருக்கும் காட்டை எழுதுவதே எழுத்து. உள்ளே இருக்கும் காட்டின் அழகு, அதன் வசீகரம், பிடிபடும் உண்மை எல்லாமும் எண்ணம் சார்ந்தது. மனிதர்களிடம் இது ஒரு தனித்துவமான நிகழ்வு. இந்த இடத்தில் நிகழும் படைப்பு வினைகள்தான் ஒருவனை கலைஞன் ஆக்குகிறது

குக்குக்கூ வென்று குயில் பாடும் பாட்டினிலே
தொக்க பொருளெல்லாம் தோன்றியதுதென் சிந்தைக்கே;
அந்தப் பொருளை அவனிக் குரைத்திடுவேன்;
விந்தைக் குரலுக்கு, மேதினியீர், என்செய்கேன்?

என்கிறார் நம் மகாகவி பாரதி. வேடர் வாராத விருந்துத் திருநாளில் கன்னிக் குயிலொன்று காவிடத்தே பாடியதை (கூவியதை) கேட்டப் பாரதிக்கு 'குயில்பாட்டு'க் கவிதை சாத்தியமாகிறது. அந்த இடத்தை அவரே சொல்லுகிறார். ''தொக்க பொருளெல்லாம் தோன்றியது என் சிந்தைக்கே'' என்று. பாரதியின் மன உள் நிகழ்ந்த பயணம்தான் இந்தக் கவிதை. இதை சாத்தியமாக்கியது அவரின் எண்ணம். எண்ணம் இட்டுச் சென்ற இடம். அங்கு அவர் பார்த்த வெளி... பாரதி மட்டுமே பார்க்க முடிந்த இடம். நாதக் கனலிலே நம்முயிரைப் போக்கோமோ என்று நெகிழ்ந்த மனம்தான் அவரை... கனவு காணத் தூண்டியது. கட்டவிழ்ந்த மனம் எண்ணத்தை ஆறாய்ப் பெருக்க உள் நிகழ்ந்தது பயணம். பயண வெளிப்பாடுதான் எழுத்து.

 மனம் திளைக்கும் இப்படியான உள்வெளிப் பயனம்தான் வேறு ஒரு உலகத்தைப் படைத்துக் காட்டுகிறது. எதிர் வினை செய்யாது அது தூண்டும் வழி செயல்பட வேண்டும்.  கலையின் சிருஷ்டி மையம் இந்தப் புதிய வெளிதான். அந்த வெளி வேறு யாரும் பார்க்காத வெளி. படைப்பாளி மட்டும் பார்த்த, பார்க்க முடிகிற வெளி. கலைஞனுக்குள் இப்படி ஏற்படும் நிகழ்வை கலைஞன் அறிவதில்லை. இயல்பாகவே அப்படி நிகழ்வதால் அவனிடம் அது பற்றிய பிரக்ஞை இல்லை. கலை வெளிப்பாடு என்பது இதனால்தான் சாத்தியமாகிறது.

 இந்த இடமிருந்து பார்த்தவற்றை உணர்ந்தவற்றை எழுதுவது நாவல் எனத் தோன்றுகிறது. அந்த வகையில் எழுதப்படும் நாவல்தான் முன் சொல்லப்பட்டவைகளிலிருந்து வேறாகவும் தனித்தும் இருக்கும். அப்படியான ஒரு உள் மன நிகழ்வு தமிழவனுக்கு ஏற்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். நாவலை அக்கறையோடு வாசிக்கும் யாரும் இதில் உள்ள புதுமையைக் கண்டிப்பாக உணர்வார்கள். அனுபவத்தை அப்படியே கலையாக¢க முயன்றவர்களிடம் நாவலை/கலையை பார்க¢க முடியவில்லை.

 தமிழவன் நீண்டகால விமர்சகர். தற்பொழுதுள்ள விமர்சகர்களில் மிக முக¢கியமானவர். ஜே.ஜே. சில குறிப்புகளின்மீது அன்று அவர் வைத்த விமர்சனம் முற்றிலும் வேறானது. விமர்சனம் குறித்த இலக்கணமாகவே கருதலாம். நாவலும் விமர்சனமும் இரு நிகழ்வுகள் என்கிறார். ஒவ்வொரு நாவலுக்கும் அதற்கேயான தனி விமர்சனம் வேண்டும் என்கிற அவரது பார்வை கவனிக்கத்தககது. அவரின் இந்தக் கருத்துக்கள்தான் ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ நாவலை ஆவலாகப் படிக்கத் தூண்டியது.

 ஒரு கனவுவெளியை, ஒரு மாயத்தோற்றத்தை காட்ட முயல்கிற இடங்கள் இந்த நாவலில் நிறைய உள்ளன. விஜயாவோடு சந்திரன் சேர்ந்திருக்கும் பல இடங்கள் குறிப்பாக அந்த குகை உடலும் மனமும் சேர்ந்து விரியும் வெளியாக அற்புதமாக தோற்றம்கொள்கிறது. சந்திரனின் மனோரதத்தின் பாத்திரமாக வந்துபோகும் மாக்தா, இவர்கள் இருவரின் நெருக்கத்தில் அப்போது விரியும் உடல்வெளி, நண்பன் வீட்டில் வசித்த உயரமான பொட்டு வைத்த அடிக்கடி துப்பும் பெண், சிறு வயதில் சிவப்பு ஊற்றைக் காட்டுவதாகச் சொல்லி சந்திரனை அழைத்துச் சென்று காட்டும் இடங்கள், லிடியா தன் பத்தொன்பதாவது வயதில் இருபத்தி நான்கு வயது இளைஞனை சந்திப்பதும் அவன் அவளிடம் கூறும் இந்தியப் பழமும் அப்படியான இடங்கள்தான்.
   
 உடலின் கொண்டாட்டம் நாவலின் மொழியோவென வாசிப்பில் ஒரு எண்ணம் நம்மைப் பின் தொடர்வதை உணர முடிகிறது. ‘’யாருமில்லாதபோது இரண்டு மனித உயிர்கள் ஒன்றை ஒன்று அணைக்கும்போது இரண்டு உயிர்களின் முழு ஆற்றலும் எழுந்து வெளிப்படுவதை நானும் விஜயாவும் உணர்ந்தோம்’’ சந்திரன் குகைக்குள் இருக்கும்போது விஜயாவின் நெருக்கத்தை இப்படி உணர்கிறான். ‘இந்த இடத்திலேயே செத்துப்போகலாம் போல் சந்தோஷமாக இருக்கிறது’’ இது விஜயா. இதையே பிறகு சந்திரனும் கூறுகிறான்.

சந்திரன் விஜயா அமலா அஷ்வினி பிரதாப் அன்பழகன் ( ராஜேஸ் ) சந்திரனின் பர்மியத் தாய் அன்னா மாலினோவ்ஸ்கா லிடியா பியோத்தர், சந்திரன் சிறு வயதில் சந்திக்கும் அக்கா, வார்ஸா, மியான்மர், சந்திரனின் கிராமம் இவை யாவும் இந்த நாவலில் கட்டுமானப் பொருள்களாகக் குவிந்துள்ளன. இவற்றிலிருந்து வாசகன் தனக்கான ஒரு வடிவத்தைக் கட்டமைத்துக்கொள்ள முடிகிறது. வடிவமின்மைதான் இதில் வடிவம். வடிவமின்மையே வடிவங்களுக்கான சாத்தியம் என்ற புத்தரின் பார்வை இந்த இடத்தில் நினைவில் வர வேண்டும்.

சந்திரனின் தாத்தா இரண்டாம் உலக யுத்தத்தின்போது பர்மாவிலிருந்து வெளியேறுகையில் வழியில் சேகரித்த பல பொருட்களோடு உயிருள்ள ஒரு நாய்க்குட்டியைத் தூரத்திலிருந்து பார்த்துத் தூக்கிக்கொண்டு வந்ததாகச் சந்திரன் லிடியாவிடம் தன் வாழ்க்கையைச் சொல்லத் தொடங்குகிறான். அந்த உயிருள்ள நாய்க்குட்டி என் அம்மா என்கிறான். அப்போது அவன் அம்மாவுக்கு மூன்று வயது. இந்த இடம் நாவலை வேறு ஒரு தளத்திற்கு நகர்த்துகிறது.

லிடியா சந்திரனிடம் இவ்வாறு பேசுகிறாள். ‘’சரித்திரம் மரபணு வம்சம் ரத்தம்... இப்படி... இப்படி... சொல்லி இரண்டாம் உலக யுத்தத்திற்கு இடப்பட்ட அத்தனை தத்துவரீதியான அடிப்படைகளையும் தென்னிந்தியாவில் ஒரு மனிதன், மனித அன்பால் உந்தப்பட்டு ஒரு குழந்தை பரிதாபமாக சாகக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் உதறி எறிந்திருக்கிறார்.’’ லிடியாவின் இந்த கூற்று ஏனோ நம்மை ஒரு குற்ற உணர்வுக்குத் தள்ளுகிறது. சமீபத்தில் இலங்கையில் நடந்த படுகொலையில் அனாதைகளான குழந்தைகள் நினைவில் வருகிறார்கள்.

 அந்த மூன்று வயது குழந்தை இந்த நாவலுக்கு ஒரு உலகலாவியப் பரப்பைத் தருகிறது. பர்மிய ரத்தமும் தமிழ் ரத்தமும் எந்தவித எதிர்ப்பும் இல்லாது இணைந்த அதிசயத்தை லிடியாவோடு நாமும் வியக்கிறோம். இந்த சங்கமம்தான் நீரையும் நெருப்பையும் இணைக்கிறது. சந்திரன் லிடியாவிடம் கூறுகிறான் ‘’நான் நெருப்பாலும் நீராலும் செய்யப்பட்ட மனம்கொண்டவன்.’’ நெருப்பு பற்றுவதை முன் கூட்டி அறிவது அம்மாவிடமிருந்தும் நீர் இருக்கும் இடத்தை அறிவது அப்பாவிடமிருந்தும் சந்திரன் பெறுகிறான்.

 இந்த நாவலின் பாத்திரங்கள் எல்லாமும் தனித்து ஒரு மூலகம்  போல் இயங்குகின்றன. யாரும் யாருக்காகவும் இல்லை. அவ்வப்போது சேருவதும் விலகுவதுமாக இயங்கி புதுப்புது வெளிகளை உருவாக¢கி சற்றே வாசகனை அலையவிட்டு பிறகு தங்களுக்கேயான பிரத்யேகக¢ குணங்களை இழக்காது சுயத்தோடு செயல்படுகின்றன. அதனால்தான் பாத்திரங்கள் வாசக உணர்வுகளுக¢கு ஏற்ப வடிவங்களைக் காட்டும் கட்டுமானப் பொருள்களாகத் தோற்றம்கொள்கின்றன. அவரவர் திறக்கும் ஜன்னல்களின் வழி பார்வைகொள்ளும் அம்சம் இந்த நாவலின் சிறப்பாகும்.

 கும்மாங்குத்து மதன் ஹுசைன் செக்சனியாவிலிருந்து வந்த இரண்டு இளைஞர்கள் உக்ரைனியர் எல்லோரும் தேசமில்லாதவர்கள். இவர்கள் யாரும் விரும்பி வேறு நாட்டிற்குச் செல்லவில்லை. உயிர் பிழைக்க ஒரு காலடி மண்ணிற்கு அலைகிறார்கள். ஒவ்வொரு அகதிக்குப் பின்னாலும் மனித சமூகத்தின் வக்கிரம், அழுக்கு, மிருகவெறி, சுயநலம், வஞ்சகம் இன்னும் இப்படியான நூறு சொற்களைச் சொன்னாலும் கொடூரத்தின் கொஞ்சமான முகத்தைத்தான் காட்ட முடியும்.

 தமிழவன் விவரிக்கும் இந்த இடம் நாவலின் மிக முக்கியமான பகுதி. வேனில் ட்ரக்கில் தட்டுமுட்டுச் சாமான்கள் போல கேவலமாகத் திணிக்கப்பட்டு நாடு தேடி அலையும் அவர்களின் அவலம் மனித நாகரீகத்தின்மீது தேசப்பக்தியின் மீது ஏன் நம்மீதே மலத்தைக் கொட்டத் தோன்றுகிறது. காலூன்ற மண் தேடி அலையும் பரிதாபம் நெஞ்சில் நெருப்பாய் இறங்குகிறது.

 இதில் வரும் அகதிகள் யாரும் பயங்கரவாதத்திற்குத் துணை போனவர்கள் அல்ல. தீவிரவாதத்தை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்தவர்களும் அல்ல. மிகச் சாதாரணமான மக்கள். அதுவும் மிக இளையர். உயிரைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடும் அப்பாவிகள். இந்த இடங்களில் எல்லாம் தமிழவன் ஒரு வார்த்தையும் பேசாது பாத்திர அதிர்வுகளின் வழியாக வாசக மனத்தில் நிரந்தர அலையைத் தோற்றுவித்து விடுகிறார். ஒரு நாவல் இப்படித்தான் இயங்க வேண்டும். இலக்கணம் தெரிந்தவர் இலக்கியத்தையும் படைக்கிறார். க. நா. சு சாதிக்க முடியாத ஒன்றை தமிழவன் சாதிக்கிறார்.

மதன் என்று அழைக்கப்படும் குலசிங்கம் தனக்கான ஒரு இடம்தேடி அலைகிறான். மதனின் அக்கா ஜெர்மனியிலிருக¢கும் அவளது கணவனின் தம்பிக்குச் சொல்லி தன் தம்பிக்கும் ஒரு வேலை வாங்கிக் கொடுத்துத் தம்பியைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி ஏற்பாடு செய்து அவளது ஆபரணங்களைத் தன் கணவனுக்கும்கூட தெரியாமல் அடகு வைத்து பணம் கொடுத்து கொழும்பில் உள்ள ஒரு ஏஜெண்டு மூலம் அனுப்பிவைக்கிறாள். கும்மாங்குத்துவைப்போல அவனும் மாஸ்கோவில் இறங்கி ஆடுமாடுகள் போல அடைக்கப்பட்டு ரகசியப் பயணம் மேற்கொள்கிறான்.

பயண இறுதியில் பனி கட்டிகள் கிடக்கும் ஒரு மைல் தொலைவு ஆற்றில் இறங்கி கடக்கும் முயற்சியில் மதன் என்று அழைக்கப்பட்ட குலசிங்கம் பனி இளகி இழுத்துப்போக இறக்கிறான். காலூன்ற மண்தேடி அலைந்த தமிழ் அகதியின் முடிவு வாசிப்பின்போது உள்ளே நிரந்தர வலியை ஏற்படுத்திவிடுகிறது. கொஞ்சமான தூரத்தில் அவன் இனத்தின் மண் இருந்தும் அவனுக்கு வாழ்வு தராத அவலம்தான் அந்த வலி. தமிழவன் எழுத்து அதைச் சரியாகச் செய்திருக்கிறது.

 குமாங்குத்து சிவனேசனாக வளர்ந்து வார்ஸாவில் ஒரு கடவுளாக உருக்கொள்கிறபொழுது தன் சிருஷ்டி சக்தியை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு உயிரைப் படைக்கிறார். கேன்வாஸில் தீட்டப்ப்படும் ஒரு ஓவியத்தின் வழியாக இறந்த மதன் அதாவது தமிழ் அகதி மீண்டும் உயிர் பெற்று சிவநேசனைத் தேடி பலமுறை வந்து போகிறான். மனதில் ஒரு நம்பிக்கை வேரூன்றுகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு வார்ஸாவில் ஒரு கடவுள் என்பதாக. அப்போது நாவல் நம்மிடம் மேலும் நெருங்குகிறது.

 லிடியா, அன்னா இருவரும் சந்திரனைத் தேடி வர ஒரு முகாந்திரமும் இல்லை. ஆனால் வருகிறார்கள். மிக நெருக்கமாகப் பழகுகிறார்கள். தங்களைப் பற்றி அவன் கேட்காதே எல்லாமும் சொல்கிறார்கள். லிடியா சொல்கிறாள் ‘’ஸாரி, ஒரே ஒரு நாள் பழக்கத்தில் என் வாழ்க்கையில் இப்படித் தொடர்ந்து பாதுகாத்துக் கொண்டிருப்பதும் அந்தரங்கம் மிக்கதுமான பல விஷயங்களை உங்களிடம் சொல்லும்படி ஏன் என் உள்குரல் தூண்டியது?’’

 அன்னா மாலினோவ்ஸ்கா மூலமாக சந்திரனின் கதை ஏன் சொல்லப்பட வேண்டும்? நாவலில் இந்த பாத்திரங்கள் எப்படி முளைத்தார்கள்? இந்தக் கேள்விகள்தான் நாவலை மேலும் நவீனமாக்குகிறது? நாவலின் வடிவம், வடிவமின்மையின்  மீது  கட்டமைக்கப்படுவது இதனால்தான் நிகழ்வதாகப்படுகிறது. அஷ்வினி அன்பழகனை ராஜேஸாகப் பார்ப்பதும், அமலா எழுதிய கடிதத்தை ஒரு ஆண்டு கழித்து வாசிப்பதும், சிவனேசன்... போனில் அந்தக் கடிதம் குறித்துப் பேசுவதும், அதற்கு முன்பாக விஜயா நினைவாக ஒரு கனவு வருவதும் புனைவின்மீது வசீகர வண்ணம் பூசுகின்றன. இரு வேறு உலகங்களின் நிகழ்வுகளை ஒரு தளத்தில் பார்க்கவைக்கும் முயற்சியில் தமிழவன் வெற்றி கண்டுள்ளார். இதனால் காலவெளி அழிக்கப்பட்டு நிகழ்வின் கணம் உறைந்து ஒரு பாத்திரமாக உருக் கொண்டு இயங்கி வாசகனைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது. வாசிப்பில் இதுவே ஒரு வாசனையாக மாறி வார்த்தைகளின்மீது ஒருவித மோகத்தைத் தூண்டுகிறது.

 வார்ஸாவில் இறங்கும் சந்திரனுக்குப் பிரக்ஞை தட்டுகிறது அல்லது அதை கொஞ்சநேர மரணம் என்று சொல்லலாம். இந்தச் சிறு மரணம் நாவலில் சொல்லப்படும் பல நிகழ்வுகளை வேறுமாதிரியாக யோசிக்கவைக்கிறது. பாத்திரங்களுக்குப் புது வண்ணம் பூசுவதாகவும் சொல்லலாம். சிவநேசன், லிடியா, அன்னா, லிடியாவின் சகோதரன் எல்லோருமே இந்த மரணம் தோற்றுவித்த வெளியின் பிரஜைகளாகத் தோன்றுகிறார்கள். மற்றவர்கள் சந்திரனின் பிரக்ஞையில் எப்போதும் இருப்பவர்கள். இந்த இரண்டின் கலப்பாக நாவலில் அவ்வப்போது காட்சியாகும் வெளிதான் நவீனத்தை எழுத்தில் இறக்குகிறது. இந்த ஈரம் தோயும்போதுதான் விஜயா வேறுவேறு பரிமாணங்கள் கொள்கிறாள். இது மற்ற பாத்திரங்களுக்கும் பொருந்தும். சாதாரண அன்பழகன் ராஜேஸாக மாறி ஹோட்டல் அறையின் கூரையைக் கிழித்து மாயமாவதும் இந்த கலப்பின் காரணமே. விஜயாவின் கிராமத்தில் விரியும் வெளி, அவள் அழைத்துப்போகும் இடங்கள், தந்தையின் தம்பி, ஊரில் சந்திரன் அக்கா என்று அழைக்கும் அந்த அமானுஷ்யப்பெண், விஜயாவின் மரணம் எல்லாமும் இதை வலுப்படுத்துகின்றன.

சந்திரனின் கூற்று இதை மேலும் தெளிவாக்குகிறது. ‘நான் தனியாக எந்தக் குறிக்கோளுமின்றி கடந்த ஒரு வருடமாய் எதிலிருந்தோ தப்பவோ, எதையோ கண்டுபிடிக்கவோ எந்தக் காரணகாரிய தொடர்புமின்றி எந்த முன் திட்டமின்றி யார் யாரையோ சந்திக்கிறேன். எதை எதையோ பேசுகிறேன். எதிலும் எந்தத் தொடர்புமில்லை. அல்லது ஏதோ தொடர்பு இருக்கிறது. எனக்குத் தெரியாதவிதமாய்---------------------------------- நானும் ஒரு பேயோ என்ற நினைப்பு வராமலில்லை.’

நாவலின் இறுதி அத்தியாயத்தில் மும்பைக்குச் செல்லும் விமானத்திலிருக்கும் போது சந்திரனுக்கு ஒரு மறதி பீடிக்கிறது. வார்சாவில் நடந்த எல்லாமும் நினைவிலிருந்து விடைபெற்றதாக அவன் கூறுவதும் கவனிக்கத் தக்கது. இந்த மறதி சந்திரனுக்கு ஏன் ஏற்பட வேண்டும்? அப்படியானால் வார்ஸாவில் முன் நடந்த எல்லாமும் என்ன?

அன்னா சந்திரனோடு கொண்டிருந்த உறவை முன் அறிந்திராத வேறு ஒரு உறவாக மதிக்கிறாள். ‘’நாம் தகப்பன் மகள் அல்ல. காதலன் காதலி அல்ல. கணவன் மனைவி அல்ல. ஆனால் இந்த மூன்று உறவுகளுக்கும் இருக்கும் சக்தி மிக்க அந்நியோன்யத்தை ஆழமாக நான் உங்களிடம் உணர்ந்தேன். இது புது உறவு. இத்தனை நூற்றாண்டுகளில் மனிதகுலம் புதிய உறவை ஸ்தாபிக்காதது பரிதாபம் என்றே நினைக்கிறேன். இந்த உறவு மிக பலமானது என்பதால் இந்த உறவை முறித்துக் கொள்கிறேன். அந்த பலம் தான் எங்கிருந்தோ என்னையும் உங்களையும் இணைத்தது. முதலும் முடிவும் இல்லாத கதை இனி வரும் காலத்தில் இலக்கியவகையாக ஏன் ஆகக்கூடாது’’ அன்னாவின் இந்த வார்த்தைகள் இந்த நாவலின் உள்ளீட்டை தெளிவாக விளக்குகிறது.

நடுவில் புகுந்து எதுவும் செய்யாதீங்க என்ற சிவநேசனின் வார்த்தைகள் வாசகன், தன்னிடமும் சொல்லப்பட்ட வார்த்தைகளாக உணர்ந்து நாவலை வாசித்தால் புதிய எழுத்தை, புதிய  நாவலை வாசிக்க முடியும். 

‘'ஆதிரை" நாவல் குறித்து க.மோகனரங்கன்

(நாவலை எடிட் செய்வதற்கு முன்பு)

தீராக் கனவு



இப் பிரபஞ்சத்தில் நமக்குத் தெரிந்தவரையிலும் உயிர்ராசிகள் இருப்பது இப்புவிeது மட்டும்தான். அவ்வுயிர்களிலும் கனவு காணத் தெரிந்தது மனித இனம் மட்டுமே. தனது வலை நடுவே இருக்கும் ஒரு சிலந்தியைப் போல, நினைவுகளுக்கு மத்தியிலிருக்கும் நம் மனமும் சதா நினைவுகளை நூற்றுக்கொண்டிருக்கிறது. மனிதர்களாகிய நாமனைவரும் வசிப்பது ஒரே கிரகத்தில்தான். என்றாலும், ஒவ்வொருவரும் அவரவரது எண்ணங்களுக்குத் தக வெவ்வேறு உலகில் வாழ்ந்து வருகிறோம். ஒவ்வொரு மனிதனின் தலைக்கு மேலாகவும், அவனது எண்ணங்களாலும், கனவுகளாலும் பொதியப்பட்ட நினைவு மண்டலம் ஒன்று அதற்கேவுரிய ஈர்ப்பு விசையோடும், இயங்கு விதிகளோடும் சுழன்று கொண்டிருக்கிறது. ஒருவனின் தலைவிதியோடு சம்பந்தப்பட்டிருக்கும் ஜென்ம நட்சத்திரம் போன்றது அது. அவ்வளவு எளிதாக அதன் பிணைப்பை உதறிவிட்டு விலகி நடக்க இயலாது. 

பரிணாமத்தின் பாதையில்  மனிதகுலம் இது காறும் எடுத்து வைத்திருக்கும் ஒவ்வொரு காலடிக்குமான உந்தம், இந்த அனந்த கோடி நினைவு மண்டலங்களில் ஒன்றிலிருந்தே உருவாகி வந்திருக்கிறது. இந்நாவலின் நாயகியான ஆதிரை காண்பதும் அத்தகைய உத்வேகமுடைய கனவுகளில் ஒன்றே. வாழ்வின் உள்ளார்ந்த துடிப்பினை உற்றுக் கேட்க விரும்பும் எந்தவொரு மனமும் இதனுள் ஆழும் போது ஏதோவொரு தருணத்தில் இக்கனவை தனதாகவே கண்டு வியக்கக் கூடும். 

லௌWகத் தேவைகளைப் பொருத்தவரையிலும் நாம் தேர்வு செய்வதற்கு அபரிமிதமான வாய்ப்புகளும், வசதிகளும் கொண்டதாகவே இன்றைய சூழல் உள்ளது. ஆனால் இதற்கு நேர்மாறாக, முன்னெப்போதை விடவும் அதிகமான உளவியல் நெருக்கடிகள் கொண்டவர்களாக நாம் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறோம். வெறும் பொருளாதார மதிப்dடுகளே நம் வாழ்வியல் அறங்களை தீர்மானிக்கும் சக்தியாக மாறிவிட்ட அபத்தத்தினால், ஆன்ம வறுமை கொண்டவர்களாக அமைதியற்று தவிக்கிறோம். இந்த அக வெறுமையை எப்படி, எவ்விதமாக பதில¦டு செய்வது? என்பதே இன்று நம்முன் எழுந்து நிற்கும் தலையாயக் கேள்வி. இவ்வினாவிற்கு தன்வழியில் ஆதிரை தேடும் சமாதானங்களே இந்நாவல். தன் விழைவுகளுக்கு எதிரான தரப்புகளுடன் மோதலோ, முரண்பாடோ கொள்ளாது விலகலையே தனது பாதையாகத் தேர்ந்துகொண்டு அவள் சென்றடையும் அந்த இடம் எது? எங்கிருக்கிறது? 

நாம் நம்முடன் கொள்ளும் உறவு, நாம் பிறருடன் கொள்ளும் உறவு, இறுதியாக நாம் இந்தச் சூழலுடன் கொள்ளும் உறவு இம் மூன்று அடிப்படை ஸ்வரங்களின் விதவிதமான சேர்க்கைகளின் சஞ்சாரங்களிலிருந்தே, நம் வாழ்வின் ஆதாரமான இசை பிறக்கிறது. பல சமயங்களில் இந்த இசையை அனுபவம் கொள்ளுமளவிற்கு நுண்ணர்வு கொண்டதாக நமது கட்செவி உட்குவிந்திருப்பதில்லை.  இதுவே பல நிலைகளிலும் நமது அதிருப்தி உணர்வுக்கு காரணமாகிறது. புறக்கணிப்பின் அவலத்திற்கும், அரவணைப்பின் இறுக்கத்திற்கும் நடுவே வாழ்வின் இந்த உள்ளார்ந்த இசையை தன் விடுதலைக்கான வழியாகக் கண்டடைந்த ஆதிரையின் அனுபவமே இந்நாவலின் புனைவுத் தளமாக விரிகிறது. 

காதலிலிருந்து காமம் வரை, கலையிலிருந்து கணிப்பொறி வரை, சூழல் பாதுகாப்பிலிருந்து இனப்படுகொலை வரை, பங்கு சந்தையிலிருந்து பாரதி கவிதை வரை, இத்தலைமுறை எதிர்கொள்ள நேரிடும் எல்லாத் தீவிரமான தருணங்கள் வழியாகவும் பயணிக்கும் இப்புணைவின் இடையே கற்பனையின் புத்துணர்வையும், தர்க்கத்தின் அருமையையும் அவற்றை பிணைக்க முயலும் மொழியின் தயக்கங்களையும், தவிப்புகளையும் ஆங்காங்கே காணமுடிகிறது. 

கனவுக்கும் புனைவுக்குமிடைப்பட்ட பிரத்தேயகமான உணர்வுத் தளமொன்றின் வழியாகவே இக்கதைப்பரப்பு தோற்றம் கொள்கிறது. அந்த உணர்வுத் தளத்தை கையகப்படுத்த க.வை. தனக்கே உரித்தான ஒருவகை மொழி நடையை பயன்படுத்துகிறார். கதைப் போக்கில் ஒரு திரையென உருப்பெறும் இந்நடை சில இடங்களை வெளிச்சப்படுத்தவும், சில தருணங்களை மர்மப்படுத்தவும் உதவியபோதும் சில நிகழ்வுகளை தெளிவின்மையால் மூடி மறைக்கவும் காரணமாகிறது. சரளமான வாசிப்பிற்கு பதிலாக இடைநிறுத்தங்களைக் கோரும் இம்மொழி பல சமயங்களில் கவனமான வாசிப்பையும் கோருகிறது. 

கதை நாயகன் (அ) நாயகி பெயரை நாவலுக்கு தலைப்பாக வைப்பது தொன்றுதொட்டு இருக்கும் வழக்கம்தான். எனவே இந்நாவலுக்கு ஆதிரை எனப் பெயரிட்டிருப்பதில் புதுமை எதுவுமில்லை. ஆனால்  ‘ஆதிரை’ என்பது மணிமேகலையில் வரும் ஒரு பாத்திரத்தின் பெயர் என்பதை நாம் கணக்கில் கொண்டால், இந்நாவலுக்கு தவிர்க்க முடியாமல் ஒரு வரலாற்று தொடர்ச்சியும், வேறொரு குறியீட்டு அர்த்தமும் ஏற்படுவதை உணரலாம். காப்பிய கால ஆதிரை கற்புக்கு இலக்கணமாக விதந்தோதப்பட்டவள். அவள் கையால் இடப்பட்ட முதல்பிடி உணவுதான், அட்சயபாத்திரத்தில் அள்ள அள்ள குறையாமல் நிறைந்து பல்லாயிரக்கணக்கோரின் பசியை தணித்து வைத்தது. க.வையின் ஆதிரையும் அவ்வாறான முதல்பிடி உணவாக தனது ஒரு கனவையே வாழ்வின் மொத்தத்திற்குமாக நம்முன் விரிக்கிறாள். இது இளையோரின் அகப்பசியை அவிக்கும் தன்மையிலானது. மனத்துக்கண் மாசிலாது வாழ விழையும் இவளது நடத்தை தமிழின் தொல்படிமமாக மாறிவிட்ட கற்பின் வரையறையை தனக்கேயுரிய வகையில் மாற்றி எழுதுகிறது. 

நம்முடைய மனதின் சுவையரும்புகள் நலிந்துவிடாது, வாழ்வின் கிண்ணத்திலிருந்து நமக்கான அமுதை வடித்துப் பருகுவது எவ்விதம் எனும் அடிப்படையான உண்மையைக் குறித்தே இந்நாவலில் பேசுகிறாள். உண்மை எப்போதுமே எளிமையானது, சாதாரணமானது எனவேதான் அதை நம்புவதும், பின்பற்றுவதும் நமக்கு சிரமமாக இருக்கிறது.




'ஆதிரை' நாவலை வாசிப்பதற்கு முன்பு சிலவார்த்தைகள்



மரங்கள் வெட்டப்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுகின்றன. மலைமக்கள், ஆதிக்குடிகள் தமக்கு உரிமையுள்ள  வாழ்விடங்களை இழக்கிறார்கள். காற்று மண் வெளி மாசுபடுத்தப்படுகிறது. குழந்தைகள் பெண்கள் அப்பாவிகள் சொந்த மண்ணிலேயே கொல்லப்படுகிறார்கள், அகதிகளாக விரட்டப்படுகிறார்கள். அவலத்தை இனப்படுகொலையை அரசியலாக்கி ஆதாயம் தேடுகிறார்கள். பத்ரிகைகள் பிற ஊடகங்கள் வெட்கமில்லாது அதில் பணம் சம்பாதிக்கின்றன. மனிதர் நோக மனிதர் பார்த்திருக்கிறார்கள். வக்கிரமானவர்கள் தகுதியில்லதவர்கள் கீழ்மக்கள் கொண்டாடப்படுகிறார்கள். இயற்கையை நேசிக்கிற உயிர்களைப் பொதுவில் மதிக்கிற மனிதர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். இந்தக் கீழ்மனம் நினைத்து யாரும் வருந்தவில்லை. பணம் புகழ் அதிகாரம் மதம் இவற்றின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். விலங்குகள் பறவைகள் பூச்சிகள் இவற்றின் உயிர்வாழும் இடங்களைப் பற்றிய அக்கறை சிறிதும் இல்லாது வயிறுமுட்ட உண்ணமுடிகிறது. சுய வாழ்தல் வெறி உச்சத்தில் நின்று கூத்தாடுகிறது. வார்த்தைகள் பொருள் இழந்து மடிகின்றன. 


இந்தச் சமூகத்தில் வாழும் வாழ்க்கையை மணம் ஏற்காது மூச்சுத் திணறுகிறது.  இருந்து‹ விரும்பும் வாழ்க்கையை வாழ முயன்றுகொண்டுதான் இருக்கிறோம். அப்படி வாழச் சாத்தியம் இல்லாத சூழல் இருப்பில் மாற்றான வேறு உலகம் நாம் அறியாதே நமக்குள் தோற்றம் கொண்டுவிடுகிறது. நம்முள் உருவான அந்த உலகத்தைத் தூக்கிக்கொண்டுதான் இந்த மண்ணில் நடமாடுகிறோம். வெளியில் காணும் எல்லாவற்றிற்கும் உள்ளிருக்கும் உலகில் ஒரு மாற்று இருப்பதாக நம்புகிறோம். மிகுந்த அக்கறையோடு அந்த உலகைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறோம். அதில் புதுப்புது வண்ணங்கள் சேர்த்து மகழ்கிறோம். உள்ளே நமக்கான நாம் விரும்புகிற அழகிய ஒரு உலகம் இருப்பதால்தான் வாழ்க்கையை சகித்துக்கொள்கிறோம். அதில் மட்டுமே வாழ ஆசைகொள்கிறோம். அப்போது அந்தக் கனவே ஒரு சுமையாகிறது. 

உள்ளிருக்கும் உலகத்தை எல்லா நேரமும் தூக்கிக்கொண்டு என்னால் அலைய முடியவில்லை. அந்த உலகில் நுழைய வழியும் தெரியவில்லை. உள்ளே தோற்றம்கொண்ட உலகம் மேலும் மேலும் வண்ணமேறி சுடர்கிறது. குழந்தையை ஈர்க்கும் கைக்கு வராத பொம்மையாகப் பாடய்ப்படுத்துகிறது. இந்த அவஸ்தையே வாழ்க்கையாக மாறிவிடுகிறது. இந்த அவஸ்தை அந்த உலகை முன்னிலும் அழகாக்குகிறது. ஒரு நாள் ஏதோ நடந்து அந்த உலகில் நுழைந்து விடுகிறேன். நிகழ் உலகம் முற்றிலும் அழிந்து  உள்ளே படைத்துக்கொண்ட உலகம் என் வாழும் வெளியாகிறது. அப்போது அடைந்த பரவசத்திற்கு அளவே இல்லை. அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் மனதை அடக்க முடியவில்லை. எனக்குள் கண்ட அந்த உலகத்திற்கு எல்லோரையும் கைப்பிடித்துக் கூட்டிப்போகும் சாத்தியம் இல்லை. என் உதவி இல்லாமலேயே வாசகன் தன் அளவில் அந்த உலகத்தில் பயணிக்க நடந்த முயற்சியே இந்த நாவல். 

கடந்த ஆண்டுகளில் மிகவும் நெருக்கமான இலக்கிய நண்பர்களை இந்த நேரத்தில் நினைவுகொள்கிறேன். ஆனந்த் பிரம்மராஜன் தேவதச்சன் பெருமாள்முருகன் மோகனரங்கன் ஷாஅ குவளைக்கண்ணன் எல்லோரும் இணைந்து அடிக்கடிக்கூடி விவாதித்துக்கொண்டது நட்பையும் இலக்கியத்தையும் வளர்த்ததாக உணர்கிறேன். இவை எல்லாமும் சாத்தியமானது கண்ணன் அவர்களோடு இணைந்து நடத்திய பல்வேறு இலக்கிய சந்திப்புகளால் என்பதையும் மறுக்க முடியாது. 

என் முயற்சி இல்லாமலேயே இந்த நாவல் நஞ்சுண்டனின் வாசிப்புக்கு போனது. எடிட்டிங் என்ற உரிமையில் நின்று நிறைய கேள்விகளை எழுப்பினார். அந்தக் கேள்விகள் அழிய அதிகம் உழைக்க வேண்டியிருந்தது. சில மாற்றங்களைச் செய்ய மனம் ஒப்பவில்லை. குறிப்பாக பயன்படுத்தும் மொழி, வாக்கிய அமைப்பு. பிறகு அதன் அவசியம் புரியத் தொடங்கியது. மகிழ்ச்சியோடு அந்த வேலைகளைச் செய்தேன். எழுதுகிறவன் திறமையான எடிட்டரை எதிர்கொள்ள தயாராகிற கணத்தில் நாவல் வாசகனை நெருங்குவதை உணர்ந்தேன். இதை அனுபவத்தில் நன்றாக உணர்ந்தேன். 

தேர்ந்த வாசகனாகவும் இருந்து இந்த வேலையை நஞ்சுண்டன் கவனமாகச் செய்திருக்கிறார். வார்த்தைகளின் வழியாகத்தான் வாசகன் ஒரு நாவலை புரிந்துகொள்கிறான். அதற்கு மொழிமீதான கவனம் மிக முக்கியமானது. அதை நன்றாகவே புரிய வைத்திருக்கிறார். செம்மைத் தன் பணியைச் செம்மையாகச் செய்திருக்கிறது. 

நாவலை ஆரம்பத்தில் வாசித்து கருத்துகள் கூறி உதவிய மோகனரங்கன் அவர்களுக்கு நன்றி. நாவலைக் கொண்டுவந்த காலச்சுவடுக்கு என் தனி நன்றி.                                  



"மீண்டும் ஆதியாகி'' நாவல் மீது ஞானியின் பார்வை



  ஒரு தீர்க்கதரிசியின் வசனங்களைப் போல உச்ச மொழியில் பேசுகிறீர்கள். தீர்க்கதரிசிபோல கதை சொல்கிறீர்கள். கவிதை சொல்கிறீர்கள். கோபத்தோடு பேசுகிறீர்கள். நிகழ்கால வாழ்வை முற்றாக உதறிக் கொள்கிறீர்கள். மனத்தின் ஆதி தேடி, மனித வாழ்வின் ஆதி தேடி, பிரபஞ்சத்தின் ஆதி தேடிப் பயணம் செய்கிறீர்கள். மனித வாழ்வை முற்றாகக் கலைத்துப்போட்டு ஆதிக்கத்திற்கு இடமில்லாத இன்னொரு வடிவில் மனித வாழ்வைப் படைக்கிறீர்கள்.

   விவிலியத்தில் காணப்படும் தீர்க்கதரிசிகள், இஸ்லாமில் இடம்பெற்ற சூஃபிகள் இப்படித்தான் மனித உணர்வின் உச்சங்களில் செயல்பட்டார்கள். இவர்களை மன நிலை பிறழ்ந்தவர்கள், பைத்தியக்காரர்கள் என்றெல்லாம் ஆதிக்கத்தில் இருந்தவர்கள் குற்றம் சாட்டினார்கள்; சித்திரவதை செய்தார்கள்; கொல்லவும் செய்தார்கள்; சிலுவையில் அறைந்தார்கள்; கழுவில் ஏற்றினார்கள். இவர்களை மக்கள் மறந்துவிடவில்லை. காலங்காலமாக மக்கள் நெஞ்சில் இவர்கள் கனவுகளாய்க், காட்சிகளாய் இன்னும் விளைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் சித்தர்கள் இத்தகையவர்கள். இவர்களைத்தான் Mystic - க்குகள் என்று சொல்கிறார்கள். நீங்களும் இப்படித்தான் கவிதை மனத்தோடு, வாழ்வின் அடிப்படைகள் தேடி, மனம் முதலியவற்றின் ஆதி தேடி அலைகிறீர்கள். 20-ஆம் நூற்றாண்டு இறுதியில் தீர்க்கதரிசிகளின் தோற்றத்திற்கு நிச்சயம் இடம் உண்டு.

   உங்கள் படைப்பை நாவல் என்று சொல்கிறீர்கள். கவிதை வடிவில் நாவல் எழுத முடியும். இதற்கு முன் உதாரணங்கள் உண்டு. நீங்கள் சொல்லும் கதையை tale என்று குறிப்பிடுவது பொருத்தம்தான்; fable என்றும் குறிப்பிடலாம்; பெண்ணிய நாவல் என்பதிலும் ஐயமில்லை; trans நாவல் என்று குறிப்பிடுவதன் பொருள் புலப்படவில்லை. தமிழிலும் தளையசிங்கம் போன்றவர்கள் உங்களைப்போன்று தீர்க்க தரிசனத்தோடு கதை, கவிதை, கட்டுரை என்ற வேறுபாடுகளைக் கடந்து அற்புதமாய் எழுதியிருக்கிறார்கள். இடையிடையே இந்தப் படைப்புக்கான காரணத்தையும் பலமுறை சொல்கிறீர்கள். நீங்கள் தரும் விளக்கங்களை ஏதாவது ஒரு புள்ளியில்/ ஒரு இடத்தில்/ தளத்தில் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். என்னைப் பொருத்தவரை இதில் சிரமம் எதுவும் இல்லை.

   எல்லாத் தீர்க்கதரிசிகளும் கவிஞர்களாக இருந்தார்கள். தமக்கானதொரு உலகைப் படைத்துக் கொண்டார்கள். புத்தர் முதலியவர்களும் இப்படித்தான் தமக்கான உலகைத், தக்கான வரையறைகள் மற்றும் எல்லைகளோடு/ எல்லையற்ற தன்மைகளோடு படைத்துக்கொண்டார்கள். கவிஞர்கள், சிந்தனையாளர்கள் மட்டுமல்லாமல் எந்த ஒரு மனிதனும், சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ இப்படி ஒரு உலகைப் படைத்துக் கொள்ளத்தான் செய்கிறார்கள். புறநிலை அளவில் உலகம் ஒன்றுதான் என்ற போதிலும், மனிதர்களின் அகநிலை அளவில் உலகங்கள் கோடி. மரத்தை வெட்டுபவனோ, ஒரு கற்பாறையை நெம்புகோலால் உருட்டுபவனோ ஒரு தளத்தின்மீது நின்றுகொண்டுதான் இதைச் செய்ய வேண்டும்; கருவி என ஒன்றையும் பயன்படுத்த வேண்டும். வெட்டுவதற்கான தேவை முதலியனவும் இருக்கத்தான் செய்கின்றன. நீங்கள் எடுத்திருப்பது இப்படியொரு படைப்பு.

   தமிழகச் சூழலை மட்டுமல்லாமல் இன்றைய உலகச் சூழலையும் உள்வாங்கிக்கொண்டுதான் இயங்குகிறீர்கள். உலகளவிலான ஆதிக்கங்களையும் அவலங்களையும் நீங்கள் அழுத்தமாக உணர்ந்திருக்கிறீர்கள். தமிழகச் சூழலிலும் எத்தனையோ வகை ஆதிக்கங்களும் அவலங்களும். மனிதர்களை இவை நோகடிக்கின்றன, கூறு போடுகின்றன. இந் நிலையில் வாழ்வின் அர்த்தங்களோ அலகுகளோ இவர்களுக்குள் இல்லை. உருவமும் உள்ளமும் திரிந்து தம்மைத்தாமே மறைத்துக்கொண்டு ஆரவாரம் முதலியவற்றில் தம்மைத்தாமே இழந்து இந்த மனிதர்கள் வாழ்கிறார்கள்.

   மதம் என்றும் இலக்கியம் என்றும் கட்சிகள் என்றும் இவர்கள் தொடர்ந்து தமக்குள் பிரிந்தும் பிளவுபட்டும் அழிந்து கொண்டிருக்கிறார்கள். இலக்கியவாதிகள், படைப்பாளிகள் என்பவர்களும் இத்தகைய மூடத்தனத்திலிருந்து, மூர்க்கதனங்களிலிருந்து விடுபடாதது மட்டுமல்ல, இவற்றையே மூல பலமாகாக் கருதிக்கொண்டிருக்கிறார்கள்; மேற்கிலிருந்து வாங்கிய படைப்புகளை மறுவார்ப்பு செய்கிறார்கள்; தமிழின் ஆழங்களுக்குள் இவர்கள் செல்வதில்லை.; தமிழை நேசிக்கவும் இல்லை. சமூக அக்கறை உடையவர்களைப் போல இவர்கள் வேடம் போடுகிறார்கள். வேடம் போடுபவனுக்குத் தன் சுயம் தெரியாது. சுய விமர்சனம் இவனால் செய்து கொள்ள முடியாது. இவர்கள்தான் இன்று எல்லா அரங்குகளையும் அடைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களிடமிருந்து விலகிச் செல்ல வேண்டும். மனிதனை திரும்பவும் படைப்பது எப்படி என்று சிந்திக்க வேண்டும். மனிதன் மீது குவிந்துள்ள எல்லாச் சுமைகளையும் எல்லா வார்ப்புக்களையும் கேள்விக்குட்படுத்தி ஆராய வேண்டும். இத்தகைய ஒரு ஆய்விலும் நீங்கள் ஈடுபட்டிருக்கிறீர்கள்.

  மனிதனின் வரலாறு, தத்துவங்கள் முதலிய பலவற்றையும் தொடர்ந்து புரட்டிப்பார்ப்பதோடு, மனிதனின் ஆதிநிலை தேடிச் சென்ற எத்தனையோ மனிதர்களை நாம் இப்பொழுது நினைத்துக் கொள்கிறோம்; பிளாட்டோ முதலியவர்கள் இப்படிச் செய்தார்கள். விவிலியத்தில் கூறப்படும் ஆதாம், ஏவாள் கதை இப்படி ஒரு மூலம்/ ஆதி தேடும் கதை. தெய்வத்திடமிருந்து மனிதன் எப்படிப் பிரிந்தான் என்பதற்கான காரணம் தேடும் கதை. மூலத் தீவினை என்றும் அப்புறம் கடவுள் என்றும் சாத்தான் என்றும் கதை சொல்ல நேர்ந்திருக்கிறது. அநேகமாக எல்லா மதங்களும் இப்படி ஒரு படைப்புக்கதையை சொல்லிதான் ஆக வேண்டும். எல்லாத் தத்துவவாதிகளும் மனிதனின் துயரம் முதலியவற்றுகான ஆதியை தேடி இருக்கிறார்கள்.; புத்தர் முதலியவர்களும் இப்படிச் செய்தார்கள்.; ஹெகலும் ஒரு கதை சொன்னார்; மார்க்ஸ் சொல்வது இன்னொரு கதை. வரலாற்று ஆசிரியர்கள், பொருளியல் அறிஞர்கள் முதலியவர்களும் இப்படி தன் நோக்கில் ஆதியைத் தேடுகிறார்கள்.

   நாட்டார் கதைகளிலும் ஆதியைத் தேடுகிற அற்புதமான கதைகள் உண்டு. 'பண்டோராவின் பெட்டி' என்ற கதை நமக்குத் தெரியும். தமிழிலும் தேடினால் படைப்புக் கதைகள் கிடைக்கும். சைவம் சிவன் சக்தி என்ற ஒரு கதை கூறுகிறது. நிகழ்கால வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் முரண்பாடுகள் சிக்கல்கள் முதலியவை எங்கிருந்து தொடங்குகின்றன என்பதற்கான தேடுதல் இத்தகையது. சிக்கல்கள் நமக்குள்ளும் வந்துவிட்டன. நமக்குள்ளும் தேடியாக வேண்டும். தேடிச் சென்றால் ஏதாவது ஒரு விளக்கம் கிடைக்கும். அதை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும். அப்புறம் அதை வைத்து எல்லாவற்றையும் விளக்குவதாகிய முயற்சியைச் செய்ய வேண்டும். இதைத்தான் எத்தனையோ பேர் செய்திருக்கிறார்கள். இவர்கள் வரிசையில் இப்பொழுது உங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை உண்டு. உங்களுக்கும் உண்டு.

     வரலாற்றுக்குள் தேடிச் செல்வதைப்போலவே மனத்தினுள்ளும் இப்படி ஆழமாகத் தேடிச் செல்ல முடியும். மதங்கள் குறித்து பிராய்டு தந்த ஒரு விளக்கம் இங்கு குறிப்பிடத்தக்கது. நிகழ்காலத் துயங்களிலிருந்து விடுபடத் தவிக்கும் மனிதன் தனக்குள் தொடர்ந்து செல்லும்பொழுது, தன் குழந்தை மனம் கடந்தும் தாயின் கருப்பைக்குள் செல்கிறான். அந்தக் கருப்பையின் அற்புதமான பாதுகாப்பு இந்த உலகில் எங்கும் இல்லை. மதம் என்பது இப்படி கருப்பை தேடும் முயற்சிதான் என்றார் பிராய்டு. தியானம் முதலியவற்றில் ஈடுபடுபவர்கள் தம் மனதிற்குள் ஆழ்ந்து சென்று இறுதியில் மனம் கடந்த நிலைக்குள் செல்கிறார்கள்/ செல்வதாகச் சொல்கிறார்கள். ஜே.கே ஓஷோ முதலியவர்கள் நம் காலத்தில் இத்தகைய தியான முறை குறித்து விவரிக்கிறார்கள்.

    மனம் கடந்த நிலைக்குள் செல்லும்பொழுது, சில சந்தர்ப்பங்களில் இவர்கள் உள்ளொளி, நிதர்சனம், காலாதீதம் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். இவர்கள் தெய்வம் பற்றிச் சொல்வதில்லை; ஆனால் தெய்வத்தன்மை என்று பேசுகிறார்கள். வாழ்வின் முரண்பாடுகளிலிருந்து விலகி நிற்கிறார்கள். எல்லாவற்றையும் ஒரு காட்சியில் பார்க்கிறார்கள். ஜென் என்று பேசுகிறவர்களும் இத்தகையவர்கள். இவர்கள் எல்லோருமே தம் மனத்தைக் கடந்து ஆதி நிலை தேடிச் செல்வதாகச் சொன்னவர்கள். அப்படி ஒரு நிலை இருக்கத்தான் வேண்டுமென்ற நம்பிக்கையோடு இவர்கள் சென்றார்கள். காலந்தோறும் மனிதர்கள் மனிதர்கள் புணைந்து வைத்திருக்கிற காரண காரியங்கள், தர்க்கங்கள், அமைப்புக்கள், கல்விமுறை முதலியனவெல்லாம் இவர்களுக்கு உடன்பாடில்லை. இவர்கள் தேட்டம் தீவிரமானது என்பது மட்டுமல்ல. உண்மையானது என்பதிலும் அய்யமில்லை. நீங்களும்தான் இப்படி ஆதியைத் தேடுகிறீர்கள்.

    மனத்தைக் கடந்து, வரலாறு கடந்து, வாழ்வு கடந்து, அப்புறம் பொருள் கடந்து, இயக்கம் கடந்து, பிரபஞ்சம் கடந்து இயங்குகிற ஆதி என்பது குறித்து நீங்கள் நிறையப் பேசுகிறீர்கள். அற்புதமான வர்ணனைகள் தருகிறீர்கள். ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாதது அந்த ஆதி. ஓயாமல் உயிர் / உயிர்கள் என்று பேசுகிறீர்கள்; ஆண் ஆதி என்றும், பெண் ஆதி என்றும் பேசுகிறீர்கள்; மறைபொருள் என்றும் இருள் என்றும் பேசுகிறீர்கள்; மெய்ஞானம் கடந்த மறைபொருள் என்றும் விவரிக்கிறீர்கள்; ஆதிவயல் என்கிறீர்கள். ஆதி என்பது பொருளாகவும் சிந்தனையாகவும் இல்லை. அது உணர்வாக இருக்க முடியும் என்று நான் புரிந்து கொள்கிறேன். பிரபஞ்சத்தின் தொடக்கம் குறித்து அறிஞர்கள் ஆய்கிறார்கள். பிரபஞ்சம் ஒன்றல்ல எத்தனையோ என்றும் கூறுகிறார்கள்.

   மூலப் பெருவெடிப்பிலிருந்து வெடித்துப் பரவுகிற பிரபஞ்சம் மீண்டும் சுருங்குகிறது என்றும் கூறுகிறார்கள். மீண்டும் இது வெடிக்கிறது. பிரபஞ்ச இயக்கத்தில் விடுபடாத எத்தனையோ புதிர்கள். இவற்றையெல்லாம் விளக்கத் தொடரும் கோட்பாடுகள். இவற்றுக்கிடையில் முரண்பாடுகள், மனித வாழ்வின் சிக்கல்கள் என்று தொடங்கி இவற்றுக்கான காரணம், இயக்கம் முதலியவற்றைத் தேடிச் செல்லும்பொழுதுதான் வரலாறு, பொருளியல் என்றெல்லாம் பேசுகிறோம். இவை போதா என்று கருதி கடவுள், சாத்தான் என்றெல்லாம் இடையில் பேசி பிறகு இவற்றையும் ஒதுக்கிவிட்டுப் பிரபஞ்சத் தொடக்கம் என்று பேசி பிறகு அதற்கப்பாலும் செல்வதாகவும், செல்ல முடியுமென்றும் நாம் கருதுகிறோம். விஞ்ஞானிகள் ஒரு புறம் இயங்க, தீர்க்கதரிசிகள் முதலியவர்கள் தம் மனத்திற்குள் பயணம் செய்து, பிறகு மனத்தையும் / அறிவையும் கடந்து சென்று உயிரியக்கத்தின் ஆதியைத் தேடுகிறார்கள்; தம் கையில் ஆதி அகப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

   எல்லையற்ற ஒன்றுடன் இணைந்திருக்கிற ஆதி என்பதை நம்மால் கண்டறிய முடியுமா? என்பது மிக முக்கியமான, கடும் சிக்கல்கள் நிறைந்த ஒரு தீவிரமான கேள்வி. நம் அறிவு, உணர்வு முதலியவற்றின் இயக்கத்தில் பெரும் தீவிரம் கொண்டு, இடையறாது முயன்று, நம் உணர்வுகள் முதலியவற்றை மேலும், மேலும் தொடர்ந்து தீவிரப்படுத்திக் கொள்ளும் ஒரு பயணம் என்று இதைக் கூற முடியும். உணர்வுகள் உச்ச நிலையில் இயங்குகின்றன. இடையில் எத்தனையோ மனக் காட்சிகள். மனம் சிதறாமல் இருக்க வேண்டும்; சிதறுவதற்கு இங்கு வாய்ப்புக்கள் உண்டு. எனினும் இந்த ஆதி தேடும் ஒரு முயற்சி என்பது ஒருவகைத் தர்க்கம், மனித தர்க்கம் என்றுதான் தோன்றுகிறது. பிரபஞ்சம் பொருண்மை கொண்டது / பொருள் சார்ந்தது என்றால், பொருண்மைக்கு அப்பாற்பட்டதாக ஆதி இருக்க வேண்டும். உணர்வுகள் என்பவை நரம்பு மண்டலம் சார்ந்த ஒரு இயக்கம். நரம்பு மண்டலம் என்று சொல்லும்பொழுது மனிதர், விலங்குகள், பறவைகள் குறித்துத்தான் பேசுகிறோம். தாவரங்களுக்கும் உண்ர்வுண்டு. தாவரங்களுக்குள் நடைபெறும் உணர்வியக்கம் எப்படி நடைபெறுகிறது என்பது எனக்குத் தெரியவில்லை. நரம்புத் தொகிதி இல்லாத ஒரு களத்திலும் உணர்வுகள் / சிந்தனைகள் இருக்குமென்று எனக்குத் தெரியவில்லை. ஆதி என்பது ஒரு பொருள் அல்ல; உணர்வு நிலை; மனிதனுக்குள் சாத்தியப்படுகின்ற, தர்க்க ரீதியாக தனக்குள் நிணயம் செய்து கொள்ளுகிற ஓர் உணர்வு நிலை. விலங்குகள் இப்படி சிந்திக்க முடியாது. தன்னையும் தன்னைச் சூழ உள்ளவற்றையும் விளக்குவதற்கு மனிதன் கண்ட இந்தத் தர்க்கம், மனித எல்லைக்கு அப்பால் இப்பொழுது இயங்குவதாக நாம் கருதிக் கொள்ள வேண்டும்.

    உயிர் என்றும், உயிர்கள் என்றும் பேசுகிறீர்கள். உடலையும், உயிரையும் வேறு படுத்துகிறீர்கள். ஒரு உயிராகிய ''அமீபா''வுக்கு அப்பால் நாம் செல்ல முடியாது. உடலோடு கூடியதுதான் உயிரியக்கம். உயிரியக்கம் எப்படித் தோன்றியது என்பது தொடர்ந்து ஆய்வுக்குரியது. உடலிலிருந்து தனித்து உயிர் என்று நம்மால் பேச முடியாது. விண்வெளியில் இருந்து உயிர் வந்ததாகவும் சிலர் சொல்கிறார்கள். ஒரு கருதுகோள் என்று இதைக் கருத முடியுமே ஒழிய இதற்கு மேல் நாம் எதையும் சொல்வதற்கில்லை. அரிவுலகத்தின் ஆய்வு இதுவரை செல்கிறது. மதவாதிகள் அறிவு கடந்து தம்மால் செல்ல முடியும் என்று சமயவாதிகள் சொல்கிறார்கள். இனிக் கடவுள், ஆன்மா என்று பேச முடியும் என்றும் எவ்வளவோ சொல்லிக்கொள்ள முடியும். மனிதனை விளக்குவதற்கான கருத்தாக்கங்கள் என்று இவற்றை நாம் கருத முடியும்.

    இங்கு மனித தர்க்கம் தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்வதுதான் அறிவுடமை. உயிர் தனியே இயங்கும் என்றும் பொருள் இல்லாத நிலையிலும் உணர்வு இயங்கும் என்றும் பிறகு அதுவே பொருள் மற்றும் பிரபஞ்சத்தைப் படைத்துக் கொள்கிறதென்றும் அதற்கு ஏதோ ஒரு நோக்கம் இருக்கிறதென்றும்மத வாதிகள் பேச முடியும்; தம்மைத் தாமே கொண்டாடிக் கொள்ள முடியும்; புத்தரும் கூட இப்படி ஒரு இறுதி நிலை பற்றிப் பேசினார்; அதை சூன்யம் என்றார்; நிர்வாணம் என்றார்; பேரறம் என்றார்; சூன்யம் என்பது பூஜ்யம்; ஒன்றுமற்ற ஒன்று; பூஜ்யத்திற்கும் ஒரு மதிப்புண்டு. அறவே மதிப்பில்லாத முழுமையான வெறுமை குறித்து மனிதனால் சிந்திக்க முடியாது. பூஜ்யம் என்பது மனிதனின் சிந்தனை; எல்லைக்குள் கண்ட ஒரு தர்க்கம். இப்படி ஒரு தர்க்கம் இல்லாது கணிதம் இயங்காது; அறிவியலோ வாழ்வோ இயங்காது. இதப் பேரறம் என்று சொன்னது ஒரு அற்புதம்.

    இப்படி எல்லாம் நாம் சொல்வதனால் உங்களை மறுக்கிறேன் என்று கருத வேண்டாம். உங்களுக்குள் இயங்கும் தேடுதலை மதிக்கிறேன், பாராட்டுகிறேன், புரிந்துகொள்கிறேன். இதை மேலும் ஒரு மதவாதம் என்று நான் சொல்ல மாட்டேன். ஒரு தீர்க்கதரிசி என்பவர் நிறுவன வடிவத்திலுள்ள மதத்தை எளிதாகக் கடந்து செல்பவர். மனித வாழ்வில் இருந்து எல்லா வகையான குறைகளையும் களைய முனைபவர் அருளாளர். இந்தளவுக்கு உங்களை நான் கொண்டாட முடியும். பிரபஞ்சம், உயிரியக்கம் குறித்து எத்தனையோ புதிர்கள். இவற்றைக் கருத்தில் கொண்டு நாம் இயங்க வேண்டும். என்றைக்கோ இந்தப் புதிர்களை அறிவியல் கண்டு தெளிவு படுத்தும் என்று சொல்லிக்கொண்டு இன்றே விடை கிடைத்துவிட்டதைப் போலவும் இன்றுள்ள எனது அறிவு கொண்டே இவை குறித்து என்னால் முடிவு கட்ட முடியும் என்பது போலவும் என்னால் சிந்திக்க முடியாது.

    அற்புதங்கள் நம்மைச் சூழ இன்றும் நிகழ்கின்றன. நாளை நடை பெறுவதை இன்றே சிலர் சொல்கிறார்கள். கைரேகை, ஜோதிடம், எண்சோதிடம் முதலியவற்றை முற்றாக ஒதுக்குவதற்கில்லை. நீங்கள் திரும்பத் திரும்பச் சொல்வதைப் போல இதுவரை மனித குலம் அறிந்தது குறைவு. அறியாதது அளவற்றது. ஒரு மனிதன் என்ற முறையில் என்னை நானே இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்குள்ளும் எத்தனையோ உணர்வுகள், இயக்கங்கள். படப்பியக்கம் என்பதைத் துல்லியமாக விளக்க முடியாது. ஒரு மனிதனுக்குள்ளேயே இவ்வளவு என்றால், உலக அளவில் 600 கோடி மனிதர்கள். உயிரினங்கள் எத்தனை கோடிகளோ! எல்லாவற்றினுள்ளும் எத்தனை இயக்கங்கள் / அதிர்வுகள். யார் இவற்றை அளவிட முடியும். இவை பற்றிய புரிதலோடுதான் நான் இங்கு இயங்க முடியும். என்னை நானே முற்றானவன் என்று கருத முடியாது. நிலவு மன நோயாளிகளை பாதிக்கிறது. சூரியனில் தொன்றும் கரும்புள்ளிகள் மனிதர்களைப் பாதிக்கின்றன. இதற்கு மேலும் ஆய்வாளர்கள் சொல்கின்றனர். நம்மை சூழ உள்ள பிரபஞ்சம் எத்தனையோ வகைகளில் நம்மைப் பாதிக்க முடியும். மார்க்சியம் முதலிய தத்துவங்கள் முன்வைக்கிற முற்றான நிர்ணயவாதத்தை நாம் ஏற்பதற்கில்லை.

  ஆதி தேடுகிற உங்கள் பெரும் முயற்சியை ஒரு அற்புதமான கதையாக்கத்தில் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். கதை சிறியது என்றாலும் மிக, மிக அழகான கதை; படப்பியக்கத்தின் பேராற்றலைக் கொண்டு இயங்குகிற கதை; ஆணும் பெண்ணும் இணைவதான இயக்கம்தான் இந்தப் பிரபஞ்சம் என்று திரும்பத் திரும்பச் சொல்கிற கதை; பிளவுபட்ட நிலையில் நேருவது எத்தனை பெரிய அவலம் என்று சொல்லுகிற கதை; நூறாயிரம் வண்ணங்களும் வடிவங்களும் கூடியும், குலவியும், பிரிந்தும், திரிந்தும் செல்கிற கதை. கவிதை மனநிலையின் உச்சங்களை எத்தனை முறை தொடுகிறீர்கள். உயிரின் ருசி, உயிரின் ருசி என்று ஓயாமல் பேசுகிறீர்கள். ஆதி புத்திரியின் கதை (எட்டாம் இயல் முதற்கொண்டு நடைபெறுகின்ற) ஒரு அருமையான கதை. ஆதி மரம் இவளோடு பேசுகிறது. ஓயாமல் ஒரு அழகிய ஓவியத்தைப் பல்வேறு மன நிலைகளில் இவள் பார்த்துப் பார்த்துப் பொருள் படுத்துகிறாள். அந்தக் குதிரையின் வேகம் சொற்களில் அடங்குவதாக இல்லை. கண்ணாடிக்குள் இவளும் இவளுக்குள் கண்ணாடியும் கரைந்து போகின்றன. கணவன் ஒரு மூடன் மற்றும் முரடன். இவன் இன்றைய உலகியலின் பிரதி. இவனது குரூரமான தீண்டலோடு இவளால் வாழ முடியாது. இவள் மீண்டும் அந்த ஆதி ஆணைச் சேர வேண்டும். அவன் இப்பொழுது எங்கிருக்கிறான்? இவளும் ஒரு படைபாளி. பல துறை அறிவில் தேர்ந்தவள். இவளது இயக்கம் குடும்பத்துக்குள் முடங்கிவிட முடியாது. ஒரு ஆணுக்கு சேவகம் செய்து இவள் தன்னை அழித்துக் கொள்ள முடியாது. பல திசைகளில் இவள் ஆற்றோலோடு பயணம் செய்ய வேண்டும்.

  உலகை இவள் புரட்டிப்போட வேண்டும். இதற்கு இவளுக்கு யார் கை கொடுப்பார்கள்.? கை கொடுக்க வேண்டும். இவளுக்குள் இயங்குவது ஆதி மனம். பிளவுகளோ, ஏறத் தாழ்வுகளோ, ஆதிக்கமோ, இடம் தராதது அந்த ஆதி மனம். பொருளுக்கும் அதிகாரத்திற்கும் இவள் இடம் தர மாட்டாள். அன்பில் இவள் கரைந்து போவாள். கலைகள் இல்லாமல் இவளால் வாழ முடியாது. உயிரியக்கத்தின் நூறு வகை வண்ணங்களும் வடிவங்களும் இவளுக்குத் தேவை. ஆசிரியர் என்னதான் மறுத்தாலும் இவளுக்குள் இயங்குபவள் ஒரு காளி / துர்க்கை. இவளின் துணையின்றி எந்தச் சிவனாலும் இயங்க முடியாது. ஆதி ஆணை இழந்த நிலையில் இவள் துடிக்கிறாள். புராணக் கதைகளில் சிவனால் தண்டிக்கப்பட்டுச் சிவனைப் பிரிந்த நிலையில் உலகில் பிறந்த பார்வதி தவம் செய்வதும் இறுதியில் சிவனைப் பெறுவதுமாகிய கதை நினைவுக்கு வருகிறது.

  மனிதர்கள் சில சந்தர்ப்பங்களில் மனத்தின் விளிம்பு நிலைக்குச் செல்கிறார்கள்.   கணவனை இழந்த பெண், தந்தையை இழந்த மகன், சாவை இப்படிச் சந்திக்கிற நிலையில் மனத்தின் விளிம்பு நிலையில் நாம் தவிக்கிறோம். மனம் முழு அளவில் விழித்துக் கொள்கிறது. வாழ்க்கை முழுவதுமே நமக்குள் ஒரு புள்ளியில் குவிகிறது. இந்தப் புள்ளியில் மனம் எத்தனை வேகத்தில் செயல்படுகிறது. எல்லாம் முடிந்த பிறகு மதுரை விட்டுக் கிளம்புகிற கண்ணகியின் மனத்தில் எத்தனை பெரிய புயல் அடித்திருக்கும். மாதவி, மணிமேகலை, குண்டலகேசி முதலியவர்களையும் அவர்களின் உச்ச நிலை அவலத்தோடு இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். உங்கள் கதையில் வரும் ஆதிபுத்திரி இத்தகையவள். ஒரு முறை மட்டுமே ஒலி நாடாக்களை கேட்ட அளவில் என் உணர்வுகளையும் கருத்துக்களையும் இங்கு தொகுத்திருக்கிறேன் இன்னும் ஒன்று, இரண்டு முறை நான் கேட்க வேண்டும். அங்கங்கே நிறுத்தி எனக்குள் மீண்டும் சிந்திக்க வேண்டும். ஒலி நாடாக்களை கேட்டு வரும்பொழுது எனக்குள் சில நினைவுகள். உங்களது தேடல், நீங்கள் என்னதான் மறுத்தாலும் மேலும் ஒரு மெய்யியல். எந்த ஒரு மெய்யியலும் சில தரவுகளில் / அடிப்படைகளின் மீதுதான் இயங்க முடியும். மீண்டும், மீண்டும் இந்த அடிப்படைகள் கேள்விக்குள்ளாகும்பொழுது இன்னொரு மெய்யியல் தோன்றும். இப்படித் தோன்றியது உங்கள் மெய்யியல். முன்பே நான் கூறியது போல பிளாட்டோ முதல் எத்தனையோ தீர்க்கதரிசிகள். இவர்கள் வரிசையில் நீங்களும் ஒருவர்.

   இந்திய மெய்யியலை இன்னும் நாம் ஆழமாக கற்க வேண்டும். உங்கள் சிந்தனைகளின் ஊடே பயணம் செய்யும்பொழுது ஐ டெக்கர் என் நினைவுக்கு வந்தார். இன்னும் சில மேற்கத்திய மெய்யியலாளர்கள். நீங்கள் தனியாக இல்லை. கவிஞருக்குள் எப்பொழுதும் மெய்யியலாளர் உண்டு. கவிதை தன் இயக்கத்தில், மெய்யியலில் கரைந்து போகும். தமிழகத்தில் படைப்பாளிகள் என்பவர்கள் மெய்யியலைத் தள்ளி வைக்கிறார்கள். தீண்ட மறுக்கிறார்கள். தன்னை நிறுவிக் கொள்வதிலேயே கவனம் வைத்திருக்கிறார்கள். தங்களுக்கு நிகராக இன்னொருவரை இவர்கள் வைத்துக் கொள்ளமாட்டார்கள். இவர்கள் பற்றி நாம் கவலைபட முடியாது.

"மீண்டும் ஆதியாகி" நாவல் . . .  நீலபத்மநாபன்

புது உபநிடதம்


ஒரு எழுத்தாளன் இவ்வளவு தூரம் தீவிரமாக ஒரு படைப்பை செய்கின்றபொழுது வாசகன் அதை படிக்கும் தன்மையைக் (Readability) கூட மீறி அதில் என்ன இருக்கிறது என்று வாசிக்கும் சிரமத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறவன் நான்.

எப்படிப் பார்த்தாலுமே இந்த நூல் ஒரு தனித்தன்மை வாய்ந்த நூல்.

ஒரே நேரத்தில் நிறைய தொடர் நாவல்கள் எல்லாம் எழுதும், ஜனரஞ்சக பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளர்கள் ஒரு பக்கம். அப்புறம் வணிக ரீதியில் எந்த விதமான நிர்ணய தயாரிப்புகளோ... தரக் கட்டுப்பாடோ இன்றி.... பெரிய விழாக்களாக, புத்தக சந்தையாக நடத்தி, புத்தகங்களை செலவழிக்கும் பிரபலங்கள் இன்னொரு புறம். இதனிடையில் இந்த நூலாசிரியர் தனித்தே நிற்கிறார்.

அதற்கு இரண்டு காரணங்கள் எனக்குத் தோன்றியது. ஒன்று, இதை எழுத வேண்டும் என்று அவர் இந்த நூலை எழுதவில்லை. மிகத் தீவிரமாக ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகாக இந்த நூலை ஆக்கியிருக்கிறார்.

இன்னொன்று..... ஒரு வகையான கதை, சரடு, பின்னல் இந்த நூலில் கிடையாது. கதையம்சத்தை என்னதான் அதற்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் எழுதப்படும் நூலிலிருந்துகூட எங்கிருந்தாவது கதையைக் கண்டுபிடித்து அதை சுருக்கமாக ஒரு பத்தியில் சொல்லி விமர்சனம், திறனாய்வு என்றெல்லாம் கூறிக் கொள்ளும் ஒரு உலகில், அவர்களுக்கெல்லாம் ஒரு சவால் போல, 'பார்ப்போம்.... கதையை நீங்கள் சொல்ல முடிகிறதா?' என்று கேட்கும் அளவிற்கு அவர் ஒரு தன்மையைச் செய்திருப்பாரோ என்று தோன்றும் அளவுக்கு இந்நூலை அவர் படைத்திருக்கிறார்.

இது இரண்டும் எனக்கு ஒரு புதுமையாகப்பட்டது.

மனித சிந்தனையில் இந்த மாதிரி மனித வாழ்க்கையைப் பற்றி, மனிதனின் இலட்சியத்தைப் பற்றி, அந்த இலட்சியத்தை அடைவதற்கான குறிக்கோள்கள் பற்றி எல்லாம் நமது முன்னோர்கள் நிறையவே சிந்தித்திருக்கிறார்கள். அதை யாருமே கேள்வி எழுப்ப முடியாது. அந்த சிந்தனையின் பலனாகத்தான் உபநிடதங்கள், உபநிஷத்து போன்றவை வந்தது என்பர். உபநிடத்து எடுத்துக்கொண்டால் வேதாந்தம் என்பார்கள். அறிவின் எல்லை. அதாவது உபநிடத உண்மைக்கு அப்பாற்பட்டு இன்னொரு உண்மை கிடையாது. அந்த அளவுக்கு தீவிரமாகச் செயல் பட்டிருந்தார்கள். அதனால்தான் வேதத்தின் எல்லை, அறிவின் கோடி அறிவின் எல்லை, என்ற முறையில் சொன்னார்கள். அதனால் பழனிசாமி அவர்கள் புது உபநிடதம் படைத்திருக்கிறார் என்று சொல்லலாம்.

அறியக்கூடிய புலனுக்கு அப்பாற்பட்ட பிரபஞ்சம், இங்கே வாழ விதிக்கப்பட்ட மனிதர்கள், மரணத்தை தழுவும் உயிர்கள், இவற்கள் இரண்டையும் படைத்த இறைவன், இந்த மூன்றையும் பற்றி சிந்தித்து இதன் செயல்பாடுகள் பற்றி வெளியுலகில் பார்த்து ஒரு முடிவை எடுக்க முடியாத சிந்தனையாளர்கள் உள்முகமாக சிந்தித்து செயல்பட்டதன் விளைவுதான் இந்த உபநிடதம்.

நித்தியமும் சத்தியமுமான இந்த ஒன்றைத் தேடும் லட்சியம்தான் படைப்பாளிகள், சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள் எல்லோருக்கும் இருந்திருக்கிறது. இந்த நூலில் அந்த ரீதியில்தான் இவர் செயல்பட்டிருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது.

இந்த நாவலை எடுத்துக் கொண்டால் அதன் அத்தியாயங்களை நீண்ட கதை, நெடுங்கதை என்று குறிப்பிட்டு பரஸ்பரம் இணைக்கும் கண்ணி, சரடு எதுவென்று தேடுவதை வாசகர்களுக்கு விட்டுவிடுகிறார் என்று தொன்றுகிறது. இதை இணைக்கும் கோடு எதுவென்று நீங்களே சொல்லுங்கள் என்று குறிப்பிடுகிறார் என்று எனக்குத் தோன்றுகிறது.

எவ்வாறு பார்த்தாலும், இந்த மாதிரி ஒரு நாவல்,  நிறைய நாவல்கள் ஒரு காலத்தில் இத்தகையான சீரியசான, சீரிய எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டுஎழுதின நாவல் வரவேற்கத்தக்கதுதான்.      

No comments:

Post a Comment